மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சினிமா ஆர்வலர்கள், விமர்சகர்கள் என அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
வாசிப்பு அனுபவத்தைத் திரைமொழி கொடுக்குமா? கல்கியின் கற்பனை நாவல் சிதைக்கப்படாமல் இருக்குமா? என்கிற விவாதங்கள் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு பல்வேறு இயற்கை இடையூறுகளை எதிர்கொண்டு நடைபெற்று முடிவடைந்தது.
படம் வெளியீட்டுக்கு நாள் குறிக்கப்பட்டு படத்தின் வியாபாரத்தை முடித்து விளம்பரப் பணிகளை செய்து வருகிறது தயாரிப்பு தரப்பு.
படம் வெளியீட்டு நாள் நெருங்கிவரும்போது அந்தப் படத்திற்கு எதிராக எங்கிருந்து பிரச்சினைகள் வரும் என்பதை யூகிக்க முடியாது.
சாதி அமைப்புகள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தால் அது நீதிமன்ற வழக்காக மாறிவிடும்.
பைனான்ஸ் பிரச்சினை என்றால் திரைப்பட சங்கங்களில் பேசி தீர்வு காணப்படும்.
கற்பனை கலந்த வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன், நாட்டுடைமையாக்கப்பட்ட நாவல்.
எனவே, இதனை தனி உரிமை கொண்டாட எவருக்கும் அதிகாரமில்லை என்றபோதும், வழக்கம்போல வழக்கறிஞர் நோட்டீஸ், நீதிமன்ற வழக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
சோழர்கள் வரலாற்றை மறைத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இதற்குரிய விளக்கம் அளிக்கக் கோரி இயக்குநர் மணிரத்னம், நடிகா் விக்ரம் உட்பட 13 பேருக்கு மக்கள் தராசு இயக்கத்தின் தலைவர் ஆர்.டி.ஐ.செல்வம் (எ) செல்வராஜ் சென்ற மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், வரும் 30-ம் தேதியன்று வெளிவரக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட தணிக்கை குழு வாரியத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள U/A சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் திரைப்பட தணிக்கை குழு, ஓடிடி நிறுவனம் பிரதிவாதிகளாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
600 திரைகளில் வெந்து தணிந்தது காடு வெளியானது!