இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.
இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி, அந்த தேதியில் மட்டும் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், நடிகர் ஜீவா நடித்திருக்கும் வரலாறு முக்கியம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் அதே தேதியில் ஓடிடி தளங்களில் சில திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன. தவிர, சில சினிமாக்களின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
திரையரங்கில் வெளியாகும் படங்கள்
டிஆர்.56:
நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ’டி.ஆர்.56’. இப்படத்தை, ப்ரவீன் ரெட்டி கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில், நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்
நடிகர் வடிவேலு நீண்டநாட்களுக்கு பிறகு நாயகனாக நடித்திருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் வரும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு முக்கியம்
பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92வது படம் ‘வரலாறு முக்கியம்’.
ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகை காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தாதா
கின்னஸ் கிஷோர் இயக்கத்தில் நிதின் சத்யா, யோகிபாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா’. இப்படத்தில் காயத்ரி, மனோபாலா, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படமும் டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
விஜயானந்த்
ரிஷிகா ஷர்மா இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகியுள்ள படம் ‘விஜயானந்த்’. பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தில் நிஹல், பாபன் பூபண்ணா, வினயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய தொழிலதிபரான பத்மஸ்ரீ விருது பெற்ற விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்படும் இப்படமும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
குருமூர்த்தி:
நட்டி நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வால், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா ஆகியோர் நடித்துள்ள படம், ‘குருமூர்த்தி’. இப்படத்தை கே.பி.தனசேகர் இயக்கியுள்ளார். சத்ய தேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இப்படமும் டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
எஸ்டேட்
டிவைன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.கார்த்திக் இயக்கத்தில் சுனைனா, ரம்யா நம்பீசன், கலையரசன், டேனியல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எஸ்டேட்’. இந்தப் படத்தில் குணா பால சுப்ரமணியன் இசையமைக்க அஸ்வந்த் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், எஸ்டேட் படமும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்
யசோதா
ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்துள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
காபி வித் காதல்
இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஜீவா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ‘காபி வித் காதல்’.
இந்த படத்தை குஷ்பு தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற இப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரத்தசாட்சி
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’கைதிகள்’ கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’ரத்தசாட்சி’. இந்த படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் போன்றோர் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரித்திருக்கும் இப்படமும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
விட்னஸ்
தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம், ‘விட்னஸ்’. அறிமுக இயக்குநர் தீபக் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இப்படத்தில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க, கபிலன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம், டிசம்பர் 9ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிற வெளியீடுகள்
துணிவு படத்தின் பாடல்
நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் படம் ‘துணிவு’.
இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் ’சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.
கனெக்ட் படத்தின் டிரைலர்
மாயா’, ‘இரவாக்காலம்’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணக்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘கனெக்ட்’.
அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று தொடக்கம்!
உலகக்கோப்பை கால்பந்து: புதிய ஹீரோவால் ஜொலித்த போர்ச்சுகல்