dada saheb phalke award and its politics: who is waheeda rehman?

தாதாசாகேப் விருதில் மறைந்திருக்கும் சங்கதி: யார் இந்த வஹீதா ரஹ்மான்?

சினிமா

தங்கள் வாழ்நாளில் திரைப்பட மற்றும் கலைத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று `தாதாசாகேப் பால்கே விருது’.

’இந்திய சினிமாவின் தந்தை’ என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி முதன்முறையாக 1969ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதினை பெற்றார் பாலிவுட் நடிகை தேவிகா ராணி சவுத்திரி.

அதன்பின்னர் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரை இந்த விருதினை இந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய  தனித்துவமிக்க ஆளுமைகள் பலர் பெற்றுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட போதே அப்போது நெருங்கிய நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து விருது வழங்கப்பட்டதோ என்ற குற்றச்சாட்டு  மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எழுந்தது.

மேலும் அப்போது அரசியலில் இறங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிர கவனம் செலுத்தி வந்தார் என்பதும் பாஜக அரசின் விருது அறிவிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

இந்த நிலையில்  2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செப்டம்பர் 26ஆம் தேதி அறிவித்துள்ளார்.

இதில் மறைந்திருக்கும் அரசியல் குறித்து பேசுவதற்கு முன்னதாக வஹீதா ரஹ்மானின் வாழ்க்கையையும் அவரது சாதனையையும் பார்த்து விடலாம்.

யார் இந்த வஹீதா ரஹ்மான்?

பழம்பெரும் பாலிவுட் நடிகையாக பெயர் வாங்கியுள்ள வஹீதா ரஹ்மான் தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்தவர் என்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.

முகமது அப்துர் ரஹ்மான் – மும்தாஜ் பேகம் தம்பதியருக்கு 4வது மற்றும் கடைசி மகளாக பிப்ரவரி 3, 1938ஆம் ஆண்டு பிறந்தவர் தான் வஹீதா ரஹ்மான்.

சிறுவயதிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர்,  சென்னையில் பரதநாட்டியம் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் மாவட்ட ஆணையராகப் பணிபுரிந்த அவரது தந்தையின் பணிமாறுதல் காரணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட்டில் கல்வி பயின்றுள்ளார்.

சிறுவயதில் டாக்டராக வேண்டும் என்று கனவு கண்ட வஹீதா ரஹ்மானின் வாழ்க்கை அவரது தந்தையின் திடீர் இறப்பால் 13 வயதிலேயே மாறத்தொடங்கியது.

தந்தையின் மறைவுக்கு பின் தாயும் நோயில் வீழ, குடும்பத்தில் நிலவிய வெறுமையான சூழ்நிலை வஹீதாவை கல்வியில் இருந்து வெளியேற்றியது.

எனினும் துன்பங்கள் தான் வெற்றிக்கான வெளிச்சம் என்பது போல் அவரது திறமை அங்கு தான் துளிர்விட தொடங்கியது.

கட்டாயத்தின் பேரில் என்றாலும் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக, நடன மங்கையாக திரைப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி நடனம் மற்றும் நடிப்பின் மீது பேரார்வம் கொண்ட வஹீதா முதன்முதலில் 1956ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

எனினும் அதற்கு ஓராண்டு முன்னரே குரூப் டான்சராக பணியாற்றியிருந்த அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜாலு மாராயி’ படம் வெளியாகியிருந்தது.

குரூப் டான்சர் டூ  ஹீரோயின்!

எனினும் அங்கிருந்து தான் வஹீதா ரஹ்மானின் வெள்ளித்திரை பயணம் தொடங்கியது. எனினும் அவர் எப்படி பாலிவுட்டின் ஹீரோயினாக உருமாறினார் என்பதை இந்தியாவின் பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான குருதத்தின் நண்பர் ஆல்வி தனது ‘Ten Years with Guru Dutt – Abrar Alvi’s Journey’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ஒருமுறை  குருதத்தும் அவருடைய ஆத்ம நண்பர் அப்ரார் ஆல்வியும் ஒரு தயாரிப்பாளரை பார்க்க ஹைதராபாத் சென்றுள்ளனர். காரில் போகும்போது, முன்னால் ஒரு எருமை மாடு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. வழிவிட வேண்டி காரின் ஹாரனை ஆல்வி அழுத்தியபோது, எருமை மாடு மிரண்டு, திரும்பிப் பாய்ந்து காரை முட்டி சேதமாக்கியது.

பலத்த சேதத்திற்குள்ளான காரை பழுதுபார்க்கும் பணிமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

இதற்கிடையே திட்டமிட்டபடி தயாரிப்பாளரை சந்திக்க முடியாத விரக்தியில், ஆல்வியும் குருதத்தும் பணிமனை அருகில் இருந்த ஒரு விநியோகஸ்தரின் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் பக்கத்தில் இருந்த ஒரு வளாகத்தில் பளிச் என மின்னல் போல் ஒரு பெண் செல்வதை பார்த்த இருவரும், அந்தப் பெண் தெலுங்கு படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடிய வஹீதா ரஹ்மான் என விநியோகஸ்தர் வாயிலாக தெரிந்துகொண்டார்கள்.

அப்போது தான் முதன்முறையாக குருதத்தும், வஹீதா ரஹ்மானும் சந்தித்துக்கொண்டனர். அதுமுதல் குருதத்தை தனது திரைத்துறை வழிகாட்டியாக கருதினார் வஹீதா.

dada saheb phalke award and its politics: who is waheeda rehman?

