ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில் பிப்ரவரி 3 அன்று வெளியான டாடா திரைப்படம் இந்த ஆண்டு இதுவரை வெளியான 23 படங்களில் அதிகபட்ச லாபத்தை திரையரங்கு வசூல், பிற உரிமைகள் விற்பனை மூலம் பெற்று தந்த படமாக முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் நடித்துள்ள டாடா படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். பிரம்மாண்டமான அரங்குகள், சண்டை காட்சிகள், குத்து பாடல்கள் என எதுவும் இல்லாத டாடா திரைப்படம் அதிகபட்சமாக ஐந்து கோடிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்கின்றனர் சினிமா தயாரிப்பு நிர்வாகிகள்.
அஜீத்குமார், விஜய் போன்ற நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் வெளியான துணிவு, வாரிசு என இரண்டு படங்களுக்கும் பிரம்மாண்டமான விளம்பரங்கள், ஊடக வெளிச்சம், ரசிகர்கள் கூட்டம் அதிகமான திரையரங்குகள், பன்மடங்கு கூட்டப்பட்ட டிக்கெட் கட்டணம் என எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் அசல் தேறுமா? படத்தை தயாரித்தவருக்கும், வாங்கியவர்களுக்கும் லாபம் கிடைக்குமா என்கிற போராட்டம் நிகழ்ந்தது.
இப்படிப்பட்ட எந்த வாய்ப்புகளும் இல்லாத டாடா திரைப்படம் தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிப்ரவரி 3 அன்று வெளியானது. முதல் வார முடிவில் சுமார் 9 கோடி ரூபாய் மொத்த வசூலாக டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
படத்தின் தொலைக்காட்சி, ஓடிடி உரிமை, பிற உரிமைகள் மூலம் டாடா படத்தின் மொத்த வருவாயாக ஐம்பது கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கின்றனர் வணிக வட்டாரத்தில்.
இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என திரைப்பட வியாபாரிகள், விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, “ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு போரடிக்காத, பில்டப் இல்லாத திரைக்கதை பிரதானமானது. அது டாடா படத்தில் இருந்தது. தயாரிப்பு செலவிற்கான சினிமா வட்டியும், நடிகர்கள் சம்பளமும் 60% ஆக்கிரமிக்கும். ஆனால் டாடா படத்தில் இவை இரண்டும் இல்லை.
முழுக்க முழுக்க தயாரிப்பாளர் பைனான்ஸ் வாங்காமல் படத்தை தயாரித்து நேரடியாக படத்தை வெளியிட்டார். பட வெளியீட்டிற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வது படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் முக்கியமானது. அதனை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நேர்த்தியாக செய்து கொடுத்ததால் தயாரிப்பாளர் அம்பேத்குமார் முழுமையான வெற்றியை ருசிக்க முடிந்திருக்கிறது.” என்றனர்.
இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வாத்தி, செல்வராகவன் கதைநாயகனாக நடித்திருக்கும் பகாசூரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியானாலும் சென்னை போன்ற நகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டாடா படம் 80% டிக்கெட் விற்பனையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இராமானுஜம்
அன்பு ஜோதி ஆசிரமம்: மேலும் 5 பேர் காணவில்லை – தொடரும் மர்மம்!
யுஜிசி நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!