இயக்குநர் செல்அம் இயக்கிவரும் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக மாற்றப்பட்டுள்ளார்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கி டிரெண்டிங்கில் வலம் வரும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். அவரை தனது ’மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகன் என சில மாதங்களுக்கு அறிவித்தார் இயக்குநர் செல்அம். அப்போது கூல் சுரேஷ் இந்த படத்தில் துணை நடிகராக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் புல்லட் பைக்கில் பறந்தபடி ஆக்ரோசமாக அவர் திரிசூலத்தை எறிவது போன்ற படத்தின் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் அப்படம் குறித்த எந்த தகவலும் வரவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் செல்அம், “டிடிஎஃப் வாசன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் என்னுடைய சூழ்நிலைகளுக்கு ஒத்துழைப்பு தராததால் அவர் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்” என தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த டிடிஎஃப், இதுதொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் இயக்குநர் செல்அம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில், “மஞ்சள் வீரன் திரைப்படத்தை பொறுத்தவரை, ஒரே ஒரு போட்டோ ஷூட் மற்றும் பட பூஜை மட்டுமே நடந்திருக்கிறது. படத்தின் 30 சதவீத வேலைகள் முடிந்த நேரத்தில் நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செல்அம் பேசி இருக்கிறார். அது பொய்.
பட பூஜைக்கும், அவர்களது அலுவலக முன்பணத்திற்கும் நான்தான் பண உதவி செய்தேன். அவர் நெருக்கடியில் இருப்பதை என்பதை உணர்ந்து நான் என்னால் முடிந்த உதவியை அவருக்குச் செய்தேன். நான் கொடுத்த காசை வைத்து நீங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வாருங்கள். எனக்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை செய்த அவருக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இப்படி டிடிஎஃப் வாசன் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையிலும், அதற்கு செல்அம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக மஞ்சள் வீரன் படத்தில் நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
மேலும் படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு, இன்று கூல் சுரேஷ் தொடர்பாக காட்சிகளின் படப்பிடிப்பும் தொடங்கி இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யூடியூபில் டிரெண்டிங்கில் வலம் வரும் கூல் சுரேஷை ஹீரோவாக்கி, தனது முன்னாள் ஹீரோ வாசனுக்கு பதிலடி கொடுத்திப்பதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கவரைப்பேட்டை ரயில் விபத்து : மேலும் 10 பேருக்கு சம்மன்!
ஆரம்பித்தது மழை விடுமுறை… 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!