ரூ.100 கோடி சாதனை : தடை பல கடந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்!

சினிமா


ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் நடித்த படங்களை தயாரித்து வெளியிட்ட சன் பிக்சர்ஸ், முதன்முதலாக முதலீட்டு அளவில் இவர்கள் நடித்த படங்கள் மூலம் கிடைக்காத வசூல் சாதனையை திருச்சிற்றம்பலம் படம் மூலம் நிகழ்த்தியுள்ளது.

திருச்சிற்றம்பலத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி ரூபாய். இந்த பணத்தை முதல் நான்கு நாட்களில் தியேட்டர் மூலம் வசூல் செய்திருப்பது இந்த படத்தில் தான்.

அதிலும், குறைவான திரையரங்குகளில் வெளியிட்டு இந்த வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா நடிப்பில் ஆகஸ்ட் 18 அன்று வெளியான படம் திருச்சிற்றம்பலம்.

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவகர்.

கடந்த சில ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷுடன் இணைந்த படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் கதையை தனுஷ் எழுதினார்.
தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இதுதவிர தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்து இருந்தார். கர்ணன் படத்திற்கு பின் தனுஷ் நடித்த படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை. ஜகமே தந்திரம், மாறன், மற்றும் இந்தியில் இவர் நடித்த அட்ராங்கி ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வணிக ரீதியாகவும், படைப்புரீதியாகவும் தனுஷுக்கு தோல்வியை தந்தன.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் தனுஷ் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக மாறியது. படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்து வெளியிட ஆர்வம் காட்டவில்லை.

தனுஷ் திருமண வாழ்க்கை முறிவு, அவர் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து வந்த எதிர்மறையான விமர்சனங்களால் பெண்கள் ஆதரவு இருக்குமா, குடும்பங்கள் படம் பார்க்க வருவார்களா என கேள்விகள் எழுந்து வந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை வெளியிடவும், அதற்கான புரமோஷன் நடவடிக்கைகளிலும் தனுஷ் நேரடியாக கவனம் செலுத்தினார்.

ஏற்கனவே ஆகஸ்ட் 12 அன்று வெளியான விருமன் 465 திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டிருந்தது.

இரண்டாவது வாரமும் அந்த நிலை தொடரக்கூடும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் திருச்சிற்றம்பலம் 350 திரைகளில் வெளியானது.

யாரும் எதிர்பாராத, கணிக்க முடியாத வகையில் முதல் நாள்9.50 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனதுடன் தொடர்ந்து தினம்தோறும் வசூல் அதிகரித்து வந்தது.

நடிகர் தனுஷின் திரையுலகில் அதிவேகமாக முதல் நான்கே நாட்களில் 50 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் நிகழ்த்தியது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விருமன் படம் இரண்டு வாரங்களில் செய்த 50 கோடி ரூபாய் வசூலை முதல் நான்கு நாட்களில் கடந்த திருச்சிற்றம்பலம் முதல் வார முடிவில் 70 கோடி ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து திரையரங்கு உரிமையாளர்களையும், படத்தின் மீது நம்பிக்கையற்று இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் வாரம் திரையிட்ட திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் திருச்சிற்றம்பலம் தொடர்வதால் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை திரையரங்க வசூல் மூலம் மட்டும் இப்படம் நிகழ்த்தும்.

இராமானுஜம்

+1
2
+1
7
+1
1
+1
33
+1
0
+1
9
+1
3

Leave a Reply

Your email address will not be published.