தசரா: விமர்சனம்!

சினிமா

சில நடிகர் நடிகைகளைப் பார்க்கும்போது சம்பந்தமேயில்லாமல் வேறு எவரோ நினைவுக்கு வருவார்கள். அந்த வரிசையில், நானியைப் பார்க்கும்போதெல்லாம் ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர் நினைவுக்கு வருவார். உருவம், உடல்மொழி, முகபாவனை என்று அனைத்துமே இருவருக்கும் ஒரேமாதிரியானதாக இருக்கும். ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், த்ரில்லர் என்று பல வகைமைகளில் கதைகளைத் தேர்வு செய்யும் பாங்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரியும்.

அந்த வரிசையில், நானியின் ‘தசரா’ பட ட்ரெய்லர் பார்த்தபோது ஜெரார்டின் ‘300’ படம் தான் நினைவுக்கு வந்தது. அதே போன்றதொரு நிறக்கலவையைப் பயன்படுத்தியது, ரத்தம் சிந்தும் வன்முறையைக் கொண்டிருப்பது போன்றவற்றை உணர்ந்த காரணத்தால் அப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாம். ‘300’ தந்த பிரமிப்பும் பிரமாண்டமும் இதிலும் காணக் கிடைக்கும் என்ற உற்சாகத்துடன் ‘தசரா’ பார்க்க அமர்ந்தால், பின்னந்தலையில் இருந்து ஒரு விசை நம்மை முன்னோக்கித் தள்ளுகிறது.

எங்கும் கரி.. எங்கும் புகை..!

நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள ஒரு பகுதி. அதன் அருகாமையிலிருக்கும் ஒரு கிராமம். இரண்டும் சேர்ந்தால் எப்படியிருக்கும்? அம்மண்ணும் மனிதர்களும் காற்றில் கலந்த கரிப்புகையைச் சுமக்கும் சூழல் நிச்சயம் இருக்கும். அந்த அவலத்தை மறக்க, அம்மக்கள் ஏதேனும் ஒரு வழியைக் கண்டறிவார்கள்; அப்படித்தான், அவர்களும் எந்நேரமும் சாராயக்கடையே கதி என்று கிடக்கின்றனர்.

அப்படியொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூரி மற்றும் தரணி. சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களது பள்ளியில் படிக்கும் சிறுமி வெண்ணிலா. தரணிக்கு வெண்ணிலா மீது பிரியம். அதனை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது, ’அந்தப் பெண் தனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்கிறான் சூரி. அதைக் கேட்டதும், தனது பிரியத்தை மனதிற்குள் புதைத்துக் கொள்கிறான் தரணி.

பதின்ம வயதில் நிகழ்ந்த இந்த முக்கோணக் காதல், பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்தும் தொடர்கிறது. வெண்ணிலாவும் சூரியும் ஒருவரையொருவர் காதலிக்க, அதனால் தனக்கு வலி ஏதுமில்லை என்று இருந்து வருகிறார் தரணி. வளர்ந்து பெரியவர்களானபிறகு, சூரி – வெண்ணிலா திருமணம் நடப்பதற்குண்டான வழிகளை எல்லாம் மேற்கொள்கிறார்.

அப்போது, ஊரில் செல்வாக்குமிக்கவராக இருந்துவரும் சின்ன நம்பியால் பிரச்சனை முளைக்கிறது. அவரது தந்தை சிவன் உள்ளாட்சித் தலைவராக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சாராயக்கடையை சின்ன நம்பி நடத்தி வருகிறார். சிவன், அவரது மாற்றாந்தாய் வழி சகோதரரான ராஜன், இருவரில் யார் உள்ளாட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுகிறார்களோ, அவர்களுக்கே சாராயக்கடை உரிமை என்று அவர்களது தந்தை நம்பி சொன்ன காரணத்தால் அந்த வழக்கம் தொடர்கிறது.

இந்த நிலையில், வெண்ணிலா – சூரி காதலைக் கண்டு கொதிப்படைகிறார் சின்ன நம்பி. வெண்ணிலா மீதான அவரது காம வேட்கையே அதற்கு வித்திடுகிறது. அதனை ஊரார் அறிவதற்குள் சூரியின் உயிர் பறி போகிறது.

சூரியைக் கொன்றவர்கள் யார், அவர்களைத் தரணி எப்படிப் பழி வாங்கினார்? தரணியின் காதல் வெண்ணிலாவுக்குத் தெரிய வந்ததா என்பது உட்படத் திரைக்கதையில் பொதித்து வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘தசரா’வின் மீதிப்பாதி. ஆனால், ஒரு முடிச்சு மெதுவாக அவிழ்க்கப்படுவது போல அச்செயல் நிகழாமல் ‘இதுதாங்க இருக்கு’ என்று பொத்திவைத்த கையைத் திறந்துகாட்டுவது போலவே அது நிகழ்கிறது.

இந்தக் கதையில், எங்கும் புகை எதிலும் புகை என்று ஒட்டுமொத்த கிராமத்தினரும் திரிவது மட்டுமே சிறப்பம்சம். அது, அவர்களது வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை இயக்குனர் சொல்லாமல் விட்டது நம் துரதிர்ஷ்டம்.

கொட்டாவி திரைக்கதை!

’தசரா’வில் வெண்ணிலா – சூரியாக கீர்த்தி சுரேஷ் – தீக்‌ஷித் ஷெட்டி ஜோடி நடித்துள்ளது. தரணியாக வருகிறார் நானி.

ஆக்ரோஷம், சிரிப்பு, ஆச்சர்யம் என்று பல உணர்வுகளைப் பத்திரமாக வெளிப்படுத்துகிறார் தீக்‌ஷித். கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை, அவருக்குக் கிடைத்தது கொஞ்சம் வித்தியாசமான பாத்திரம் தான். இருவருமே அந்தந்த பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.

ராஜனாக வரும் சாய்குமார், சிவனாக வரும் சமுத்திரக்கனி இருவருக்கும் பெரிதாக வாய்ப்பில்லை. சின்ன நம்பியாக வரும் மலையாள நடிகர் ஷைனி டாம் சாக்கோவுக்கு வில்லத்தனத்தை வெளிப்படுத்தச் சில காட்சிகள் உள்ளன. அவரும் அதனைத் திறம்படச் செய்திருக்கிறார். ஆனால், அந்த பாத்திரத்திலோ, காட்சிகளோ, கதையிலோ புதிது என்று சொல்லும்படியான விஷயம் ஏதும் இல்லை. சாக்கோவின் மனைவியாக வரும் பூர்ணாவும் இரண்டொரு காட்சிகளே வந்து போகிறார்.

இவர்கள் தவிர்த்து நானியின் நண்பர்கள், அவர்களது பெற்றோர் என்று பலர் இதில் நடித்துள்ளனர். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் மட்டும் குறைந்தபட்சம் 50 பேராவது அடி வாங்கியிருக்கிறார்கள். இதுதவிர வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் என்று சில நூறு பேராவது திரையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

நிலக்கரி புகை படிந்த ஊர் என்பதைக் காட்ட, கருப்புத்துகள் திரையெங்கும் நிறைந்திருக்கிறது; அது, நடித்தவர்களின் முகங்களிலும் தென்படும்படியாக ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், சாராயக்கடை, சில வீதிகள் தவிர்த்து மற்ற இடங்கள் வழக்கமான தெலுங்குப்பட களங்கள் போல பளிச்சென்று இருக்கின்றன. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ?

வித்தியாசமான படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மனதில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை என்றாலும், அது படமாக்கப்பட்ட விதம் அருமை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதேபோல நவீன் நூலியின் படத்தொகுப்பும் ரொம்பவே ‘ஷார்ப்’பாக காட்சிகளை வெட்டியிருக்கிறது. ஒருவேளை படப்பிடிப்புக்கு முன்னதாகவே திரைக்கதை குறித்து நவீனிடம் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசியிருந்தால், தற்போது திரையில் தென்படும் தொய்வைத் தவிர்த்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணனின் இசை, தசராவின் முக்கியமான சிறப்பு. அதிலும் ‘மைனரு வேட்டி கட்டி’ பாடல் சில வாரங்களாகவே இன்ஸ்டா ரீல்ஸில் கலக்கி வருகிறது. மற்ற பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையிலும் சந்தோஷ் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இத்தனையும் இருந்தாலும், காட்சிகளைப் படம்பிடிக்கும்போது என்ன கதையைச் சொல்ல வந்தோம் என்று இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா மறந்திருக்கிறார். அதனால், திரைக்கதை நகரும் போக்கு நம்மை தொடர்ந்து ‘கொட்டாவி’ விடச் செய்கிறது.

சாதீய வன்மம்!

’தசரா’வின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா, தமிழில் வெளியான ‘அசுரன்’, ‘கர்ணன்’ படம் பார்த்துவிட்டு அதேபோன்றதொரு கதையைத் தெலுங்கில் எடுக்க வேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார். சாதீய வன்மத்தை, வேறுபாட்டைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான சித்திரமொன்றைத் தர வேண்டுமென எண்ணியிருக்கிறார். ஆனால், அவரது விருப்பம் முழுமையாகப் பூர்த்தியாகவில்லை.

