கேப்டன் மில்லர் படப்பிடிப்பு: தற்போதைய நிலவரம் என்ன?
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு, தற்போது உரிய அனுமதி பெறப்பட்டு மீண்டும் இன்று (ஏப்ரல் 26) முதல் அதே இடத்தில் துவங்கியுள்ளது.
வாத்தி படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ‘ராக்கி’ ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தனுஷுடன் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அங்கு பிரம்மாண்ட செட்டுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், குண்டு வெடிக்கும் காட்சிகளால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வனப்பகுதியில் அத்துமீறல்
இதற்கிடையே வனப்பகுதியில் நடைபெறும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி பெறவில்லை என்றும், அத்துமீறல் செய்ததாக தான் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, ம.தி.மு.க., கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் ராம உதயசூரியன் குற்றஞ்சாட்டினார்.
அவர் அளித்த புகாரில், மத்தலம்பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (கேஎம்டிஆர்) பாதுகாப்பு மண்டலத்தில், படக்குழு சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே சட்டவிரோதமாக மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக உதயசூரியன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளில் அனுமதி பெறாத காரணத்தினால் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தற்காலிக தடைவிதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசும் போது, “படக்குழு திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் படப்பிடிப்பு நடத்த சென்னையில் அனுமதி வாங்கி உள்ளனர். அந்த அனுமதியை பயன்படுத்தி தென்காசியில் உள்ள இடங்களிலும் அவர்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை நடத்தக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தலை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தனிநபரின் தூண்டல்
இதுகுறித்து கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “இந்த இடமானது வனத்துறைக்கு சொந்தமானது அல்ல. தனியாருக்கு சொந்தமானது. தனியாரிடம் இருந்து 85 ஏக்கருக்கு அனுமதி பெற்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் இது விவசாயம் செய்ய முடியாத நிலம். காவல்துறையிடமும் படப்பிடிப்பிற்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. தனிநபரின் தூண்டுதலால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது.
அதிகாரிகளும் முறையாக அனுமதி பெறப்பட்டிருக்கிறதா, விவசாயம் செய்யக்கூடிய நிலமா என்றெல்லாம் ஆய்வு செய்துள்ளார்கள். இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைத்துப் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்
இந்த நிலையில் நேற்று மாவட்ட அதிகாரிகள் படக்குழுவினர் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதி பெறப்பட்ட உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ: பிடிஆர் பதில்!
கர்நாடகா தேர்தல்: பிரச்சாரத்தில் தோசை சுட்ட பிரியங்கா