‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் அதிலிருந்து பிக் பாஸுக்கு கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் குறித்தான தகவல் வந்துள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது சீசனிலும் வெற்றி அடைந்து தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இறுதிக் கட்டத்தின் போட்டியாளர்களாக ஷ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யுலேகா, தர்ஷன், ‘சார்பட்டா’படப்புகழ் முத்து ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.
இந்த சீசன் முடிய இன்னும் சில வாரங்கள் இருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. ‘உங்கள் அனைவரையும் அடுத்த சீசனில் சந்திக்கிறேன். ‘குக் வித் கோமாளி’ சீசன் 3க்கான படப்பிடிப்பு முடிந்தது’ என்று இந்த நிகழ்ச்சியின் கோமாளியான சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்ததும் உடனடியாக அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஆரம்பிக்கும். அதற்காக இப்பொழுது போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள விஜய் டிவி பிரபலங்கள் சிலரையும் உள்ளே போட்டியாளர்களாக தேர்ந்தெடுப்பார்கள். அந்த நிலையில் தற்போது, நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி அவரது கணவர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுமட்டும் இல்லாமல் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து ஷ்ருதிகா, சிவாங்கி இவர்களது பெயர்களும் அடிபடுகிறது.
இதில் சிவாங்கி, ஷ்ருதிகா இருவரும் உள்ளே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாகத் தெரிகிறது. முந்தைய சீசன்களில் விஜே ரக்ஷன் பெயர் அடிபட்டு சில காரணங்களால் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஆனால் இந்த சீசனில் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று ரக்ஷனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. எனவே இந்த சீசனில் கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. போட்டியாளர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தொலைக்காட்சி தரப்பிலிருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.
ஆதிரா