கொஞ்சம் பயம் ஓரளவு சிரிப்பு
ஒரு காலத்தில் பேய் படங்கள் என்பதே அரிதாக இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்டதாகவே அமைந்தன. காஞ்சனா, அரண்மனை, பீட்சா, டிமாண்டி காலனி போன்ற படங்களின் வெற்றி, அந்த நிலைமையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒருகட்டத்தில் அந்த வகைமை மீது சலிப்பு ஏற்படும் அளவுக்கு ‘ஹாரர்’ படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிலிருந்து விடுபட்டாலும், அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நம் கவனத்தைக் கவரும். அந்த வரிசையில், தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ வெளியாகியிருக்கிறது. இதன் ட்ரெய்லர் பார்த்தவுடனேயே, படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது.
’லவ் டுடே’ எனும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் உருவாக்கியிருக்கும் படம் என்பதே இதன் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. அதனைப் படம் பூர்த்தி செய்திருக்கிறதா?
வித்தியாசமான கதை
நாயகன் கண்ணப்பன் (சதீஷ்), தினம்தோறும் நாம் காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். அன்பான பெற்றோர், உதவும் நண்பர்கள், உற்சாகமான மனநிலை என்றிருந்தும் வேலைவாய்ப்புக்காக அல்லாடும் ஒரு சராசரி நபர். ’கேமிங்’ தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு காட்டும் அவர், ஒருநாள் ஒரு நேர்காணலில் கலந்துகொள்ளத் தயாராகிறார்.
குளிக்கச் செல்லும்போது, மோட்டார் ரிப்பேர் ஆகி தண்ணீர் கிடைக்காத நிலை. அதனால், கொல்லைப்புறத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து நீர் இறைக்கிறார். அப்போது அவர் கையில் ஒரு பொருள் கிடைக்கிறது. அது பார்க்க வினோதமாக இருக்கிறது. அதில் இருந்து ஒரு இறக்கையைப் பிய்த்துவிடுகிறார் கண்ணப்பன்.
அதன் பெயர் ‘ட்ரீம் கேட்சர்’. கெட்ட கனவுகளில் இருந்து நம்மை விலக்கி நல்ல தூக்கத்தை அளிப்பதே அதன் வேலை. ஆனால், கண்ணப்பன் கையில் கிடைத்ததோ அதற்கு எதிரான வேலையைச் செய்யவல்லது.
எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையைத் (நாசர்) தொடர்பு கொண்டு, அந்த ‘ட்ரீம் கேட்சர்’ பற்றிக் கேட்கிறார் கண்ணப்பன். உடனே, அதனைப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு சொல்கிறார் ஏழுமலை. அதனைப் பார்த்தபிறகு, ‘இது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது’ என்று எச்சரிக்கிறார். ’அதில் இருந்த இறக்கையைப் பிய்த்திருக்கக் கூடாது’ என்று வருத்தப்படுகிறார். ஆனால், கண்ணப்பன் அதனைப் பொருட்படுத்தவில்லை.
அன்றிரவு, கண்ணப்பன் வழக்கம்போலத் தூங்குகிறார். ஆனால், அடுத்த நொடியே கனவில் ஒரு பேய் பங்களா வருகிறது. அதனுள் சிக்கிக்கொண்டு, அவர் தப்ப முடியாமல் தவிக்கிறார். தூங்கி எழுந்தால், கனவில் அவர் பட்ட காயங்கள் நிஜத்திலும் உடலில் இருக்கின்றன. அதன்பிறகே, ஏழுமலை சொல்வது உண்மை என்றறிகிறார்.
அந்தக் கனவுலகில் இருந்து வெளியே வர, அதற்கான ஒரு சாவியை கண்ணப்பன் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ஏழுமலை சொல்லும் தீர்வு. அதனைச் செய்வதற்குள் கண்ணப்பனைப் பணம் கேட்டு மிரட்டும் டெவில் (ஆனந்தராஜ்), சைக்யாட்ரிஸ்ட் ஜானி (ரெடிங் கிங்ஸ்லி), தாய் (சரண்யா), தந்தை (விடிவி கணேஷ்), மாமா (நமோ நாராயணா) என்று வரிசையாக ஒவ்வொருவரும் அந்த ‘ட்ரீம் கேட்சரில்’ இருந்து இறக்கைகளைப் பிய்த்து கனவுலகுக்குள் வருகின்றனர்.
அதிலிருந்து அவர்கள் தப்பினார்களா இல்லையா? அதற்கு ஏழுமலை தீர்வு தந்தாரா என்று சொல்கிறது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் மீதி.
பேய் படங்களைக் கணக்கில் கொண்டால், இதில் வரும் காட்சிகள் வழக்கமானவையே. ஆனால், கனவில் வரும் பேய் உலகம் என்பது நிச்சயம் வித்தியாசமானதுதான். அந்த வகையில், இதன் மையக்கதை நம்மை ஈர்க்கக்கூடியது.
