பிரச்சினையை கிளப்பிய தீபிகா படுகோனின் பிகினி உடையால், தயாரிப்பு நிறுவனம்தான் கஷ்டத்தில் உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பதான்’ படத்தின் முதல் பாடலான ‘பேஷாராம் ரங்’ என்ற முதல் பாடல் சில நாள்களுக்கு முன்பு வெளியானது.
அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ள ’பதான்’ படம், இந்தப் பாடல் மூலம் இப்போதே சர்ச்சையில் சிக்கி உள்ளது.
காரணம், அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக நடித்திருப்பதும், மறுபுறம், அவர் அணிந்திருக்கும் காவி நிற உடையுமே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த படத்துக்காக, தீபிகா படுகோனே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாகவும், இப்படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தைவிட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அவர் ‘பத்மாவதி’ என்ற புராணக் கதை படத்தில் நடித்தபோது, ராஜபுத்திர வம்சத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்வகையில் இருப்பதாக கூறி, அப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு கண்டனம் தெரிவித்த தீபிகாவுக்கு எதிர்ப்பாளர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவரான மகிபால் சிங் மக்ரானா, “ஆத்திரமூட்டும் வகையில் பேசுவதை கைவிடாவிட்டால், ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததுபோல், தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம்” என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனால் தீபிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இது எல்லாம் தனிக்கதை என்றாலும், இவர் தற்போது ’பதான்’ படத்தில் அணிந்து நடித்திருக்கும் காவி நிற உடையால் மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.
’துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் காவி நிறத்தை, கவர்ச்சியான நிறமாகக் காட்டி அவமதித்துள்ளார்கள்’ என்பதும், ’தீபிகா அணிந்துள்ள உடையின் நிறம், இந்து மதத்தின் தெய்வீக நிறத்தைக் கேலி செய்கிறது’ என்பதுமே பாஜக, ராஷ்ட்ரிய சேவிகா சமிதி மற்றும் இந்துத்துவா உள்ளிட்ட அமைப்புகளின் விமர்சனமாக இருக்கிறது. இதனாலேயே அவர்கள் அப்படத்துக்கு எதிராக ஹேஸ்டேக்குகளை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீர சிவாஜி குரூப்பை சேர்ந்தவர்கள் ஷாருக்கான் மற்றும் படத்தின் நாயகி தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இந்து மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால், ‘பதான்’ படத்தை தடை செய்வது குறித்து மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் ’பதான்’ படம் குறித்து பேசிய மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ” ‘பதான்’ படத்தின் பாடலில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேயின் ஆடை முகத்தை சுளிக்கும் வகையில் இருக்கிறது.
இதனை சரி செய்யவேண்டும். ஆட்சேபனைக்குரிய பகுதியை நீக்கவேண்டும். அப்படி சரி செய்யவில்லையெனில் படத்தை தடை செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும்” என்று தெரிவித்தார்.
இதேபோன்று சமஸ்கிருத பச்சோ மஞ்ச் தலைவர் சந்திரசேகர் திவாரியும், இந்து மகா சபைத் தலைவர் சக்ரபாணி மகராஜும் ’பதான்’ படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள காவி நிறத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ’இந்துக்களை அவமதிக்கும் இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்’ என, ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், விஎச்பி தலைவருமான டாக்டர் பிராச்சி சாத்வியும் ட்வீட் செய்துள்ளார்.

’பதான்’ படத்துக்கு எதிராக 90 சதவிகிதம் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், அப்படத்துக்கு 10 சதவிகித ஆதரவும் உள்ளது. ’’பொதுவாக எல்லா திரைப்படங்களும் சென்சார் போர்டால் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒரு படத்தில், அநாகரிகமாக இருக்கும் பல காட்சிகள் அங்கேயே வெட்டப்படுகின்றன. அதன்பிறகே படம் வெளியாகிறது.
மேலும், பிகினி உடை காட்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லையே? அப்படி இருக்கையில், ஒரு படம் எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை சொல்ல அமைச்சர் யார்? அமைப்புகள் ஏன் இதில் தலையிட வேண்டும்” என கேள்வி எழுப்பிருக்கும் திரைப்பட ஆர்வலர்கள் சிலர், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அதற்காகவே இப்படியொரு விமர்சனத்தை எழுப்பி, அப்படத்தைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாராகி இருக்கும் ’பதான்’ படம், இந்த ஒரு பாடலாலேயே, பலருடைய எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருப்பதால் தயாரிப்பு நிறுவனம்தான் கவலையில் ஆழ்ந்துள்ளது.
ஜெ.பிரகாஷ்