நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் கடும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டேனியல் பாலாஜி (48). காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன் இருவரின் படங்களும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகக் காரணமாக அமைந்தது. இதனால் மிரட்டல் வில்லன் என ரசிகர்களாலும் புகழப்பட்டார்.
திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு (மார்ச் 29) திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாலாஜியின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், கவுதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்ட விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மறைந்தும் பாலாஜி இவ்வுலகை பார்த்துக்கொண்டு இருப்பார் என உருக்கத்துடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவில் இணைந்தது ஏன்? – தடா பெரியசாமி விளக்கம்!
என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்… உண்மையா?
டேனியல் பாலாஜி மறைவு: கெளதம் மேனன், வெற்றி மாறன் அஞ்சலி!