முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா!

சினிமா விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையே மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.

இதன்படி இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 12) நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டா, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய ஐந்து முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

குறிப்பாக ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த மொயீன் அலி 14 ரன்களுக்கு விக்கெட்டை பறி கொடுத்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பட்லர் 30 ரன்களில் ஷமி பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்னா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 111 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா – ஷிகர் தவான் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். தவான் நிதானமாகவும், ரோஹித் சர்மா அதிரடியாகவும் விளையாடினர். இதனால் இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 76 ரன்களுடன் தவான் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற சாதனையை ரோஹித் சர்மா – தவான் (5,108 ரன்களுடன்) படைத்தனர். முதல் இடத்தில் சச்சின் – கங்குலி ஜோடி உள்ளனர். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலிக்குப் பிறகு ரோஹித் மற்றும் தவான் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான தொடக்க ஜோடிகளாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு முன்னதாக கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6,609 ரன்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரோஹித் – தவான் ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் 114 இன்னிங்ஸில் 5,372 ரன்களும் மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடிகளான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 102 இன்னிங்ஸில் 5,150 ரன்களும் எடுத்துள்ளனர்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச அளவில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351) சிக்ஸர், இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331) சிக்ஸர், மூன்றாவது இடத்தில் ஜெயசூர்யா (270) சிக்ஸர் உள்ளனர்.

இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 14) நடக்கிறது.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *