தன்னை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி ராஜு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அப்போது, “கூவத்தூரில் எத்தனை நடிகைகளைக் கூட்டி வந்தார்கள் தெரியுமா? அதில் எம்எல்ஏ வெங்கடாசலம் நடிகை திரிஷாதான் வேண்டும் என அடம்பிடித்தார். அதனால், நடிகர் கருணாஸ் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தார்கள்” என பகிரங்கமாக கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டு த்ரிஷா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏ.வி.ராஜு பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா, “கேவலமான மனிதர்களைத் திரும்ப திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கோபமாக தெரிவித்தார்.
இதனையடுத்து “நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. த்ரிஷா அம்மாவின் மனம் புண்படும்படி பேசியிருந்தால், சமூக வலைதளம் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என ஏ.வி ராஜு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
— Trish (@trishtrashers) February 22, 2024
இந்த நிலையில், த்ரிஷா சார்பில் ஏ.வி.ராஜூவுக்கு இன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில். “நடிகை த்ரிஷாவின் பெயரை களங்கப்படுத்திய மனவேதனை ஏற்படுத்தியதற்காக நீங்கள் மான நஷ்ட ஈடு தர வேண்டும்.
உடனடியாக த்ரிஷா எதிராக தொலைக்காட்சி, நாளிதழ்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் அவதூறான செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
இதுவரை த்ரிஷா குறித்து நீங்கள் தெரிவித்த அவதூறான கருத்துகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அனைத்து கட்டுரைகள், அறிக்கைகள், வீடியோக்களையும் உங்கள் சொந்த செலவில் நீக்க வேண்டும்.
இந்த நோட்டீஸை நீங்கள் பெற்ற 24 மணி நேரத்திற்குள் நடிகை த்ரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
அதனை புழக்கத்தில் உள்ள பிரபல தேசிய ஆங்கில நாளிதழ் மற்றும் தமிழ் நாளிதழ் ஆகியவற்றில் வெளியிட வேண்டும்.
மேற்கூறியவற்றை நீங்கள் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில் நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஏ.வி. ராஜுக்கு நேற்று அ.தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் கட்சி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் நினைவிடம் திறப்பு: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்
இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை… முதல் போட்டி எங்கேன்னு பாருங்க!