விஷாலின் ஊழல் புகார் : மத்திய அரசு நடவடிக்கை!

Published On:

| By Kavi

Corruption Censor Board government action on Vishal complaint

சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விஷால் கூறிய புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஷால் நேற்று (செப்டம்பர் 28) வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், `’மார்க் ஆண்டனி’ படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டனர். படத்துக்கு சான்றிதழ் வழங்க தனியாக ரூ. 3.5 லட்சம் கேட்டனர். மேனகா என்ற இடைத்தரகர் மூலம் மொத்தம் ரூ.6.5 லட்சம் தொகையை இரண்டு தவணையாக கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன்.

இனி வரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது. பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போக வேண்டுமா? என்று குறிப்பிட்டதுடன் அதற்கான ஆதாரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் விஷால்.

இந்தநிலையில், விஷாலின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில், `விஷால் முன்வைத்த ஊழல் விவகாரம் துரதிஷ்டவசமானது. ஊழலை மத்திய அரசு சற்றும் பொறுத்துக்கொள்ளாது.

ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்சார் வாரியத்தால் இதுபோன்று ஏதேனும் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள் இருந்தால் அந்த தகவலை பகிருங்கள். இதன்மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கும், மகாராஷ்டிரா முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள விஷால், இதைத்தான் நாங்கள் சினிமாவில் காட்டுகிறோம். சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்று கூறியுள்ளார்.

பிரியா

அக்டோபர் 13 வரை செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

காதல் கதையாக `கொலைச்சேவல்`!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel