மாரிமுத்து மறைவு: பிரபலங்கள் இரங்கல்!

Published On:

| By Monisha

condolence for marimuthu dead

நடிகர் மாரிமுத்து உயிரிழந்ததற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இன்று (செப்டம்பர் 8) சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாரிமுத்துவின் மரணத்திற்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சுசீந்திரன்

“நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்து அண்ணனுடைய மறைவு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடன் இணைந்து ஜீவா திரைப்படத்தில் பணிபுரிந்தேன். மிகவும் அற்புதமான மனிதர், நல்ல நடிகர்.

சன் விருதுகள் விழாவில் ஒரு மாதத்திற்கு முன்பு அவரை பார்த்தேன். சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியிருந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் பிரசன்னா

“இயக்குநர் மாரிமுத்துவின் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் சகோதரரைப் போல இருந்தோம். அவரது வாழ்க்கை எளிதானதாக இல்லை. சமீபத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்து வந்தார்.

அவர் இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்க வேண்டும்” என்று தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சசிகலா

“திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்துவின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.

சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

“இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

“திரைப்பட உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என தன் திறமையால், நீண்டகால உழைப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் மாரிமுத்து மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருகிறது.

எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது. அந்த உழைப்பின் பயனை, மகிழ்ச்சியை அடைவதற்குள் மறைவெய்தியது ஆற்றொண்ணா துயரம்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

”திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

மாரிமுத்துவின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் விக்ரமன்

“மிக சமீபத்திலேயே இவரின் சில பேட்டிகளைப் பார்த்தேன். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். கரிசல் மொழி பேசியபடி தமிழ் இல்லங்களில் வலம் வந்தவர்.

பல ஆண்டு கால உழைப்புக்கு பிறகு அவருக்கு கிடைத்த அங்கீகாரம் இன்னும் சிறிது காலம் நீடித்திருக்கலாம். இயக்குநர் நடிகர் மாரிமுத்து அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று தனது வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பலரும் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

`எதிர்நீச்சல்’ மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்… நடந்தது என்ன?

”சிகரத்தை நோக்கி சென்றவனை…”: மாரிமுத்து மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel