நடிகர் தனுஷ் உட்பட 14 பேர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் இன்று (ஜூலை 1) நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
குறிப்பாக நடிகர்கள் சிலர் முன் பணம் வாங்கிக் கொண்டு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே, சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு உள்ளிட்டோர் மீது ரெட் கார்டு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் சில நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, முன்னணி நடிகர் தனுஷ் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக நடிகர் தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிப்பதாக இருந்தது. அதற்கான 40 நாட்கள் படப்பிடிப்பும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் பாதியிலேயே அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனிடையே , நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வேறு சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், அவர் ஒப்புக்கொண்டபடி அந்த படப்பிடிப்பை முழுமையாக நடித்து கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் நடிகர் தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நடிகைகள் லட்சுமி ராய் மற்றும் அமலாபால் ஆகியோர் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனியார் பாதுகாவலர்களுக்கு (பவுன்சர்ஸ்) அவர்களே சம்பளம் வழங்க வேண்டும் என்றும், தயாரிப்பளர்கள் சம்பளம் வழங்க மாட்டோம் எனவும் நடிகர் சங்கத்தில் தயாரிப்பளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படும் நடிகரோ , நடிகையோ அவர்களுக்கு என்ன சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறதோ அதில் 10 சதவீதம் முன் தொகையாக கொடுக்கப்படும். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கி டப்பிங் வரை 60 சதவீத சம்பளம் கொடுக்கப்படும். இறுதியாக பட வெளியீட்டிற்கு முன்பு மீதமுள்ள 30 சதவீதம் சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் இருக்கும் உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுப்போம் வேறு யாரையாவது நடிகர், நடிகைகள் உதவியாளர்களாக வைத்திருந்தால் அவர்களுக்கு நாங்கள் சம்பளம் கொடுக்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கூறியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தீர்மானங்கள் குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்