ஜி.வி.பிரகாஷின் டியர் இன்னொரு குட் நைட்டா? – திரை விமர்சனம்!

Published On:

| By Manjula

ஒரே மாதிரியான கதையம்சத்தைக் கொண்ட இரு வேறு படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. சில நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அது போன்று வெளியான படங்களைத் தனியாகப் பட்டியலிட முடியும்.

அவற்றில் சில ஒரேநேரத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருந்திருக்கின்றன; மிகச்சில படங்கள் ஒன்றை முன்மாதிரியாகக் கொண்டு வேறு மாதிரியான திரைக்கதை ‘ட்ரீட்மெண்டில்’ உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வரிசையில் நாயகி குறட்டை விடுவதாகக் காட்டிய ‘டியர்’ படத்தின் ட்ரெய்லர், கடந்த ஆண்டு வெளியாகிப் பெருவெற்றியை ஈட்டிய ‘குட்நைட்’ படத்தை நினைவூட்டியது. அந்தப் படத்தில் நாயகனான மணிகண்டன் குறட்டை பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் திணறுவதாகக் காட்டப்பட்டிருந்தது.

அந்த படத்தில் இருந்து ‘டியர்’ முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறதா? ரசிகர்களை ஈர்க்கும்விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் உள்ளனவா? என்பதை இங்கே பார்க்கலாம்.

நாயகியின் குறட்டை

கடன் பிரச்சனையால் தந்தை சண்முகம் வீட்டை விட்டு ஓடிப்போக, தாய் லட்சுமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ் குமார்). சிறு வயதிலேயே வேலைக்குச் சென்று, அந்தக் குடும்பத்தில் ஒரு தந்தைக்கான கடமைகளை ஆற்றியவர் மூத்த சகோதரர் சரவணன் (காளி வெங்கட்).

அதனாலேயே, அந்த வீட்டில் எல்லாவற்றையும் தீர்மானிப்பவராக அவர் விளங்குகிறார். மனைவி கல்பனாவை (நந்தினி) ஒரு வேலையாள் போல நடத்துவதே அவரது குணம். தான் நடத்திவரும் ஆலை நிர்வாகத்தில் உதவி செய்யாமல், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பணியில் தம்பி ஈடுபடுவதில் சரவணனுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

ஆனால், லட்சுமிக்கோ அது ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கிறது. வெளிநாட்டில் செய்தியாளர் வேலை என்ற கனவுடன் இருக்கிற அர்ஜுன், திருமணப் பேச்செடுத்தாலே ஓடி விடும் வழக்கமுடையவர்.

பஹத் ஃபாசிலின் ‘ஆவேசம் ‘ எப்படி இருக்கிறது? – திரைப்பட விமர்சனம்!

அவரை வற்புறுத்தி, தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண்ணைப் பார்க்க விடாப்பிடியாக அழைத்துச் செல்கிறார் லட்சுமி. பெண் வீட்டுக்குச் சென்ற பிறகே, அவரது தாயார் லட்சுமியின் பள்ளிக்காலத் தோழி என்று தெரிய வருகிறது. அதுவே அந்த திருமணத்தை நிச்சயிக்க அடிப்படைக் காரணமாக அமைகிறது.

பக்கத்தில் படுத்திருப்பவர் அலறி எழுந்திரிக்கும் அளவுக்குக் குறட்டை விடும் வழக்கமுடையவர் தீபிகா. அந்த பழக்கம் பற்றிச் சொன்னதாலேயே, அவரைப் பெண் பார்க்க வந்த பலர் தெறித்து ஓடியிருக்கின்றனர். ஆனால், தனது தாய் வற்புறுத்திய காரணத்தால் அர்ஜுனிடம் அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறார் தீபிகா.

திருமணம் முடிந்து, முதலிரவின் போது மட்டுமே தீபிகாவின் குறட்டை குறித்த உண்மை அர்ஜுனுக்குத் தெரிய வருகிறது. ஆனால், அதனை அவரால் எளிதில் கடந்து போய்விட முடியாத நிலைமை.

ஏனென்றால், தூங்கும்போது சின்னதாகச் சத்தம் கேட்டாலே விழித்தெழும் வழக்கம் உள்ளவர் அர்ஜுன். அப்படிப்பட்டவரால் குறட்டை பிரச்சனையை எப்படிக் கண்டும் காணாமலும் இருக்க முடியும்? அதனால், மெல்ல தம்பதியருக்குள் விரிசல் விழுகிறது. அதையும் மீறி, இருவரும் காதலைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

மாறி மாறித் தூங்குவது என்று முறை வைத்துக்கொண்டு படுக்கையறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனாலும், இரவில் தூங்காத அயர்வு பகலில் அவர்களை வாட்டி எடுக்கிறது. கிடைக்கும் இடைவெளியில் தூங்கும் வழக்கத்திற்கு இருவருமே ஆளாகின்றனர்.

விவாகரத்து

எல்லாமே சீராகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில், அவர்களது திருமணம் முடிந்த நூறாவது தினம் வருகிறது. அன்று, திடீரென்று நிதியமைச்சரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு அர்ஜுனுக்குக் கிடைக்கிறது. அது அவரது கனவும் கூட.

ஆனால், முந்தைய இரவில் தூங்காத காரணத்தால் அயர்ச்சியோடு பாத்ரூமுக்கு சென்றவர் அங்கேயே தூங்கிவிடுகிறார். பேட்டி எடுக்கும் வாய்ப்பையும் கோட்டை விடுகிறார். அந்த வேலையையும் இழக்கிறார்.

மனைவியின் குறட்டையைக் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டாம் என்று பக்குவத்தோடு யோசித்தவரால், இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர் மனதுக்குள் இருந்த ஆவேசம், அந்தக் கணத்தில் பொங்கிப் பீறிடுகிறது. இனி தனது வாழ்வில் தீபிகா தேவையில்லை என்று முடிவு செய்கிறார்.

தாய், சகோதரர், அண்ணி என்று பலர் வற்புறுத்தியும் அர்ஜுன் தன் முடிவில் இருந்து மாறுவதாக இல்லை. அதன் தொடர்ச்சியாக, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்கிறார். ஆனால், தீபிகா அதற்குச் சம்மதிக்கவில்லை.

‘ரோமியோ’ விஜய் ஆண்டனி கவர்கிறாரா? – திரை விமர்சனம்!

இந்தச் சூழலில், தீபிகா கர்ப்பமடைகிறார். குழந்தை வேண்டும் என்று சொல்லும் அர்ஜுனுக்குத் தீபிகாவோடு சேர்ந்து வாழ்வது இயலாத காரியமாகப் படுகிறது. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

நாயகியின் குறட்டைக்குத் தீர்வே இல்லை என்று முன்பாதியிலேயே சொல்லிவிடுவதால், அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் திரைக்கதையில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், எந்தச் சத்தம் கேட்டாலும் நாயகன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவது ஏன் என்ற கேள்விக்கான பதில் பின்பாதியில் உள்ளது.

’குட்நைட்’ படத்தில் நாயகன் தனது குறட்டை பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் அல்லாடுவதுதான் கதையின் மையச்சரடு என்றால், இப்படத்தில் மனைவியின் குறட்டையை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாயகனைத் தடுமாறச் செய்வது எது? என்பதற்கான பதிலை நோக்கி நகர்கிறது ‘டியர்’. அதுவே இரண்டுக்குமான வித்தியாசம்.

ஐஸ்வர்யா கவனத்திற்கு

’ரெபல்’, ‘கள்வன்’ படங்களைத் தொடர்ந்து, கடந்த முப்பது நாட்களுக்குள் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் மூன்றாவது படம் இது. அவற்றில் இருந்து வேறுபட்ட வகைமையில் அமைந்திருந்தாலும், இப்படம் தரும் காட்சியனுபவம் கொஞ்சம் வறட்சியானதாகவே உள்ளது.

அதேநேரத்தில், அவரது கதாபாத்திர வார்ப்பு இதில் வேறுபட்டு இருப்பதை மறுக்க முடியாது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதில் கடினமான பாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆனாலும், முடிந்தவரை தான் ’ஸ்கோர்’ செய்யும்விதமாகத் திரையில் தோன்றியிருக்கிறார்.

‘ஸ்லிம்’ தோற்றத்தை மீறி, இதில் கொஞ்சம் குண்டாகத் தெரிகிறார் ஐஸ்வர்யா. அவரது வயதுக்கேற்ற உடல்வாகுதான் என்றபோதும், அது எச்சரிக்கை அளவைத் தாண்டிவிடாமல் பார்த்துக்கொண்டால் இது போன்ற பாத்திரங்களில் இன்னும் சில காலம் தொடரலாம்.

மகன்களை அதட்டிப் பேசாத தாயாக ரோகிணி, தான் சொன்னதையே குடும்பத்தினர் கேட்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் மூத்த மகனாக காளி வெங்கட், அவர் சொல்வதை அப்படியே நிறைவேற்றும் மனைவியாக நந்தினி.

மகளைத் தோழியாகப் பாவிக்கும் தந்தையாக இளவரசு, அவருக்கு ஏற்ற துணையாக கீதா கைலாசம் என்று இக்கதையில் வரும் பாத்திரங்கள் ’டெம்ப்ளேட்’டாக பல கதைகளில் நாம் எதிர்கொண்டவை தான். ஆனாலும், அவர்களது இயல்பான நடிப்பு அதனை மறக்கடிக்கிறது.

பின்பாதியில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கிறார் தலைவாசல் விஜய். நாயகனின் நண்பனாக வரும் அப்துல் லீ மற்றும் அவரது தோழியாக வருபவர் இரண்டொரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கின்றனர்.

நீதிபதியாக நக்கலைட்ஸ் தனமும், வழக்கறிஞராக படவா கோபியும் இதில் நடித்திருக்கின்றனர். அவர்கள் பேசும் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஜகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. ’மஜா வெட்டிங்’ பாடலில் அவரது உழைப்பு ‘ஆஹாஹா’ ரகம். ஆனால், சோகமான தருணங்களிலும் கூட அந்த அழகியல் மெனக்கெடல்கள் தொடர்வது திரைக்கதையின் ஆன்மாவைச் சிதைக்கிறது.

பிரகதீஸ்வரனின் கலை வடிவமைப்பு, திரையில் அழகு மிளிர இடம் தந்திருக்கிறது. இயக்குனர் எடுத்த காட்சிகளைச் சீராகக் கோர்த்து, திரையில் கதை விரிய உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ருகேஷ். அதேநேரத்தில் சில முக்கியமான காட்சிகள் விடுபட்டிருக்கின்றனவோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இந்த படத்தில் ‘லைவ் ரெக்கார்டிங்’ செய்யப்பட்டிருப்பதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். இளவரசு – கீதா அறிமுகக் காட்சியில் அதன் முக்கியத்துவம் பிடிபடுகிறது. அதன்பிறகான காட்சிகளில் அந்தளவுக்கு அந்த உத்தி நம் நினைவுக்கு வருவதில்லை.

குட்நைட் போல உள்ளதா?

விநாயக் சந்திரசேகரனின் ‘குட்நைட்’ படத்தின் தாக்கம் இதில் தெரிகிறதா என்றால் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், இரண்டிலும் கதையின் அடிப்படை அம்சங்களில் பெரிதாக மாற்றமில்லை.

ஆனந்த் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய ‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படம் வறட்சியான திரைக்கதையைக் கொண்டிருந்தது. கமர்ஷியல் அம்சங்கள் ரொம்பவே குறைவாகவே இருந்தன. இதிலும் அப்படியே.

‘ரொமான்ஸ் டிராமா’ வகைமை சார்ந்த கதையாக இருந்தாலும், காமெடிக்கும் கொஞ்சம் இடம் தந்திருக்கலாம். ‘குட்நைட்’டில் திலக், மணிகண்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வாறிருந்தன. நாயகன், நாயகி இடையிலான காதலும், பிரிவும் வலுவாகத் தெரிந்தன.

இந்தப் படத்தில் நகைச்சுவை சுத்தமாக இல்லை. அப்துல் லீ அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார். காளி வெங்கட் – நந்தினி சம்பந்தப்பட்ட காட்சிகளும் கூடச் சிரிக்கும் அளவுக்கு இல்லை.

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில், அவர்களுக்கு இடையிலான நெருக்கம் சரியாகத் திரையில் வெளிப்படவில்லை. அப்படியிருக்கையில், அவர்களது பிரிவு ஒரு ரசிகனிடத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தலைவாசல் விஜய், காளி வெங்கட், ஜி.வி.பிரகாஷ் என்று மூன்று ஆண் பாத்திரங்களின் மன மாற்றமே இக்கதையின் அடிப்படை. அதனை அடிக்கோடிட்டு உணர்த்தும் காட்சிகளும் கூட இதில் அதிகமில்லை.

அவற்றைச் செய்திருந்தாலே, நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கான தகுதிகளை இப்படம் அடைந்திருக்கும். அதனைத் தவறவிட்டிருப்பதால், இப்படத்தினை குட்நைட் உடன் நிச்சயமாக ஒப்பிட முடியாது.

அதேநேரத்தில், இல்லறத்தில் இணையிடம் இருக்கும் குறைகளை மனதார ஏற்றுக்கொண்டு நிறை வாழ்வு வாழ வேண்டுமென்கிறது ‘டியர்’. அதுவே இந்தப் படத்தை ஒருவர் முழுமையாகப் பார்த்து ரசிப்பதற்கான காரணமாகவும் உள்ளது.

-உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சனாதனத்தை அவமதிக்கும் திமுக: அமித்ஷா தாக்கு!

GOAT பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்… என்ன ஸ்பெஷல்னு பாருங்க!

தேர்தல் விளம்பரங்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

சாமி Vs சிங்கம் – ஹரியின் யுனிவர்ஸ்.. செம ஐடியா..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share