வெண்ணிலா – சூரியின் காதல் மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக வளர்ந்து, அதன்பின் சிதைகிறது என்பதைக் காட்டுவதில் குறையேதும் வைக்கவில்லை. ஆனால், தரணி எனும் நானியின் பாத்திரமே கதையில் பிரதானம் என்பதை வசதியாக மறந்திருக்கிறார்.

கதைப்படி தரணி என்பவர் ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; வெண்ணிலாவும் சூரியும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வேறுபாடு அவர்களது நட்பில் இல்லை என்பது வரை சரியாகவே சொல்லப்படுகிறது. ஆனால், சின்ன நம்பியின் வரவுக்குப் பிறகு சாதீயப் பார்வை, அதில் பொதிந்திருக்கும் வன்மம், அதனால் காயப்படும் குறிப்பிட்ட மக்கள் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த சின்ன நம்பி, ஊரிலுள்ள ஆண்களைக் கொண்டு உள்ளாட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க சாராயக்கடையைப் பயன்படுத்துகிறார் என்பது வெறும் தகவலாகவே உள்ளது. அதற்கேற்ற காட்சிகள் படத்தில் இல்லை. அதனாலேயே, அந்த ஊரிலுள்ள பெண்கள் சாராயக்கடையை வெறுப்பது நம்மை ஈர்க்கும் வகையில் இல்லை.

நிலக்கரிச் சுரங்கம், அதனால் படியும் புகைப்படலம் பின்னணியில் இந்தக் கதை ஏன் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்விக்குத் திரைக்கதையில் பதிலே இல்லை. உள்ளாட்சித் தலைவர் பதவியும் சரி, சாதீய ஆதிக்கமும் சரி, அம்மண்ணில் கோலோச்சுவதற்கு அந்த நிலக்கரிச் சுரங்கமோ அரசு அமைப்போ என்ன தாக்கத்தை உண்டுபண்ணின என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

களத்தினால் பெரிதாகத் தாக்கம் இல்லை என்றபோது, பாத்திரங்களின் வார்ப்பில் வித்தியாசத்தைப் புகுத்தியிருக்கலாம்; அப்படியும் ஏதும் நிகழவில்லை. அதனால், கதை அதன் போக்கில் ஒரேமாதிரியாகச் சென்று கொண்டிருப்பதோடு மிக மெதுவாக நகர்கிறது. அது எந்தவகையிலும் ஈர்க்காத காரணத்தால், படம் முடியும்போது ‘எதற்கு இந்த படத்தைப் பார்த்தோம்’ என்கிற கேள்வியே மனதில் எழுகிறது. திரைக்கதையை எழுதிய ஜெல்லா ஸ்ரீநாத், அர்ஜுனா பட்டூரி, வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் மட்டுமே இதற்குப் பொறுப்பு.

சில ஆண்டுகளுக்கு முன் ஜெரார்டு பட்லர் நடித்த ‘300’ படமானது ’300 பருத்திவீரர்கள்’ என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. ஒரு கிராபிக் நாவலைப் படிப்பதற்கு ஒப்பான ஒரு அனுபவத்தைத் தரும் படம் அது. அதில் வரும் ஜெரார்டு போன்றே, இதில் நானியும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். அந்த படத்தினைப் பார்த்தவர்களுக்கு, கருமையும் செம்மையும் மஞ்சளும் கலந்த அப்படத்தின் ஒளி வண்ணம் நிரம்பவே பிடித்திருக்கும். அதே போன்றதொரு நிறக்கலவை ‘தசரா’விலும் இருக்கிறது; ஆனால், அது பார்வையாளர்களை உத்வேகமூட்டுவதற்குப் பதிலாகப் படத்தில் வரும் கதை மாந்தர்கள் எந்நேரமும் சாராயக் கிறக்கத்தில் கிடப்பது போல அவ்வண்ணங்களும் திரையில் ஆங்காங்கே உறைந்து கிடக்கின்றன. அதனால் பயன் ஏதுமில்லை. இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை என்று வேறு எதையும் காண இயலவில்லை. மனம் அதனை உணரும்போது, அதுவே ஒரு விசையாக மாறி நம்மை தியேட்டரில் இருந்து வீட்டுக்கு முன்னோக்கித் தள்ளுகிறது. ’நானியை ஜெரார்டு பட்லர் உடன் ஒப்பிடுவாயா என்று ’வடிவேலு பாணியில்’ நம்மை நாமே திட்டிக்கொள்ளவும் வகை செய்கிறது. 

உதய் பாடகலிங்கம்

கூட்டணி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!

ஓபிஎஸ் மேல்முறையீடு: ஏப்ரல் 20-க்கு ஒத்திவைப்பு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *