விமர்சனம்: தெய்வ மச்சான்!

Published On:

| By Kavi

’நீங்க வெறும் மச்சான் இல்ல தெய்வ மச்சான்’ என்ற வசனம், கே.எஸ்.ரவிக்குமாரின் ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்த படத்தின் பின்பாதியில், ’தெனாலி ‘ பாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் ஜெயராமைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வசனத்தைப் பேசுவார். இத்தனைக்கும் மனநலப் பிரச்சனைக்காகத் தன்னைத் தேடி வரும் தெனாலிக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மனநல மருத்துவராக ஜெயராம் அந்த படத்தில் நடித்திருப்பார். அந்த காமெடி கலாட்டாவை நினைவில் பொதித்தவர்களுக்கு, ‘தெய்வ மச்சான்’ எனும் வார்த்தை தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கம்.

அதனாலேயே விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத் உள்ளிட்டோர் நடித்த ‘தெய்வ மச்சான்’ படம் மீது அதீத ஈர்ப்பு உண்டானது. படம் பார்த்தபிறகு, அது மிகுந்ததா, குறைந்ததா?

மச்சான் ஆன கதை!

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் தபால் கார்த்தி (விமல்). அவரது பெயரில் உள்ள ‘தபால்’ என்ற வார்த்தை எதனால் வந்தது என்பதைச் சக மனிதர்களிடம் சொல்லிச் சிலாகிப்பதே அவரது தந்தையின் (பாண்டியராஜன்) பணி.

கார்த்திக்கு ஒரு சகோதரர். அவர் மனைவி, ஒரு மகன், மகள் என்றிருக்கிறார். சகோதரியின் பெயர் தேன்மொழி (அனிதா சம்பத்). அவரைப் பெண் பார்க்க வருபவர்கள், ஏதேதோ காரணங்களால் விலகிச் செல்கின்றனர். அதனால், ‘ராசியில்லாத பெண்’ எனும் முத்திரை தங்கள் வீட்டுப் பெண் மீது விழுமோ என்று அக்குடும்பமே அச்சப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு ஜமீன்தார் குடும்பம் தேன்மொழியைப் பார்க்க வருகிறது. மாப்பிள்ளைக்கு வயது அதிகம் என்பதால், கார்த்தி அவர்களை விரட்டியடிக்கிறார். அதன் காரணமாக, ஜமீன்தாரும் அவரது சகோதரரும் வன்மம் கொள்கின்றனர். தேன்மொழியை யாரும் திருமணம் செய்துவிடாதபடி இடையூறுகளைத் தருகின்றனர்.

அவர்களது சதியையும் மீறி, ஒரு குடும்பம் திருமணத்திற்கு சம்மதிக்கிறது. பல தடைகளுக்குப் பிறகு திருமணமும் நடந்து முடிகிறது.

ஆனால், கார்த்திக்கு அந்த திருமணத்தில் சம்மதம் இல்லை. காரணம், ஒரு கனவு.

எப்போதாவது கார்த்திக்கு கனவு வரும். அந்த கனவில் சாட்டையை காற்றில் வீசிக்கொண்டு ஒரு மர்ம நபர் (வேல.ராமமூர்த்தி) குதிரையில் வருவார். இந்த நபர்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கார்த்திக்கு தெரிந்தவர்களின் பெயரைச் சொல்வார். அது உண்மையாகிவிடும்.

அப்படித்தான், ’உன் தங்கச்சி புருஷன் மச்சான் ரெண்டு நாள்ல செத்துடுவான்’ என்கிறார் அந்த சாட்டைக்காரர். அதன்பிறகு, தன் மச்சான் உயிரைக் காப்பாற்ற கார்த்தி செய்யும் வேலைகள் பலனளிக்கிறதா இல்லையா என்பதுவே மீதி.

இதுவே, கதையில் நாயகன் தன் தங்கையின் கணவருக்கு ‘தெய்வ மச்சான்’ ஆன கதை.

கர்நாடகமா இருக்கே..!

திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைத் திரையில் பார்க்கும்போது ‘க்ளிஷே’ என்று விமர்சிப்போம். ஆனால், சில படைப்பாளிகளுக்கு அப்படிப் படைப்பதே மிகவும் பிடிக்கும். அதேபோல, சில ரசிகர்களும் உண்டு.

சினிமா தவிர்த்த பல விஷயங்களில் அரதப்பழசான விஷயங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் தரும்போது, ‘சுத்த கர்நாடகம்’ என்று பிறர் விமர்சிப்பார்கள். அப்படி விமர்சனத்திற்கு ஆளாகும் நபர்களே, ‘தெய்வ மச்சான்’ கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள்.

கதை தான் பழையது என்றால், அதைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அதைவிடப் பழமையானதாக உள்ளது. அது தெரிந்தும் இப்படத்தில் நடித்த கலைஞர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

‘தபால் கார்த்தி என்ற பெயர் எப்படி வந்தது’ என்று பாண்டியராஜன் நேகா ஜாவுக்கு விளக்கும் காட்சி அதற்கான உதாரணம். அது போதாதென்று மூட நம்பிக்கையா இல்லையா என்பது குறித்த எவ்வித விளக்கங்களும் இல்லாமல் சில விஷயங்கள் இக்கதையில் நிரப்பப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்பில் ஒருவர் கூட அவற்றை இயக்குனரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்ற கேள்வியே நம் மனதை அரிக்கிறது.

’இந்த கதைக்கு இது போதும்’ என்று திரையில் கொஞ்சமாகவும், டப்பிங்கில் கொஞ்சமாகவும் வெளிப்படுத்தி சமாளித்திருக்கிறார் விமல். இவரா பசங்க படத்துல நடிச்சது என்று சொல்லும்படியாகவே, அவரது இருப்பு இதில் உள்ளது.

