Deepavali Bonus Movie Review

விமர்சனம்: தீபாவளி போனஸ் !

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

தீபாவளியன்று வெளியாக வேண்டிய படம்!

கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு படங்களுடன் ‘கிடா’ என்ற சிறிய பட்ஜெட் படமும் இடம்பெற்றிருந்தது. தீபாவளி கொண்டாடுவதற்காகச் சாதாரண மக்கள் படும் பாட்டை எடுத்துக்காட்டுவதாக அது அமைந்திருந்தது.

மிக நேர்த்தியான படமாகவும் இருந்தது. அதே தொனியில் அமைந்திருக்கிறது இந்த வாரம் வெளியாகியுள்ள ‘தீபாவளி போனஸ்’. டைட்டிலே இதன் மையக்கதை என்னவென்று சொல்லிவிடும்.

விக்ராந்த், ரித்விகா, குழந்தை நட்சத்திரம் ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். ஜெயபால் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார்.

‘தீபாவளி போனஸ்’ தரும் காட்சியனுபவம் எந்தளவுக்கு பார்வையாளர்களின் வாழ்வோடு பொருந்தி நிற்கிறது?

தீபாவளி எதிர்பார்ப்புகள்!

திருப்பரங்குன்றம் அருகேயுள்ள நிலையூரில் ஒரு சிறிய வீட்டில் ரவி – கீதா (விக்ராந்த், ரித்விகா) தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன். அவனது பெயர் சந்திரபோஸ் (ஹரிஷ்).

சந்திரபோஸ் உடன் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் தீபாவளிக்காகத் தங்களது வீட்டினர் எப்படியெல்லாம் தயாராகி வருகின்றனர் என்று வகுப்பறையில் ஆசிரியரிடம் சொல்கின்றனர். அவர்களுக்கு மத்தியில், ‘எங்கப்பாவுக்கு இன்னும் தீபாவளி போனஸ் வரலை’ என்று அவன் சொல்கிறான். மேலும், பணம் வந்ததும் போலீஸ் உடை வாங்கித் தருவதாகத் தன் பெற்றோர் சொன்னதாகவும் கூறுகிறான். அந்தச் சிறுவனின் பெற்றோர் நிலை என்னவென்பது அந்த ஆசிரியருக்குப் புரிகிறது.

அன்றைய தினம், தான் வீட்டு வேலை செய்து வரும் குடியிருப்புக்கு அருகே ஒரு நான்கு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதைக் காண்கிறார் கீதா. ரவி நல்லதொரு ஹெல்மெட் இல்லாமல் இருப்பது நினைவில் வந்ததும், அதனைக் காணச் செல்கிறார். அவருக்குப் பிடித்தமான ஹெல்மெட் 1,500 ரூபாயில் இருக்க, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஹெல்மெட்டை பார்க்கிறார். அதனை எடுத்து வைக்குமாறு கூறுகிறார்.

வீட்டு உரிமையாளரிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்கிறார். ‘சம்பளத்துல கழிச்சுக்கோங்க’ என்று சொல்லி, அவர் இடும் வேலைகளைச் செய்துவிட்டு, சாலைக்கு கீதா வரும்போது அந்த வாகனம் இருந்த இடம் காலியாக இருக்கிறது. தான் விரும்பியதைச் செயல்படுத்த முடியாத விரக்தியுடன் கீதா வீடு திரும்புகிறார்.

அன்றைய தினம், ரவி வேலை செய்யும் கூரியர் நிறுவனத்திலும் ‘போனஸ்’ தரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே மேலாளர் மாலிக் சொல்கிறார்.

எரிச்சலுடன் வீடு திரும்பும் ரவியிடம், தன் கையிலிருக்கும் ஆயிரம் ரூபாயைக் காட்டி ‘டவுணுக்கு போய் குழந்தைக்கு ட்ரெஸ் வாங்குவோமா’ என்கிறார் கீதா. மூவரும் பேருந்தில் கிளம்பிச் செல்கின்றனர்.

தீபாவளியையொட்டி சாலையோரம் அமைக்கப்பட்ட கடையொன்றில், சந்திரபோஸுக்காக ஒரு போலீஸ் உடை வாங்குகின்றனர். ரவிக்கு ஒரு சட்டை எடுக்கிறார் கீதா. மூன்று பேரும் கண்ணாடி வாங்குகின்றனர்.

மீதமிருக்கும் பணத்தில் கீதாவுக்குப் பிடித்தமான சேலை எடுக்க முடியாமல் போகிறது. ஆனாலும், அந்த 150 ரூபாயைக் கொண்டு மகனுக்கு ‘ஷூ’ வாங்குகிறார் ரவி.

அதனை விற்பவர் 300 ரூபாய் என்று சொல்ல, தன்னுடைய மொபைலை அவரிடம் கொடுத்து ‘நாளைக்கு வந்து 150 ரூபாய் தந்துடுறேன்’ என்கிறார். ஆனாலும், ரவி தரும் 150 ரூபாய்க்கு அந்த ஷுவை கொடுக்கிறார் அந்த நபர்.

அடுத்த நாள் தீபாவளி போனஸ் கொடுத்ததும், மனைவிக்கு பிடித்தமான சேலையையும் கொஞ்சம் பட்டாசுகளையும் வாங்க வேண்டுமென்பது ரவியின் திட்டம்.

ஆனால், அடுத்த நாள் காலையில் எல்லாமே தலைகீழாகிறது. அலுவலகத்தில் போனஸ் தருமாறு கூறி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நிலைமை கைமீறிப்போக, போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர்.

அங்கிருந்து ஒருவழியாக நழுவி வீடு திரும்புகிறார் ரவி. ‘தீபாவளிக்காக ஒரு 4 மணி நேரம் சட்டை வித்தா போதும்; 2,000 ரூபாய் தர்றேன்’ என்று அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வர, அவரைத் தேடிச் செல்கிறார்.

தனது கூச்ச சுபாவத்தைக் கைவிட்டு, அந்த இரண்டாயிரம் ரூபாய்க்காகச் சந்தையில் கூவிக் கூவிச் சட்டை விற்பனையில் ஈடுபடுகிறார் ரவி. அப்போது, அங்கு வரும் ஆறேழு பேர் அவரை அடித்து உதைக்கின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்த போலீசாரிடம் அந்த நபர்கள் ஏதோ கிசுகிசுக்கின்றனர். அதையடுத்து, ரவி கைது செய்யப்படுகிறார்.

இன்னொரு புறம், நள்ளிரவு வரை ரவி வீடு திரும்பாமல் இருப்பதைக் கண்டு பதைபதைத்துப் போகிறார் கீதா. தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரித்தும் பலன் ஏதும் இல்லை.

அதன்பிறகு என்னவானது? ரவி தன் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடினாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஒரு குடும்பம், தங்களது தீபாவளி எதிர்பார்ப்புகளை அடைந்ததா என்று சொல்கிறது இப்படம். கதையில் சொல்லப்பட்ட முடிச்சு அவிழ்ந்தபின்னும் கூட, காட்சிகள் அடுத்தடுத்து திரையில் வந்து விழுகின்றன.

மீண்டும் ஒரு எதிர்பார்ப்போடு அந்த குடும்பம் தீபாவளியைக் கொண்டாடி முடிப்பதாக நிறைவுறுகிறது ‘தீபாவளி போனஸ்’.

முழுக்கதையைச் சொன்னபிறகும் இப்படத்தை ஒருவரால் நிச்சயம் காண இயலும். காரணம், கதை சொல்லப்பட்ட விதம் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவகையில் ஈர்க்கும்; திரையை நோக்கி அவர்களைப் பிணைக்கும்.

நல்ல படம்!

இப்போதெல்லாம் ‘பீல்குட் படம்’ பார்ப்பதென்பதே அரிதாகிவிட்டது. ஓரளவு நல்ல பொருட்செலவில், கவிதைநயமிக்க திரைமொழியில், ‘தேனில் நனைக்கப்பட்ட கசப்பு மருந்து’ உண்பது போலவே ஒரு திரைப்படத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்திற்குப் படைப்பாளிகள் ஆளாகியிருக்கின்றனர்.

அப்படியொரு சூழலில், பெரிதாகப் பூச்சுகள் இல்லாமல் மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை, பண்டிகை கொண்டாட்டத்தைப் பேசுகிறது ‘தீபாவளி போனஸ்’.

’எல்லோரும் நல்லவரே’ என்று வழக்கமான குடும்பப்படங்கள் பாணியில் காட்சிகள் அமைந்திருந்தாலும், எந்த இடத்திலும் ‘மிகை’ என்று சொல்ல முடியாத அளவுக்குத் திரையனுபவத்தைத் தந்திருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் ஜெயபால் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார்.

’அவரும் தன்னோட குழந்தைகளுக்கு அப்பாதானே’ என்று தனக்குப் பாதி விலையில் ‘ஷு’ விற்ற நபரைப் பற்றி விக்ராந்த் விவரிப்பது, ‘நீயும் வாட்ச்மேனா இருந்திருக்க வேண்டியது தானப்பா’ எனும் மகனை ரித்விகா அதட்டுவது, ’உங்களுக்கு ஆயிரத்துல பிரச்சனைன்னா எனக்கு லட்சத்துல பிரச்சனைப்பா’ என்று போனஸை தாமதமாக வழங்கும் நிறுவன உரிமையாளர் சொல்வது, அதனைக் கேட்கும் மாலிக் ‘ஹேப்பி தீபாவளி’ என்று அவரிடம் தெரிவிப்பது என்று இப்படத்தில் மனதை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் இடங்கள் நிறைய.

கடைவீதி என்று ஒரு தெருவை மட்டுமே காட்டியிருப்பது உட்படச் சில இடங்களில் காட்சியமைப்பு திருப்தி தருவதில்லை தான். ஆனால், குறைந்த பட்ஜெட்டில் அதனைச் சாத்தியப்படுத்தியிருப்பதே பெரிய விஷயம் என்பதனை அடுத்தடுத்து வரும் காட்சிகள் வழியே உணர்த்தியிருக்கிறார் ஜெயபால்.

தான் சொல்ல வந்ததைச் சமரசம் இல்லாமல் நேர்த்தியாகத் திரையில் சொன்ன காரணத்தால், இயக்குனர் கவனிக்காமல் விட்ட லாஜிக் மீறல்கள் பக்கம் நாம் கண் திருப்பவே தேவையில்லாமல் போகிறது.

’தீபாவளி போனஸ்’ ட்ரெய்லர் பார்த்தபோது, ’ரொம்பவே சாதாரணமான காட்சியாக்கம் இருக்கும் போல’ என்ற எண்ணம் தலையெடுத்தது.
ஒளிப்பதிவாளர் கௌதம் சேதுராமன், ‘அப்படியொரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்’ என்று நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். காட்சிகளின் தன்மையைப் பொட்டிலடித்தாற்போலச் சொல்லும் திரைமொழியைக் கையாண்டிருக்கிறார்.

சில காட்சிகளில் ‘ஜம்ப்’ தெரிந்தாலும், கதை நகர்வில் சமரசம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் பார்த்திவ் முருகன்.

ட்ரோனில் மதுரை வட்டாரத்தைப் படம்பிடித்திருப்பது, ஆங்காங்கே ‘ட்ரான்சிஷன்’ ஷாட்களாக படத்தொகுப்பாளர் பயன்படுத்த உதவியிருக்கிறது. அது, இப்படத்தின் பட்ஜெட் குறித்த எண்ணவோட்டத்தை மழுங்கடிக்கிறது.

இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு, எளிய மெட்டுகளின் வழியே நம் மனதைத் தொடுகிறார். பின்னணி இசையும் கதைக்குத் தேவையான உணர்வெழுச்சியை ஊட்டும்விதமாக அமைந்துள்ளது.

ரித்விகா முகத்தில் மட்டும் கொஞ்சம் ‘பவுடர்’ அளவுக்கதிமாக இருப்பது, படப்பிடிப்பு அவசரங்களில் சில கவனிப்புகள் விட்டுப் போயிருப்பதை உணர்த்துகிறது.

மற்றபடி ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ என்று பல அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்துள்ளன.

