டி3 – ஈர்க்கும் த்ரில்லர் கதை!
சில படங்களின் டைட்டில் பார்த்தவுடன், இந்த படம் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருவோம்.
படம் பார்த்துவிட்டு வருபவர்களும், கிட்டத்தட்ட அதே தொனியில்தான் கதை சொல்வார்கள். ஆனால், நாமே தியேட்டருக்குச் சென்றால் வேறுவிதமான அனுபவம் கிடைக்கும்.
ஆங்கிலத்தில் அல்லது ஓரிரு எழுத்துகளில் அமையும் டைட்டில்கள் அப்படியொரு அனுபவத்தை நமக்குத் தரும். 2019இல் வெளியான ‘வி1’ அதற்கொரு உதாரணம்.
மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற வி1, அதன்பின் ஓடிடி தளங்களில் வெளியாகி பரவலான ரசிகர்களைச் சென்றடைந்தது.
தற்போது பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, ராகுல் மாதவ், அபிஷேக், மேத்யூ வர்கீஸ், அருள் சங்கர், காயத்ரி யுவராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘டி3’ படமும் அதே போன்றதொரு தோற்றத்தோடு களமிறங்கியிருக்கிறது.
டி3 என்பது ஒரு காவல்நிலையத்தின் பெயர் என்பதை ட்ரெய்லரே சொல்லிவிட்டதால், இது ஒரு புலனாய்வுக் கதை என்பது தெளிவானது. பரபரப்பூட்டும் திரைக்கதை மட்டுமல்லாமல், ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான வகையிலும் இப்படம் அமைந்திருக்கிறதா என்ற கேள்வியே இதனைப் பார்க்கத் தூண்டியது.

தொடர் கொலைகள்!
ஒரு பெண் மொபைல் போனை காதில் வைத்துக்கொண்டு ‘ஹிப்னாடிசம்’ செய்யப்பட்டவர் போல ’ஒருமாதிரியாக’ நடந்து போகிறார். வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் வரும் லாரி மோதி இறக்கிறார்.
நள்ளிரவு நேரத்தில், குற்றாலத்தில் இந்த விபத்து நடக்கிறது. இந்த வழக்கை விசாரிப்பவர் குற்றாலம் டி3 காவல் நிலையத்தில் பணியாற்றும் விக்ரம் (பிரஜின்). சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதே காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வருகிறார்.
அப்போதுதான், அவருக்குத் திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. மனைவி மாயா (வித்யா பிரதீப்), நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் தனது கணவருக்காக வீட்டில் காத்திருக்கிறார்.
அன்றைய தினமும் மாயா அவ்வாறே காத்திருக்க, ஒரு கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளச் செல்கிறார் விக்ரம். கொலையுண்ட நபர், பிரபல ரவுடி செந்தாமரை உடன் இருந்தவர். போலீசாரிடம் செந்தாமரையைக் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சொல்லும் விக்ரம், தன்னைத் தேடி வந்த பள்ளி மாணவி ஒருவரிடம் என்ன புகார் என்று கேட்கிறார்.
மது போதைக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் வேலையைச் செய்து வந்த தனது சகோதரர் மது குடித்து இறந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்திருப்பது நம்பும்படியாக இல்லை என்கிறார் அந்த மாணவி. அவரது சகோதரர் இறந்த விதமும், மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் இறந்ததும் ஒரேமாதிரியாக இருப்பதை விசாரணையில் கண்டறிகிறார் விக்ரம்.
அந்த நேரத்தில், போலீஸ் சூப்பிரண்டண்டின் மகன் அதே பாணியில் கடத்தப்பட்டதாகத் தகவல் கிடைக்கிறது. மொபைல் பேசியவாறே லாட்ஜில் இருந்து அவர் வெளியே சென்றதாகத் தகவல். உடனே, குற்றாலம் வட்டாரத்தில் காணாமல்போன, விபத்துக்குள்ளான நபர்களின் கோப்புகளை தேடச் சொல்கிறார் விக்ரம்.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் இதே போன்று மொபைலை காதில் வைத்தவாறு சென்றதாக சாட்சிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்த ஒரு அம்சம், அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டது ஒரு கும்பல்தான் என்ற யூகிப்பில் விக்ரமைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
அந்த இலக்கை நோக்கிச் செல்லும்போது, மீண்டும் குற்றாலம் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதே ஒரு சதி வலைதான் என்பதை அறிகிறார் விக்ரம். அப்போது, அவரது மனைவியின் நிலையும் அபாயத்திற்கு உள்ளாகிறது. நடந்த குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்கள் அப்படிச் செய்வதற்கு என்ன காரணம் என்பதைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
தொடர்ந்து ஒரேமாதிரியாகச் சில நபர்கள் விபத்துக்குள்ளாவது போலீஸ் விசாரணையில் கொலைகளாக உறுதி செய்யப்படுவதுதான் ‘டி3’யின் மையம். அந்த புள்ளி வரை திரைக்கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது.
குற்றப் பின்னணி கூட ரசிகர்கள் ஏற்கும்விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்றபோதும், முன்பாதியில் இருந்த வேகம் பின்பாதியில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சமீபத்தில் இனியா நடித்து வெளியான ‘காபி’ என்ற படமும், இதே போன்றதொரு பின்னணியிலேயே இருந்தது. அப்படம் வெளியாகிச் சில நாட்கள் கழித்து, அதில் வருவது போன்றே ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆண், பெண்களைக் கடத்திய கும்பலைக் காவல் துறை கைது செய்தது. இந்த படமும் கிட்டத்தட்ட அதே தொனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கம்மி!
ஒருகாலத்தில் டிவியில் பிரஜின் முகம் பார்த்தாலே குதூகலித்த பெண் ரசிகைகள் உண்டு. சில பல ஆண்டுகளில் அப்பெண்கள் எல்லாம் குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலானபிறகும், அதே தோற்றப்பொலிவோடு பிரஜின் மட்டும் இருப்பது ஆச்சர்யம்தான்.
அழகு மட்டும் இருந்தால் போதுமா என்று சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். போலீஸ் படம் என்றாலே மிடுக்காகத்தான் திரையில் தெரிய வேண்டும் என்று மெனக்கெடாமல் இருந்தது அவரையும் நம்மையும் காப்பாற்றியிருக்கிறது.
வித்யா பிரதீப் மட்டுமல்லாமல், செந்தாமரை எனும் பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர், அவரது கையாள், அருள் சங்கர், ராகுல் மாதவ், காயத்ரி யுவராஜ் என்று பலரும் இதில் மிகச்சில காட்சிகள் மட்டுமே நடித்திருக்கின்றனர். காரணம், பல காட்சிகள் பிரஜினை மையமாகக் கொண்டு சுழல்வதுதான்.
பிரஜின் கூடவே வரும் கான்ஸ்டபிள் பாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார். அந்த பாத்திரம் அந்நியமாகத் தெரியாதவாறு பாந்தமாக வந்து போயிருக்கிறார். இதில் நடித்தவர்களில் பலர் புதுமுகங்கள் இல்லை என்றபோதும், ரசிகர்களிடம் பெரிதாகப் பிரபலமானவர்கள் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இரவு நேர குற்றாலத்தைக் காட்டும் மணிகண்டன் பிகேவின் ஒளிப்பதிவும், த்ரில் ஊட்டும் ஸ்ரீஜித் எடவானாவின் பின்னணி இசையும் ‘டி3’ விறுவிறுப்பாகத் திரையில் தெரியக் காரணம். ராஜா ஆறுமுகத்தின் படத்தொகுப்பு, பின்பாதியில் எங்கே கத்திரி போடுவது என்று முடிவெடுப்பதில் தடுமாறியிருக்கிறது.
குற்றம் நிகழ்வதன் பின்னணி கிளைமேக்ஸில் திரையில் விலாவாரியாகச் சொல்லப்படுகிறது. அதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதேபோல, லாஜிக் ஓட்டைகளை யோசிக்கத் தொடங்கினால் அதற்கும் இக்கதையில் வாய்ப்புண்டு. முக்கியமாக, பிரஜினை அடியாட்கள் அடிக்கும்போது உடன் வரும் சப் இன்ஸ்பெக்டர் தேமெவென நிற்கிறார். அங்கேயே பிரஜின் உஷாராகி இருக்க வேண்டும்.

ஆனால், சில காட்சிகள் கழித்தே அவர் வில்லன் ஆள் என்று அதற்கான காரணம் சொல்லப்படுகிறது. அது போன்றே கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியிலும் பிரஜினும் வில்லனும் சண்டையிட, இன்னும் இரண்டு பேர் வேடிக்கை பார்ப்பதாக அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
முன்பாதியில் பல காட்சிகள் இருந்தாலும், ‘ஹாஃப் வே’ பாணியில் ஒவ்வொரு காட்சியும் ஆரம்பிப்பதாக அல்லது முடிவதாகக் காட்டப்படுகிறது. அது, திரைக்கதை பரபரப்பாக நகர துணை புரிகிறது. ஆனால், பின்பாதியில் அதே உத்தி சரியான விளக்கங்களை ரசிகர்கள் பெற முடியாமல் தவிப்பதற்கு வித்திடுகிறது.
‘உங்களைச் சுத்தி யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்குறாங்க சார்’ என்று சார்லியின் பாத்திரம் பிரஜினிடம் கதறுவதும், ‘யார் சுட்டாங்க’ எனும் கேள்விக்குப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவர் ‘துப்பறிவாளன்’ போஸ்டரை கை காட்டுவதும் எதற்காகவென்று இயக்குனர் கடைசிவரை விளக்கவில்லை.
கமர்ஷியல் ஹீரோ போல பிரஜினுக்கு சண்டைக்காட்சிகள் தராமல், யதார்த்தம் நிறையும் வகையில் காட்சிகளை ஆக்கியிருந்தால் ‘டி3’ இன்னும் சுவையாக இருந்திருக்கும்; கூடவே, ‘பாகம் 2’ எடுக்கும் ஆசையைக் கைவிட்டு இந்த படத்தையே இன்னும் ஒரு அரை மணி நேரம் நீட்டித்திருந்தால் தமிழில் மிக முக்கியமான த்ரில்லர் படம் என்ற அந்தஸ்து கிட்டியிருக்கும்.
அதையெல்லாம் மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. அனைத்தையும் மீறி இந்த புது முயற்சி சுவாரஸ்யமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தற்போது குறைவான தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘டி3’, விரைவில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெறலாம்; ஏன், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு அது பெரிய கவன ஈர்ப்பை உருவாக்கலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதே ‘டி3’ இயக்குனர் பாலாஜி மற்றும் படக்குழுவினரின் வெற்றி..!
நெல் ஜெயராமன்: மானிய விலையில் விதைகள்…ரூ.50 லட்சம் ஒதுக்கீடு!
Comments are closed.