நடிகர் தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக 2017 ஆம் ஆண்டு பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி நடித்து வந்தார். நிதி பிரச்சினை காரணமாக அந்தப்படத்தின் படப்பிடிப்பை தொடர முடியாமல் முடங்கியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஐந்து கோடி ரூபாய் முன் தொகை வாங்கியிருந்தார் நடிகர் தனுஷ். இரண்டு படங்களிலும் நடிப்பதை தவிர்த்து வந்தார் தனுஷ். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக திரையுலகில் உள்ள சங்கங்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் எதிர்வரும் காலங்களில் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன்விளைவாக தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் உருவானது. இதனால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
நடிகர் சங்கத்திற்கு நன்றி!
படப்பிடிப்பை தொடர அனுமதிக்குமாறு நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் தனுஷ் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நன்றி தெரிவித்து தனுஷ் நடிகர் சங்கத்திற்கு கடிதமும் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், “எனது தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் கதிரேசன் எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக நாசர், கார்த்தி, விஷால், கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.” என தெரிவித்திருந்தார்.
முரளிக்கு 15 கோடி, கதிரேசனுக்கு 8 கோடி!
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு ரூபாய் பதினைந்து கோடியும், ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கு ரூபாய் எட்டு கோடியும் தருவதாக தனுஷ் ஒப்புக்கொண்டாராம்.
இதனை இருவரும் ஏற்றுக் கொண்டதால் பல வருடங்களாக நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டுகளில் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் 10 கோடிகளுக்கும் குறைவு. தற்போது ஒரு படத்தில் நடிக்க தனுஷ் 30 முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். இரண்டு படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுப்பதை காட்டிலும் ஒரு படத்தின் சம்பளத்தை இருவருக்கும் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கிறார் தனுஷ் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ஸ்டாலினிடம் புள்ளி விவரத்துடன் திருமாவளவன் வைத்த 4 முக்கிய கோரிக்கைகள்!
”உங்ககிட்ட வாய் மட்டும்தான் இருக்கிறது” பாக். வீரர்கள் மீது யூனிஸ்கான் பாய்ச்சல்!