பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் மாமன்னன்.
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஜூன் 29 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
அப்போது அந்த விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ”’மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான். ’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை. ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம்.
இதை எப்படி புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா? தவறா? என்று புரியாமல் அப்படி ஒரு வலி. இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.
நான் ‘பரியேறும் பெருமாள்’ எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுதான் எடுத்தேன். ‘கர்ணன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன்.
வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” என்று குறிப்பிட்டார் மாரி செல்வராஜ்.

இதையடுத்து மாரி செல்வராஜ் குறித்தும் தேவர் மகன் திரைப்படம் குறித்தும் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், galatta plus யூடியூப் சேனலில் இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் நேற்று(ஜூன் 23) விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ மாமன்னன் திரைப்படத்தின் கதை இப்போது வந்ததல்ல. அது ரொம்ப நாட்களாக என்னுடைய மனதில் ஊறிக்கிடந்தது. உதய் சார் என்னிடம் கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டபோது…என்னிடம் ஒரு லைன் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பிடிக்காது என்று நான் சொல்லி விட்டேன். ஆனால் என் கதையை கேட்டு விட்டு உதய் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டார்.
என்னிடம் இருக்கின்ற வலி தான் என்னை எழுத வைக்கிறது. இயக்க வைக்கிறது. சிறு வயதில் நான் பட்ட வலிகள் அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பது தான் என்னுடைய பெரிய இலக்காக இருந்தது.
நான் சில விசயங்களை வெளியில் சொன்னால் நம்மை அருவருப்பாக நினைப்பார்கள், கேவலமாக பார்ப்பார்கள் என்று நினைத்த காலம் எல்லாம் உண்டு. ஆனால், நான் இலக்கிய வட்டத்திற்குள் வந்த பிறகு தான் தெரிந்தது இது எல்லாம் இழிவு இல்லை இது தான் கலை, இதை திரைக்கதையாய் மாற்று என்ற எண்ணம் வந்தது. சினிமாவில் மற்ற விசயங்களை இயக்குவதற்கு எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்கள்.
மனதில் இவ்வளவு வலியை வைத்துகொண்டு அதை ஏன் கலையாக நாம் மாற்றக்கூடது என்று எனக்கு அப்போது தான் தோன்றியது.

நான் நினைத்ததை பேசும் இடத்திற்கு வந்து விட்டதாக சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. ஆனால் நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை. எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல் என்னுடைய எமோஷன். ஆனால் அது உள்வாங்கப்பட்டிருக்க கூடிய விதம் வேறு மாதிரியாக இருக்கிறது.
வேறு ஒரு பிரச்சினை என்றால் ஈஸியாக பேசிவிட முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சினை என்பதால்தான் பேச முடியவில்லை. இதே வேறு ஒரு சினிமாட்டிக்கான பிரச்சினை என்றால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்காது.
அவர் மூத்த ஒரு சினிமா கலைஞர், சினிமாவின் அடையாளம் கமல் சார் என்ற உரிமையோடு நான் பேசியது என்பது மிகவும் எமோஷனலான தருணம்.
இது என்னுடைய வாழ்க்கையின் சாதனை. அதனை அவர் ஏற்றுக்கொள்வதும் அதற்கு அவர் பதில் கொடுப்பதும் அது பெரிய விஷயம்.
ஆனால் இத்தனை வருடம் ஆன பிறகும் கூட, நான் இரண்டு படங்கள் எடுத்தபிறகும் கூட, கமல்சார் படத்தை பார்த்து எனக்கு ஆதரவாக பேசிய போதும் கூட வெளியில் இப்படியான பேச்சுக்கள் எழுவது எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது.
சினிமாவில் 15 வருடம் கஷ்டப்பட்ட எனக்கு கமல்சார் யாரென்று தெரியாதா? கமல்சார் எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று தெரியாதா? ஆனால் என்னுடைய எமோஷன் உண்மைதானே. 14 வருடத்திற்கு முன்னால் நான் பட்ட ஏக்கத்தை இப்போது மாற்ற முடியாதல்லவா? நான் சென்னை வந்த புதிதில் கடிதம்கூட எழுதியிருக்கிறேன். அது அப்போதைய மனநிலை.

தற்போது நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படித்திருக்கிறேன். இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் உணர்ச்சியில் பேசியதுதான். என்னுடைய நியாயத்தை கமல்சார் புரிந்து கொண்டார். மாமன்னன் படத்தினை கமல் சார் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
மேடையிலும் இது மாரி செல்வராஜ் அரசியல் அல்ல, நமது அரசியல் என பேசியது போதுமானதாக இருக்கிறது. எனக்கு வெற்றி பெற்றமாதிரி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் புதிதாக ஒரு படத்தை எடுக்கும் போதும் எனக்கு இன்னும் வலி அதிகம் ஆகிறது” என்று மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாயும் ஒளி நீ எனக்கு – விமர்சனம்!
மேல் வரி குறைப்பு: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு!