யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அவன் இவன் படத்தின் “டியோ டியோ டோலே” என்ற பாடல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் (ஆகஸ்ட் 8) நிறைவுபெற்றது. ஆஸ்திரேலியா 174 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இந்தியா 61 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் பதக்கப்பட்டியலில் உள்ளது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டியானது நேற்றுடன் நிறைவுபெற்றது.

இறுதிப்போட்டியின் கலைநிகழ்ச்சிகள் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்ஸாண்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்ற அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், தங்களது பாடல்களால் விழாவினை சிறப்பித்தனர். பஞ்சாபி பாடல்களுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினர். புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஸ்டீவன் கபூர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த “டியோ டியோ பாடல்” காமன்வெல்த் போட்டியில் இசைக்கப்பட்டது. அந்தப்பாடலுக்கு கலைஞர்கள் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இயக்குனர் பாலா இயக்கிய படம் அவன் இவன். இந்தப் படத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
செல்வம்