கிராமத்து காமெடியில் தண்டட்டி
இந்தியாவில் பெண்கள் அணியும் நகைகளில் தண்டட்டி, சவுடி இரண்டும் முக்கிய பங்கு வகித்து வந்தது.
அரசர்கள் பற்றிய திரைப்படங்களில் ஆண்களும் சவுடி அணிந்திருப்பார்கள். தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்து பெண்கள், வசதியான பெண்கள் தண்டட்டி அணிவதை குடும்ப கெளரவமாகவும், தங்கள் செல்வ செழிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதற்கடுத்த நிலையில் இருப்பவர்கள் வட்டவடிவிலான சவுடி அணிந்தனர். அவர்களின் மறைவுக்கு பின் இறந்தவரின் பெண்களுக்கு இந்த நகையை பிரித்தோ, அல்லது ஒருவராக இருந்தால் மொத்தமாகவோ கொடுப்பது குடும்ப வழக்கமாக இருந்து வருகிறது.
நவீன சமூகத்தில் தண்டட்டியும், சவுடியும் அதிகமான பயன்பாட்டில் இல்லை. இதற்கு காரணம். மேற்கண்ட ஆபரணங்களை அணிவதற்கு குழந்தையாக இருக்கும்போதே காதுகளில் துளையிட்டு வளர்க்க வேண்டும்.
அதற்கென்று நாவிதர்கள் இருந்தார்கள். தற்போது அதன் சூட்சுமம் தெரிந்த நாவிதர்கள் இல்லை.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் படத்திற்கு தண்டட்டி என பெயர் வைத்துள்ளார்கள். ராம் சங்கையா இயக்கி உள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் ரோகிணி, பசுபதி, தீபா, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கதைபற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாகி உள்ளது.
கிராமத்து வயது மூத்த பெண்ணான ரோகிணியின் காதில் தொங்கும் தண்டட்டி மீது எல்லோருக்கும் ஒரு கண். அவரும் அதைபற்றி பெருமையாக பேசித் திரிவார்.
ஒரு நாள் அவர் இறந்து விட அந்த தண்டட்டிக்கு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதை தீர்த்து வைக்க போலீசான பசுபதி வருகிறார். இதை வைத்து காமெடியாக சொல்லும் படம் தண்டட்டி. அதோடு கிராம மக்களின் வாழ்க்கையில் தங்கம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் பேசும் படம் என்கிறார்கள்.
இராமானுஜம்
டிஜிட்டல் திண்ணை: ஆம்பளையா நீ? எடப்பாடியின் ஈரோடு டென்ஷன் பின்னணி!
நானியுடன் டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன்