விழுந்து புரண்டு சிரிக்கலாம்!
சந்தானம் படங்கள் என்றாலே நகைச்சுவை அதிகமிருக்கும் என்றெண்ணிய காலம் உண்டு. அவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபிறகு அது மலையேறிவிட்டது.
ஏ1, பாரிஸ் ஜெயராஜ், தில்லுக்கு துட்டு 1 & 2 மட்டுமே அவர் நாயகனாக நடித்தவற்றில் குறிப்பிடத்தக்கவை.
அந்த வரிசையைப் புரட்டிப்போடும் விதமாகப் புதுவிதமான அனுபவம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பைச் சந்தானத்தின் சமீபத்திய படங்கள் எதுவும் பூர்த்தி செய்யவில்லை. தற்போது வெளியாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறதா?
பல கதைகளின் சங்கமம்!
நகைச்சுவை படம் என்று வந்துவிட்டால் ஒரு பெரும் பட்டாளமே திரையில் தோன்றினால்தான் ஜோராக இருக்கும்.
‘பஞ்ச தந்திரம்’ அளவுக்கு இல்லாவிட்டாலும், பஞ்சம் இல்லாத அளவுக்காவது நடிகர்களின் இருப்பு அமைய வேண்டும். அதனைப் புரிந்துகொண்டு, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஸ்கிரிப்டை தனது குழுவினருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.
புதுச்சேரி அருகே ஒரு பங்களா. அங்கு வித்தியாசமான சூதாட்டமொன்றை நடத்துகிறது ஒரு குடும்பம். அந்த ஆட்டத்தில் பங்கேற்றவர்கள் தோற்றுவிட்டால் மரணம் நிச்சயம். இந்த விஷயம் வெளியே தெரிந்து, அந்த பங்களா தீக்கிரையாக்கப்படுகிறது. அதன்பிறகு, அது பேய் பங்களாவாக மாறுகிறது.
சில பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அந்த பங்களாவுக்குள் பெரும்பணத்தோடு புகுந்துவிடுகின்றனர் சிலர்; விளையாடுவதற்கான இடத்தில் அதனை வைத்தும் விடுகின்றனர். அதன்பிறகு, விளையாட்டை முழுதாக முடித்தால் மட்டுமே அந்த பங்களாவில் இருந்து அவர்கள் வெளியேற முடியுமென்ற நிலைமை உருவாகிறது. காரணம், அங்கிருக்கும் பேய்களின் ‘அட்ராசிட்டி’ அப்படி!
அது சரி, அந்த கும்பலின் கைக்குப் பணம் வந்தது எப்படி? அதனைச் சொல்ல, சில கிளைக்கதைகள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன.
புதுச்சேரியில் செல்வாக்கு மிகுந்தவராக விளங்குபவர் பிரான்சிஸ் அன்பரசு (பெப்சி விஜயன்). அவரது ஒரே மகன் பென்னி (ரெடின் கிங்ஸ்லி). பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்காக, பணம் கொடுத்து ஒரு பெண்ணை பென்னிக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார் பிரான்சிஸ். திருமணத்திற்கு முன்னால் அந்த பெண் ஓடிப்போக, அவரது தங்கை சோபியாவை (சுரபி) மணப்பெண் ஆக்குகிறார் பிரான்சிஸ். அப்படியும் திருமணம் தடைபடுகிறது. காரணம், சோபியாவின் காதலர் சதீஷ் (சந்தானம்) பென்னியைக் கடத்திச் செல்கிறார்.
திருமணத்தையொட்டி அன்பரசு வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து, குழந்தையின் (பிபின்) தலைமையிலான கும்பல் அங்கிருக்கும் பணம், நகைகளைத் திருடிச் செல்கிறது. அவர்களிடம் இருந்து, புரபொசர் (மொட்டை ராஜேந்திரன்) என்றழைக்கப்படும் ஒரு அமெச்சூர் திருடனின் ஆட்கள் அதனை ‘அபேஸ்’ செய்கின்றனர். அவர்களிடம் இருந்து, அந்த பேக்கை சதீஷும் அவரது நண்பர்களும் எடுத்துச் செல்கின்றனர்.
வேறொன்றுமில்லை, பென்னியைக் கடத்த சதீஷ் பயன்படுத்திய காரைத்தான் புரபொசரும் அவரது ஆட்களும் எடுத்துச் சென்றனர்; அதன் தொடர்ச்சியாக, பென்னியும் தப்பிச் சென்றுவிடுகிறார். அது தெரியாமல், பணம் இருக்கும் பேக் சதீஷ் வசம் வந்து சேர்கிறது. இந்த கடத்தல் களேபரங்களுக்கு மத்தியில், பேக்கில் இருக்கும் பணத்தில் இருந்து 25 லட்சத்தை எடுத்து சோபியாவிடம் தருகிறார் சதீஷ். சோபியாவின் தாயார், அதனை பிரான்சிஸ் வீட்டில் ஒப்படைக்கிறார். தற்செயலாகப் பணம் இருக்கும் பையைப் பார்க்கும் பிரான்சிஸ், சோபியாவின் தாய் தந்தது தன்னுடைய பணம் என்பதை அறிகிறார்.
‘பணம் திரும்ப வேண்டும்’ என்று சோபியாவின் குடும்பத்தினரை பிரான்சிஸ் பணயக் கைதிகள் ஆக்க, ‘பணம் எங்கே’ என்று சதீஷ் தனது நண்பர்களிடம் கேட்க, அவர்களோ ‘அதனை ஒரு பங்களா வாசலில் வைத்தோம்’ என்கின்றனர். அதனை எடுத்து ஒப்படைப்பதற்குள், பணம் இருக்கும் பேக் அந்த பேய் பங்களாவினுள் சென்று விடுகிறது. அதனை மீட்பதற்காக, சதீஷும் அவரது நண்பர்களும் அதனுள் நுழைகின்றனர்.
இப்போது, பேய்களுடனான விளையாட்டு தொடங்குகிறது. சதீஷ் கும்பலைத் தேடி ஒவ்வொருவராக வர வர, விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதேநேரத்தில், கொடூரமான பேய்களின் கொடுமைகளுக்குப் பலியாவதும் தொடர்கிறது. முடிவில், அந்த பேய் பங்களாவில் இருந்து உயிருடனும் பணத்துடனும் சதீஷ், சோபியா தப்பினார்களா என்று சொல்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.
இப்படிப் பல கதைகளின் சங்கமமாக, ’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
வாயாரச் சிரிக்கலாம்!
இப்போதெல்லாம் ஒரு காமெடி ‘பஞ்ச்’ கேட்டு புன்னகைப்பதே பெரிய விஷயம் என்றாகிவிட்டது. அப்படியொரு சூழலில், இருக்கையை விட்டு எழுந்து நின்று சிரிக்கும் அளவுக்கு ‘காமெடி வெடி’யை கொளுத்திப் போடுகிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. அதேநேரத்தில், ஏற்கனவே பார்த்த நகைச்சுவை இதில் சிறிதளவு கூட தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறது இயக்குனர் & குழு. அதுவே, இப்படத்தைப் பார்த்ததும் புத்துணர்வு பெற்றதாக உணர வைக்கிறது.
சந்தானம் நகைச்சுவையாக நடிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், ‘நான் கலாய்க்கிறேன்னு தெரியலையா’ எனும் தொனியில் அவரது நடிப்பு இதில் அமையாதது ஆறுதல். சுரபி இதில் அளவாக நடித்திருக்கிறார். என்னதான் அழுவது பயப்படுவது, காதலிப்பது என்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தாலும், திரையில் அவரது நடமாட்டம் கொஞ்சம் பெரிய சைஸ் ‘ஜவ்வு மிட்டாய்’ போன்றே தெரிகிறது.
மொட்டை ராஜேந்திரன் காமெடியாக நடித்து பல ஆண்டுகளாகிவிட்டது என்பதால், இதில் அவரது பங்களிப்பை தனியாகச் சிலாகிக்கத் தேவையில்லை. மாறன், சேது இருவரும் முன்பாதியில் அளவாக ‘கவுண்டர்’ கொடுத்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர். முனீஸ்காந்த், பிபின், தங்கதுரை, ரெடிங் கிங்ஸ்லி, சாய் தீனா, பெப்ஸி விஜயன், தீபா சங்கர், கூல் சுரேஷ் என்று ஒவ்வொருவரும் அளவாய் திரையில் வந்து சென்று, நம்மைச் சிரிக்க வைத்திருக்கின்றனர்.
’பேய் பேமிலி’யாக வரும் பிரதீப் ராவத், ரீட்டா, மானஸ்வி, மாசூம் சங்கர் உட்பட அனைவருமே நம்மை மிரள வைத்து வசீகரிக்கின்றனர். லொள்ளுசபா நட்சத்திரங்களாக விளங்கிய சுவாமிநாதன், உதயா, மனோகர் கூட இதில் ’தலைக்கு ஒரு காட்சி’ என முறை வைத்து நடித்துள்ளனர்.
தொடக்கத்தில் வரும் 15 நிமிட காட்சிகளில் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான பின்னணியை சிம்பிளாக, ஸ்டைலிஷாக திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். அதனால், இரண்டாம் பாதியில் ‘அது ஏன்’, ‘இது எதற்கு’ என்ற கேள்விகள் எழவில்லை. அதேநேரத்தில், ’ஒரு ரவுடியின் வீட்டில் தந்த பணம் மொத்தத்தையும் ஒரு குடும்பம் உடனடியாகச் செலவழித்துவிட்டதா’ என்பது போன்ற ‘லாஜிக்’சார்ந்த கேள்விகளும் மனதில் எழாமல் இல்லை. ‘அதற்கெல்லாம் இங்கே வேலையே இல்லை’ எனும் விதமாக, பரபரவென்று காட்சிகளை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த், கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகன், இசையமைப்பாளர் ஆப்ரோ என்று எல்லோரையும் இணைத்து, ஒவ்வொரு பிரேமையும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் பிரேம் ஆனந்த். அதுவே, இப்படத்தினை இந்தியாவின் எந்த மூலையில் இருப்பவரும் ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. ஓடிடி வெளியீட்டின்போது, அது நிச்சயம் பலனளிக்கும்.
மிக முக்கியமாக உருவக் கேலிகள் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கிளைமேக்ஸில் பேயை அடக்குவதற்கான வழிபாட்டு முறைகளைக் காட்டாமல், வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்புவது சாதாரண விஷயமல்ல. அதனைச் சாதித்திருக்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.
வித்தியாசமான ட்ரீட்மெண்ட்!
வசனங்களைக் கேட்டு சிரிக்க வேண்டும்; காட்சியின் சூழல் ‘சீரியசாக’ இருப்பதை உணர்ந்து, அதனோடு ஒன்ற வேண்டும். இவ்விரண்டையும் ஒரேநேரத்தில் ஒரே கோட்டில் ஒன்றிணைப்பது அபூர்வம். அதனைச் சாதித்திருக்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.
உண்மையில், முன்பாதியில் வரும் முக்கால் மணி நேரக் காட்சிகள் அப்படியிருப்பதுதான் பின்பாதியில் நாம் விழுந்து புரண்டு சிரிப்பதற்கான அடிப்படையை உண்டாக்குகிறது. அந்த ’திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ மட்டுமே, இதுவரை சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. போலவே, ’இது தில்லுக்கு துட்டு 3ஆம் பாகமா’ என்ற கேள்விக்கு வசனத்திலேயே பதில் சொல்லியிருப்பதும் அருமையான உத்தி.
பாத்திர வடிவமைப்பைப் பொறுத்தவரை, அளவெடுத்துச் செய்த பொம்மைகள் போல கனகச்சிதமாக அமைத்துள்ளார் பிரேம் ஆனந்த். புஷ்பா நடனம், விஸ்வாசம் பாடல், வசந்த் அன் கோ விளம்பரம் போன்றவை ‘லொள்ளுசபா’வின் பெரிய வடிவமாக இப்படத்தை முன்னிறுத்தினாலும், பின்பாதியில் இடம்பெற்றுள்ள பேய்களுடனான ‘கண்ணாமூச்சி’ விளையாட்டு இதனை அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமானதாக. பிரமாண்டமான படைப்பாக மாற்றியிருக்கிறது. இதே நேர்த்தியினை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தால், ‘சந்தானம் படமென்றால் எண்டர்டெய்ன்மெண்ட் கியாரண்டி’ என்ற எண்ணம் தானாக உருவாகிவிடும்.
அதன்பிறகு, ‘நகைச்சுவை நாயகன்’ என்ற அடையாளத்தோடு விதவிதமான கதைகளில், களங்களில் இறங்கி அவர் கலக்கலாம், கலாய்க்கலாம்.. அதற்கும் மேலே, பரீட்சார்த்த முயற்சிகளிலும் இறங்கலாம்!
உதய் பாடகலிங்கம்
“திமுக ஆட்சி ஊழல் செய்வதில் முதன்மையாக உள்ளது” – எடப்பாடி
ரசிகர்களின் போராட்டம்…மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன்