தீபிகா படுகோனே… இன்று காலை முதல் இவரது புகைப்படமும், பேரும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன கங்கனா ரணாவத் தொடங்கி பல மொழி நடிகைகளும் தீபிகாவின் புகைப்படத்தை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
நடிகை ஆலியா பட், “இந்தியாவை பெருமைபடுத்திய அழகி” என்று வர்ணித்துள்ளார். நடிகை சமந்தா, இதய இமோஜிக்களை பகிர்ந்து, ‘டெத்’ என பதிவிட்டுள்ளார். கரண் ஜோகர், “கருணையான ஆளுமை” என தீபிகாவை குறிப்பிட்டுள்ளார்.
கங்கணா ராணாவத், “இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா சாட்சி… தலை நிமிர்ந்து நிற்கிறார்… எவ்வளவு அழகாக இருக்கிறார்” என பாராட்டியுள்ளார்.
தீபிகாவுக்கு இவ்வளவு பாராட்டுகள் குவிய காரணம், லாஸ் ஏஞ்சல்ஸ், டால்பி திரையரங்கில் மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற 95ஆவது ஆஸ்கர் விருதில் கலந்துகொண்டதுதான்.
ஆஸ்கர் விழாவில் விருதுகளை தொகுத்து வழங்குபவர்களில் ஒருவராக தீபிகா படுகோன் அழைக்கப்பட்டார். அதன்படி லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற தீபிகா, இந்திய பிரிவில் தேர்வான “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கருக்கு தேர்வானதை அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது கருப்பு லூயிஸ் உய்ட்டன் பால்கவுன் மற்றும் கார்டியர் பிராண்ட்டின் வைர நகையை அணிந்து வந்த தீபிகா, நாட்டு நாட்டு பாடலை அறிமுகம் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது. விழா அரங்கில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

கருப்பு கவுனை தொடர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து தீபிகா எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்மிண்டன் டூ மாடல் அழகி, நடிகை
1986ல் பிறந்த தீபிகா இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக தீபிகா, ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் ரூ.1000 கோடியை கடந்து வசூலை குவித்தது.
தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் பயிற்சியாளர் மற்றும் வீரர் ஆவார். இதனால் சிறுவயதில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட தீபிகா தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார். அதேசமயம் தனது 8 வயதில் இருந்தே மாடலாகவும் இருந்து வந்தார். எட்டு வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு பிறகு விளையாட்டில் இருந்து தனது கவனத்தை மாற்றி முழு நேரமும் மாடல் அழகி பாதையில் பயணிக்க தொடங்கினார்.
முழு நேரமும் மாடலாக தன் தொழில் வாழ்க்கையை தொடங்கிய தீபிகா முதலில் லிரில் சோப்புக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.
இந்நிலையில் தான் 2007ல் ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், கோச்சடையான், பதான் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார் தீபிகா.
உலகளவில் செல்வாக்கு
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் கொண்ட டைம் பத்திரிகை பட்டியலில் தீபிகாவும் இடை பெற்றிருந்தார். மூன்று பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
காதல் காட்சியிலும் சரி, அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் சரி அந்த கதாப்பாத்திரத்துக்கு அப்படியே பொருந்திக்கொள்ளும் தீபிகா, நடிகையாக மட்டுமல்ல பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பல சர்வதேச பிராண்டுகளுக்கான தூதராக தீபிகா படுகோனே இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டிற்கான பிரபல பிராண்ட் மதிப்பீடு குறித்த டஃப் மற்றும் ஃபெல்ப்ஸின் டிஜிட்டல் ஆக்சிலரேஷன் 2.0 அறிக்கையின்படி, முதல் பத்து பிராண்ட் பிரபலங்களின் பட்டியலில் படுகோன் ஏழாவது இடத்தைப் பிடித்தார். அவருடைய பிராண்ட் வேல்யூ 51.6 மில்லியன் டாலர் ஆகும்.
லூயிஸ் உய்ட்டனின் ப்ராண்டின் உலகளாவிய தூதராக உள்ளார். 2022ஆம் ஆண்டு கார்டியர் நிறுவனம் அதன் உலகளாவிய முகமாக தீபிகாவை ஒப்பந்தம் செய்தது.
கத்தார் ஏர்வேஸ் தீபிகா படுகோனை தனது நிறுவன தூதராக ஒப்பந்தம் செய்தது. French luxury fashion house-ன் உலகளாவிய பிராண்ட் தூதராகவும் தீபிகா உள்ளார்.
இந்திய விளம்பரத் துறையில், ஏசியன் பெயிண்ட்ஸ், அடிடாஸ், லாயிட், ஜியோ, பெப்சி, ஜாக்வார், நெஸ்லே, லோரியல் பாரிஸ், ஒப்போ, டாபர், டிஸ்ஸாட், தனிஷ்க், பிரிட்டானியா உள்ளிட்ட பிராண்டுகளுக்கு தூதுவராகவும், ஒப்புதல் அளிப்பவராகவும் தீபிகா உள்ளார்.
இந்தியளவிலும் உலகளவிலும் இவ்வளவு பிராண்டுகளுக்கு தூதராக இருக்கு தீபிகா 82°E என்ற அழகு பொருட்கள் சார்ந்த தனது சொந்த பிராண்டையும் நடத்தி வருகிறார். 82°E என தனது காது அருகில் தீபிகா டேட்டூ போட்டுள்ளார். 95ஆவது ஆஸ்கர் விழாவில் இந்த டேட்டூ தெரியும்படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

இளம் வயதில் இவ்வளவு வேகமாக வளர்ச்சி பெற்ற தீபிகா 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு கேன்ஸ் நடுவர் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். லைவ், லவ், லாஃப் என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் தீபிகா மனநலன் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இப்படி உலக அளவில் கவனம் பெற்ற இந்திய நடிகையான தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுத்து ஆஸ்கர் மேடையில் ஏற்றியுள்ளது ஆஸ்கர் அகாடமி நிர்வாகம். இந்திய பிரபலங்கள் ஆஸ்கர் விருது வாங்குவதே அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில் தீபிகாவுக்கு இப்படி ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளது.
அந்த மேடையிலும் தன்னை தனித்துவமாக காட்டி தற்போது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்து வருகிறார்.
பிரியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!
அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!