தனுஷ் நடிப்பில் தமிழில் வெளிவந்த 3 படம் இன்று (செப்டம்பர் 8) அண்டை மாநிலங்களில் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி 3 படம் தமிழ் மற்றும் இந்தியில் உலகம் முழுவது 1250 திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்தாலும் தற்போது வரை தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இதற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையும், தனுஷ் தன் சொந்த குரலில் ”ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடலை பாடியதும் ஒரு முக்கிய காரணமாகும்.
மேலும், இத்திரைப்படம் 2-வது தென்னிந்தியச் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பாடலாசிரியர் என்று மூன்று விருதுகளைப் பெற்றது.
மேலும் சிறந்த நடிகை, இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆசியவிஷன் விருதுகள், 60-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள், விஜய் விருதுகளையும் பல பிரிவுகளின் கீழ் வென்றது.
தமிழில் வெற்றியைக் கண்ட இத்திரைப்படம் இன்று அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் ரசிகர்களின் வரவேற்பையும் கொண்டாட்டத்தையும் பெற்ற இப்படம் அண்டை மாநிலங்களிலும் வரவேற்பு பெற்றுள்ளது.
காலை முதலே அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் புக்கிங் இணையத்தில் வேகமாக நிரம்பி வருகிறது.
ரசிகர்களும் திரையரங்குகளில் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து அண்டை மாநில திரையரங்க உரிமையாளர்கள் “தனுஷின் 3 படம் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் பெரும்பாலான காட்சிகள் நிரம்பிவிட்டன. டிக்கெட் முன்பதிவு மட்டுமே ரிலீசுக்கு முன்பே 30 சதவீதம் நிரம்பிய நிலையில் 12 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
7 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் தனுஷ் – அனிருத்