அதனைத்தொடந்து 1956ம் வருடம் வஹீதாவை ஹீரோயினாக்கி சி.ஐ.டி என்ற படத்தை குருதத் தயாரித்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற அத்திரைப்படத்தின் மூலம் வஹீதா ரஹ்மான் திரையுலகில் புதிய உச்சம் தொட்டார்.

அதன்பின்னர் குரு தத் இயக்கி, ஹீரோவாகவும், வஹீதா கதாநாயகியாகவும் நடித்த  ‘பியாசா’ படமும் ஹிட் அடிக்க அவரது பெயரும் புகழும் ஓங்கியது.

இதைத்தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்துப் புகழையும், விருதுகளையும் குவித்தார். 1971ல் வெளியான ‘ரேஷ்மா அவுர் ஷெரா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார் வஹீதா ரஹ்மான்.

1960-70களில் ‘Kaagaz ke Phool’, ‘Chaudhavi Ka Chand’, ‘Saheb Biwi Aur Ghulam’, ‘Guide’, ‘Khamoshi’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் ஹீரோயினாக வலம் வந்தார் வஹீதா. கடைசியாக தமிழில்  கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தில் அல்சைமர் பாதிக்கப்பட்ட நோயாளியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

திரையுலகிற்கு வஹீதா ரஹ்மான் செய்த சாதனைகளை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் வகையில், 1972 இல், இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதையும், 2011 இல் பத்ம பூஷன் விருதையும் வழங்கியுள்ளது.

dada saheb phalke award and its politics: who is waheeda rehman?

சினிமா திரையுலகில் வெற்றிகரமான நடிகை என்ற பெயருக்கு பின்னால் வஹீதா ரஹ்மானின் வாழ்க்கையிலும் சர்ச்சை வழிந்தோடியது.

தனது வழிகாட்டியான குருதத் வாழ்க்கையில் நெருக்கமான வஹீதா, பின்னர் தனது உறவை துண்டித்துக்கொண்டார். இதனால் தனது மனைவி கீதா தத்தையும் விவகாரத்து செய்த  குருதத் 1964 ஆம் ஆண்டு தனிமையிலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து ஏப்ரல் 1974 ஆம் ஆண்டு தனது ஷாகூன் படத்தில் இணைந்து பணியாற்றிய ஷஷி ரேகியை மணந்தார். அவர்களுக்கு சோஹைல், காஷ்வி 2 மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு, அவர்களுடன் பெங்களூரில் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்த வஹீதா, தனது கணவரின் மரணத்திற்கு பிறகு,  வயது மூப்பின் காரணமாக  மும்பையின் பாந்த்ராவில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.

விருது அறிவிப்பும் பின்னணி அரசியலும்!

இந்நிலையில் தான் சினிமாவிற்கு வஹீதா ரஹ்மான் செய்த அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு.

எனினும் இந்த விருதுக்கு பின்னால் பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

dada saheb phalke award and its politics: who is waheeda rehman?

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மசூதிகள், சர்ச்சுகள் மீது தாக்குதல், இஸ்லாமியர்கள் வீடு இடிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், கலவரங்கள் தொடர்ந்து வருகிறது.

மேலும் சிறுபான்மையின மக்களை குறிவைத்து தி காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற திரைப்படங்களும் தேசிய அளவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக வெளியான சமயத்தில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான NargisDutt விருது அறிவிக்கப்பட்டது.

இப்படி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளும், சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இதுகுறித்து ஒருமுறை கூட கருத்து தெரிவிக்காமல் ஊடகங்களையும், இந்த சம்பவங்களையும் தவிர்த்து வருகிறார் பிரதமர் மோடி.

இதற்கிடையே அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தற்போது தனது இமேஜை மாற்றும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவே தோன்றுகிறது.

அதன் வெளிப்பாடாகவே மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது.

1969ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே விருது இதுவரை இரண்டு இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  1981 ஆண்டு இசையமைப்பாளர் நெளஷத் அலிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  43 ஆண்டுகள் கழித்து தற்போது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதிகளுக்கு, கண்ணாடி கவர் ஒட்டி மறைக்கும் முயற்சியாகவே வஹீதா ரஹ்மானுக்கான மத்திய அரசின் இந்த விருது அறிவிக்கப்பட்டது,  தொடந்து பிரதமர் மோடியின் மனம் திறந்த பாராட்டும் பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி தேர்தல் நெருங்க நெருங்க… இஸ்லாமிய மக்களிடம் இன்னும் நெருங்கி வரும் பிரதமர் மோடியின் மூவ்களை இனி அடிக்கடி காணமுடியும் என்று உறுதியாக நம்பலாம்.

இது ஒருபுறம் இருந்தாலும், தாதாசாகேப் பால்கே விருதுக்கு வஹீதா ரஹ்மான் முற்றிலும் பொருத்தமானவர் என்பதை அவர் இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளும், அவரது பங்களிப்புமே சான்றாக வரலாற்றில் உள்ளது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை!

கிறிஸ்டோபர் ஜெமா

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!

அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

2 thoughts on “தாதாசாகேப் விருதில் மறைந்திருக்கும் சங்கதி: யார் இந்த வஹீதா ரஹ்மான்?

  1. I 100% agree with the last Paragraph of
    Mr Christopher’s Essay about the legendary
    Artiste Ms Waheedha Rehman.
    Most certainly she fully deserves the precious Dhadha Shaheb Award no matter whatever be the motive or purpose of those who motioned it.

  2. கட்டுரையாளர் கிறிஸ்டோபர்..
    மோடி பற்றி தூற்ற நல்ல வாய்ப்பு..
    இனி முஸ்லீம் ஓட்டு மோடிக்கு தானாம்…
    என்ன ஒரு கேவல மன பான்மை…
    😡😡😡😡😡😡😡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *