சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவுள்ளது.
சுந்தரம் பிள்ளை என்பவரால் கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட தியேட்டர்களில் முதன்மையானது. அதே ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவப்பு சூரியன் என்ற படம்தான் இந்த தியேட்டரில் முதன் முதலாக திரையிடப்பட்டது.
உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரையரங்கங்கள் ஒரே காம்ப்ளக்சில் இருந்தன. பிறகு, உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு தியேட்டர் அமைக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் இந்த தியேட்டரில் கடைசியாக திரையிடப்பட்டது. ஆக , ரஜினிகாந்த் படத்தோடு தொடங்கி அவரின் படத்துடனே உதயம் அஸ்தமனமாகியுள்ளது.
காதலர்கள், தம்பதிகள் என பலருக்கும் இந்த தியேட்டரின் நினைவுகள் கண்டிப்பாக நிரம்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புது மனைவியை திருமணம் செய்து கிராமத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் இளைஞர்கள் உதயம் தியேட்டருக்குதான் முதன் முதலில் படம் பார்க்க அந்த காலத்தில் ஆசைப்படுவார்கள். அந்தளவுக்கு சென்னை மக்களோடு பிணைப்பு கொண்டது இந்த தியேட்டர்.
1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. இவர்கள் நடித்த பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டன. சென்னையில் நல்ல வசூல் கிடைக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் கருதப்பட்டது.
சென்னையில் மல்டிப்ளெக்ஸ் வரத் தொடங்கியதும் உதயம் போன்ற தியேட்டர்களுக்கு மவுசு குறைய தொடங்கியது. கடைசியில் 40 ஆண்டுகளாக சென்னை மக்களுடன் வாழ்ந்த உதயம் தியேட்டருக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“அதிமுக ஆட்சியில் எப்.ஐ.ஆரை மாற்றி எழுதினர்” : கனிமொழி குற்றச்சாட்டு!
‘ என் அப்பா இறந்தப்போ, காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் ‘ – பிரணாப் மகள் ஆதங்கம்!