பாண்டியராஜனுக்கு முதுமை வந்துவிட்டது என்பதை அவரது குரலும் உடல்மொழியும் காட்டுகிறது. வேல.ராமமூர்த்திக்கு ஒரேயொரு காட்சி தான். அந்த காட்சியைப் படமாக்க அரைமணி நேரம் ஆகியிருந்தாலே அதிகம்.

செய்தி வாசிப்பாளராகவும் பிக்பாஸ் போட்டியாளராகவும் அறியப்பட்ட அனிதா சம்பத்துக்கு விசிறிகள் அதிகம். ஆனால் அவர்கள் கொண்டாடும்படியாக இப்படம் அமையவில்லை.

அனிதாவின் ஜோடியாக வரும் வத்சன் வீரமணியும் நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்றவாறு, ஒரு காட்சி கூட கிடைக்காதது சோகம். அவரது தங்கையாக நடித்த நேகா ஜா ஒரு பொம்மை போல அங்குமிங்கும் நடமாடியிருக்கிறார்.

தீபா சங்கர் – கிச்சா ரவி ஜோடி சிரிக்க வைக்கும் என்று நினைத்தால், நம்மைக் கடுப்பேற்றி கொலை வெறிக்கு உட்படுத்துகிறது.

இவர்கள் தவிர்த்து ஆடுகளம் நரேன், அவரது தம்பியாக நடித்தவர், அவர்களது கையாட்களாக நடித்தவர்களைத் தாண்டி ‘பங்காளி.. பங்காளி..’ என்று வசனம் பேசும் பால சரவணனே மொத்த வசனத்தில் பாதியைப் பேசித் தீர்க்கிறார். அவரது நடிப்பு செயற்கையாகத் தெரியவில்லை என்பது நல்ல விஷயம்.

கேமில் அலெக்ஸின் ஒளிப்பதிவு, முழுக்கவே நடிகர் நடிகைகளின் குளோஸ் அப் ஷாட்களில் கவனம் செலுத்தியிருக்கிறது. ‘போதும்.. இதுக்கு மேல கிட்ட போனா அழுதுருவேன்’ என்று நம்மைக் கதறச் செய்திருக்கிறது அவரது பங்களிப்பு.

பின்னணி இசையில் தோல் கருவிகளை உருட்டிவிட்டு ‘கூஸ்பம்ஸ்’ ஆக்க முயற்சித்திருக்கிறார் அஜீஸ். பாடல்கள் தந்த காட்வின் ரொம்பவே நம்மைச் சோதித்திருக்கிறார்.

இந்த படத்தின் பெரிய வில்லன் படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா தான். இடைவேளைக்குப் பிறகு நெளிந்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள், அதற்குமேல் இருக்கையின் மீது எழுந்து நிற்கும் அளவுக்கு இருக்கிறது அவரது பணி. குறைந்தபட்சமாக, காட்சிகளின் அளவையாவது அவர் குறைத்திருக்கலாம்.

செந்தில் டென்ஷன் ஆக்கும்போது, ஆத்திரத்தின் உச்சத்தில் எதுவும் செய்ய முடியாமல் கவுண்டமணி திணறுவாரே, படம் பார்க்கும் நம் நிலைமையும் அது போலாகிறது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் நம் கோபம் திரும்புகிறது; அவ்வேளையில், ‘அவங்க மேல எந்த தப்பும் இல்ல’ என்பது போல நம் கண்ணில் படுகிறது இயக்குனரின் பெயர்.  

எதுக்கு இந்த பேரு?

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார், இப்படியொரு கதையை யோசித்திருப்பதில் எந்த தவறும் இல்லை. சீரியல் பாணியில் கூட இந்த படத்தை எடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டிருப்பது தயாரிப்பாளருக்குப் பொருட்செலவை ஏற்படுத்தியிருக்கிறது.

நகைச்சுவையில் மிக முக்கியமான அம்சம் ‘டைமிங்’. நகைச்சுவையூட்டும் வசனமொன்றைப் பேசிவிட்டு அல்லது ரியாக்‌ஷன் தந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட வேண்டும். ‘ஜோக் அடிச்சிருக்கேன் நல்லாயிருக்கான்னு பாருங்க’ என்று ஒவ்வொரு பாத்திரமும் பார்வையாளர்களின் முகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மார்ட்டின் நிர்மல் குமார் அந்த வேலையைச் செய்ய வைத்திருக்கிறார்.

இயக்குனர் சசியின் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ மாமன் – மச்சான் உறவைத்தான் முன்னிலைப்படுத்தியது. ‘ரன்’ படத்தில் இருந்து அந்த விஷயம் எடுத்தாளப்பட்டிருந்தது. அதேபோல, ‘தெனாலி’யில் இருந்து ‘தெய்வ மச்சான்’ என்ற வார்த்தை பிரயோகத்தை எடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே இந்த படம் எப்படியெல்லாம் அசத்தியிருக்க வேண்டும்?

அந்த எதிர்பார்ப்பை சுக்கல் சுக்கலாக்கி இருக்கிறது ‘தெய்வ மச்சான்’. தொழில்நுட்ப ரீதியான பலம் கூடத் தேவையில்லை; குறைந்தபட்சமாக, சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை என்பது ‘தெய்வ மச்சான்’ படத்தை நாம் புறக்கணிக்கக் காரணமாகியிருக்கிறது.  

உதய் பாடகலிங்கம்

12 மணி நேர வேலை: கலைஞர் சொன்னதை மீறிய ஸ்டாலின்

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share