நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர், ஜூலை 27ம் தேதியும், டீசர் ஜூலை 28 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநரான அவெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் பெயரிடப்பட்டுள்ள இப்படம், இரண்டு (தமிழ், தெலுங்கு) மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், 2018ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தீவண்டி படம் மூலம் கவனம் ஈர்த்தார். தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷுடன் வாத்தி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, சமீபத்தில் சூரரைப்போற்று படத்துக்காக பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் ஆசிரியராக நடிப்பதுடன், கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பதாக கதை பின்னப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் உள்ள படத்தைப் பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் வெயிட்டான பாடல் ஒன்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ், இன்று (ஜூலை 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் முதல் போஸ்டர் ஜூலை 27ஆம் தேதியும், டீஸர் ஜூலை 28ஆம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்