நாயகன் சதீஷ்
ஏற்கனவே ‘நாய் சேகர்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார் சதீஷ். ஆனால், அதனைக் காட்டிலும் இதில் அவருடைய ‘பெர்பார்மன்ஸில்’ நம்பிக்கையின் சதவிகிதம் அதிகம். கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் அவருக்கான ஹீரோயிசத்துக்கோ, காமெடிக்கோ முக்கியத்துவம் தரப்படாமல் சட்டென்று முடிந்தாற்போலத் தோற்றம் கிடைக்கிறது. அதைத் தவிர்த்து, மற்றனைத்து காட்சியிலும் அவரது நடிப்பு மனதைத் தொடும் விதமாகவே உள்ளது. இதனால், காத்திருப்பில் உள்ள அவரது இதர படங்களும் கூட வெளியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நாயகியாக ரெஜினா கேசண்ட்ரா இதில் வந்து போயிருக்கிறார். அதற்காக, அவருக்கென்று டூயட்டோ அல்லது சண்டைக்காட்சிகளோ கிடையாது. அவரும் ஒரு பாத்திரமாக மட்டுமே தோன்றியிருக்கிறார்.
சதீஷின் பெற்றோராக வரும் விடிவி கணேஷ் – சரண்யா மற்றும் நமோ நாராயணா, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் ஆகியோரது நடிப்பு ஆங்காங்கே நம்மைச் சிரிப்பூட்டுகிறது. இந்தக் கதையில் ரொம்பவே சீரியசான நபராக நாசர் நடித்துள்ளார்.
பேயாக வரும் எல்லி ஆவ்ரம் – ஜேசன் ஷா ஜோடி சில நிமிடங்கள் வந்தாலும் நம்மை வசீகரிக்கிறது.
பெரும்பாலான காட்சிகள் ஈர்க்கும்விதமாக அமைந்திருப்பதில் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் பங்கு அதிகம். அதேநேரத்தில், ஒரு மினிமம் பட்ஜெட் படம் என்று தோன்றும்விதமான காட்சியாக்கமே இதில் மைனஸ் பாயிண்டாகவும் உள்ளது.
பிரதீப் கே.ராகவ்வின் படத்தொகுப்பானது நகைச்சுவை காட்சிகள் எளிதாகக் கடந்துபோகச் செய்கிறது. அதேநேரத்தில் பயமுறுத்தவும் செய்யாமல் சிரிப்பூட்டவும் முடியாமல் இருக்கும் காட்சிகள் ’ஸ்லோ’வாக நகர்வதைச் சரிசெய்யாமல் விட்டிருக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆங்காங்கே பயமூட்டி, லேசாக நகைக்க வைத்து நம் மனநிலை சீராக இருக்க உதவுகிறது. படத்தின் ஆதாரமே அவரது இசைதான் என்றுகூடச் சொல்லலாம்.
’நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்’ பாடல் நம்மைச் சிரிப்பூட்டுவதோடு குதூகலப்படுத்துகிறது. இதர இரண்டு பாடல்கள் படத்தொகுப்பில் வெட்டப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக, அது நல்ல முடிவு.
மோகன மகேந்திரனின் கலை வடிவமைப்பு, உண்மையாகவே ஒரு கனவுலகுக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்த உதவியிருக்கிறது. இன்னும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று பல அம்சங்கள் கதையோடு ஒட்டிய உழைப்பைக் கொட்ட உதவியிருக்கின்றன.
எழுத்தாக்கம் செய்ததோடு படத்தை இயக்கியிருக்கிறார் செல்வின் ராஜ் சேவியர். முதல் படமே ’குறைந்த பட்ஜெட்டில் நிறைவான வெற்றி’ என்றிருக்க வேண்டுமென உழைத்திருக்கிறார். அதற்குத் திரையில் ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.
ஆங்காங்கே நகைக்கலாம்
சமீபத்தில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கூட, அதன் கதையில் இருந்த வித்தியாசமான ‘ஐடியா’வுக்காக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. மற்றபடி பயத்துடன் சிரிக்க வைக்கும் ‘ஹாரர்’ படம் என்பது புளித்துப்போன பார்முலா என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது தெரிந்தும், இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்து நம்பிக்கையுடன் தந்ததற்காகவே இயக்குனர் செல்வின் ராஜ் சேவியரைப் பாராட்டலாம்.
கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சி வரை ’ஆங்காங்கே நகைக்கலாம்’ எனும் அளவுக்கு நகைச்சுவை இதில் உள்ளது. ஆதலால், கொஞ்சம் பயம் ஓரளவு சிரிப்பு என்ற எதிர்பார்ப்பு எளிதாகப் பூர்த்தியாகிறது. அதேநேரத்தில், ‘லவ் டுடே’யில் இருந்த நேர்த்தி இதில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பட்ஜெட் கைமீறிச் சென்றுவிடக் கூடாது என்ற கட்டாயம் அதன் பின்னே இருக்கலாம்.
ஹாரர் என்பதையும் தாண்டி ‘பேண்டஸி’ இருப்பதால், இக்கதையில் லாஜிக் தவறுகளைத் தேடுவது வீண் வேலை. அதேநேரத்தில், அப்படி யோசிக்கும் அளவுக்கு இதன் திரைக்கதையும் நம்மை சோதனைக்கு உள்ளாக்கவில்லை.
ஒரு சுவாரஸ்யமான படம் என்ற உத்தரவாதத்தைத் தரும் வகையிலேயே ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ உள்ளது. ‘இது காஞ்சனா அல்லது அரண்மனை சீரிஸ் படங்கள் போல் இல்லையே’ என்றோ, ‘வெஸ்டர்ன் ஹாரர் மாதிரி இருந்து பயமுறுத்தலையே’ என்றோ சொல்ல மாட்டீர்கள் என்றால், தாராளமாக இப்படத்தைப் பார்க்கலாம்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 புத்தாண்டில் கார் வாங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் யோசிங்க…!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தேர்தல் வெள்ளம் பாயும்போது தெரியலையா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி