நடிகர் தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி 22ஆம் தேதியன்று தனுஷ் அந்தப் படப்பிடிப்பில் இணைகிறாராம். ஏப்ரல் வரை அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனுஷின் 50-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் ஜனவரி 18 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிற நடிகர் நடிகைகள், இயக்குநர் யார் என்பது போன்ற விபரங்களை அறிவிக்கவில்லை.
தனுஷ் 50 படத்தை இயக்கப்போவது யார்? என்பது உள்ளிட்ட எந்த விவரத்தையும் சன் பிக்சர்ஸ் வெளியிடாததற்கு காரணம், இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில்தான் தொடங்கவிருக்கிறது என்பதால்,
அந்த நேரத்தில் மற்ற நடிகர் நடிகைகளின் தேதிகளை உறுதி செய்துவிட்டு அதன்பின்பு அறிவிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதோடு இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் கூறியிருக்கிறாராம்.
அனிருத் இப்போது ஒப்புக்கொண்டுள்ள படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றால் அவரால் இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு வேலை செய்ய முடியுமா என்பது தெரியாத நிலையில் அவருடைய நிலை முழுமையாகத் தெரிந்த பின்னர் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.
எல்லாம் சரி, அந்தப்படத்தை இயக்கப்போவது யார்? என்கிற கேள்விக்கு தனுஷ்தான் இயக்குநர் என்கிறார்கள்.
அவர் ஒரு கதையை சன் நிறுவனத்திடம் சொல்லி அது சரி என்கிற நிலை வந்தபின்னே தான் இந்த அறிவிப்பு வெளியானது என்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க மாட்டேன், பேட்டி கொடுக்க மாட்டேன் என கூறிவந்த தனுஷ் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என கேட்டால், எல்லாம் திருச்சிற்றம்பலம் வெற்றிதான், அது மட்டுமில்லை, ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படத்தின் வெற்றி முக்கியமானது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், அனைத்து மொழிகளிலும் சன் பிக்சர்சின் ஊடக பிரம்மாண்டம் இருப்பதால் இது சாத்தியமானது என்கிறது தனுஷ் வட்டாரம்.
இராமானுஜம்
வேலைவாய்ப்பு : சென்னை விமான நிலையத்தில் பணி!
இன்று சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!