‘இந்தப் படத்தின் அடையாளம் தாங்கள் தான்’ என்று உணர்ந்து, விக்ராந்த், ரித்விகா இருவரும் படத்தில் அந்தந்த பாத்திரங்களாகத் தென்பட்டிருப்பது சிறப்பு. மிகச்சாதாரண வாழ்வை மேற்கொள்ளும் நபர்களாக, அவர்கள் திரையில் தெரிகின்றனர். அதுவே, இப்படத்தோடு நாம் ஒன்றுவதற்கு வகை செய்கிறது.

குழந்தை நட்சத்திரம் ஹரிஷ் தன் பங்களிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார்.

கூரியர் நிறுவன பணியாளர்களாக வருபவர்கள், கடைவீதியில் இருக்கும் விற்பனையாளர்கள், காவல் துறையினராக நடித்தவர்கள் என்று இதில் எழுபதுக்கும் மேற்பட்டோர் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது.

ஆலை முதலாளியாக ஒரு நபர் சில காட்சிகளில் வந்து போயிருக்கிறார். அவர் வந்து போகும் காட்சிகள் இன்னும் கொஞ்சம் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இப்படத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ‘மோசமானதாக’ காட்டவில்லை இயக்குனர் ஜெயபால். கதை தீபாவளி கொண்டாட்டத்தை மையப்படுத்தியது என்பதால், அந்த நிலைப்பாட்டை அவர் கையிலெடுத்திருக்கலாம். அதனால், கதை சொல்லலில் துருத்தல்கள் பெரிதாக இல்லை.

அதேநேரத்தில், ‘விக்ரமன்’ படங்கள் உட்பட இதுவரை நாம் கண்ட ‘பீல்குட்’ பேமிலி படங்களில் பார்த்த உணர்வெழுச்சி இதில் அறவே இல்லை.
எந்த இடத்தில் யதார்த்தம் மிளிர்ந்தால் அது சமகாலத் திரைப்படங்களுக்கானதாக இருக்கும் என்பதை இயக்குனர் உணர்ந்து செயல்பட்டிருப்பது சிறப்பு.

இப்படத்தில் படத்தொகுப்பாளர் பி.லெனின் ஆலோசனைகள் தந்ததாகச் சொல்கிறது டைட்டில் காட்சி. அவரது பங்களிப்பு எத்தகையது என்று படக்குழுவினர் சொன்னால் மட்டுமே தெரியும்.

‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நிச்சயமாக ஒருமுறை பார்த்து ரசிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டது. எந்தவொரு இடத்திலும் நாம் அயர்ச்சியை அடையாத வகையில், இதன் திரைக்கதை நகர்வு உள்ளது. திரையோடு நாம் ஒன்றுவதற்கேற்ற பல கூறுகள் இதன் கதையில் இருக்கின்றன. ஒரு ‘நல்ல படம்’ என்று சொல்வதற்கு வேறென்ன கூறுகள் வேண்டும்?!

உண்மையில், இது ‘தீபாவளி’யன்று வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம்.

அமரன், பிரதர், ப்ளடி பெக்கர், லக்கி பாஸ்கர் மற்றும் இதர பிற மொழிப் படங்கள் வரிசையில் இருப்பதால் ஒரு வாரம் முன்னதாக வெளியாகியிருக்கிறது. அடுத்த வாரம் அந்த படங்களோடு போட்டியிடத்தக்க வகையிலேயே இதன் உள்ளடக்கம் உள்ளது.  அந்த வகையில் ஓரிரு காட்சிகளாவது இதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

‘குறைந்த பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று சொல்லும் திரைத்துறையினர் அதற்கு வழியமைக்க வேண்டும். அதுவே இப்படக்குழுவினருக்குச் சக போட்டியாளர்கள் தருகிற மரியாதையாக இருக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுரையில் பேய் மழை – தவிக்கும் மக்கள் : ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவு!

விமர்சனம் : பணி!

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் !

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

பிக் பாஸ் 8 : வீட்டுக்குள் புலம்பும் சவுந்தர்யா

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?

+1
1
+1
0
+1
0
+1
6
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *