19 ஆண்டுகள்… 24 படங்கள்… ஆனாலும் : பிரஜின் பேச்சு!

சினிமா

பிரஜின் நடிப்பில் ‘D 3’ என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தை பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ்.சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளார். ஜே.கே.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார்.

சென்னையில் நேற்று (நவம்பர் 05) ‘D3 ‘ படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசுகையில், “இது ஒரே நாளில் நடக்கும் கதை. இந்தப் படத்தின் வரிசையில் D2, D1 படங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே மனித உழைப்பைக் கடுமையாகக் கொடுக்க வேண்டி இருக்கும்.


இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். படப்பிடிப்பு நாட்களில் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் கூட படப்பிடிப்பு நடந்தது. அந்த அளவிற்கு உழைத்தோம் .பிரஜின் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஆதரவும் உழைப்பும் அளவிட முடியாதது.

இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் சாமுக்கு மிகப்பெரிய நன்றி.சினிமாவில் யாரும் எளிதாக மேலே வர முடியாது. பிரஜின் போன்ற உழைப்பாளிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. அவருக்கான  இடம் நிச்சயம் கிடைக்கும்.

இந்தப் படம் பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் கடந்து தான் உருவாகி இருக்கிறது. இன்று இந்த விழா நடக்கிறது. ஆனால் நேற்று வரை  பிரச்சினை இருந்தது. இந்தப் படம் நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினை பற்றிச் சொல்கிறது. இந்த படத்தைப் பார்த்தால் வெளியே யாரிடமும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்க கூட யோசிக்கிற நிலை வரும்.

இது திகில் படம் காலம் என்கிறார்கள். ஆனால் யாரும் வேண்டுமென்றே அப்படி எடுப்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் இந்த வகை படங்கள் தான் எடுக்க முடியும். அதனால் தான் இதை நான் எடுத்திருக்கிறேன். இது ஒரே இரவில் எழுதிய கதை என்று சொல்லலாம். பீமாஸ் கிரிக்கெட் கிளப் என்று இருந்த நண்பர்கள் குழு தயாரிப்பு நிறுவனமாகி உள்ளது” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், “நான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறேன். 19 ஆண்டுகளாக இந்த ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை. பாதியில் நின்று போனதில்லை. நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான். தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை.

இது  ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கதை கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன்.

படம் பண்ணுவதை விட இன்று அதை விளம்பரப்படுத்துவது சிரமமாக உள்ளது. . நாங்கள் முடிந்தவரை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதற்குப் பலரும் ஒத்துழைத்தார்கள். இந்தப் படத்தின் போஸ்டர்கள் பேசப்பட்டன. என் சினிமா, தொலைக்காட்சி அனுபவங்களில் இந்தப் படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இராமானுஜம்

T20Worldcup2022: கோட்டை விட்ட வங்காளதேசம்… கொடி நாட்டிய பாகிஸ்தான்!

துண்டான ரயில் பெட்டிகள் இணைப்பு : விசாரணைக்கு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *