இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர், முத்தரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அரிசி.
அறிமுக இயக்குனர் எஸ்.ஏ.விஜயகுமார் அரிசி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், முத்தரசன் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ரஷ்யா மாயன் நடித்துள்ளார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் அரிசி படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றார்கள்.
இந்த படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியை மையமாக வைத்து உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது தான் இந்த அரிசி படத்தின் நோக்கமும் சிறப்பும் என்று இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு கிராமங்களில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த பகுதிகளில் வாழும் உண்மையான கிராம விவசாயிகளும் அரிசி படத்தில் நடித்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மோனிகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் அரிசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தோழர் முத்தசரனுக்கு “சமத்துவ நாயகர்” என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரிசி படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் மறுபடி போகணும்னா… கண்டிஷன் போடும் பிரதீப்!
பொன்முடி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைபாடு என்ன?: நீதிமன்றம் கேள்வி!