நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரத சாந்தி திருமணத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்று இன்று (மார்ச் 29) சாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் 1951ம் ஆண்டு பிறந்தவர் செந்தில். தந்தை திட்டியதால் தனது 13 வயதில் ஊரைவிட்டு ஓடி வந்த அவர், பின்னர் நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.
அங்கு நடிப்பு திறமைகளை வளர்த்துக்கொண்ட செந்தில் 1979ம் ஆண்டு வெளியான ’ஒரு கோயில் இரு தீபங்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின்னர் 1983ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் புல்லட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் செந்தில் மக்களின் கவனத்துக்கு வந்தார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதே வருடத்தில் வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தில் தான் முதன்முறையாக கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்தனர். அதுமுதல் இருவரின் காமெடி கூட்டணியும் மக்கள் மத்தியில் அபார வரவேற்பை பெற்றது. கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது வயது மூப்பு காரணமாக இருவரும் சினிமாவில் இருந்து விலகி உள்ள நிலையில் அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று பீமரத சாந்தி திருமணம் செய்துகொண்டார் நடிகர் செந்தில்.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இக்கோயிலில் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி 70 வயதான நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று அதிகாலையில் திருக்கடையூர் கோயிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்களுடன் சென்றார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர்.
அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள பல்வேறு சன்னதிகளுக்கு சென்று வழிபட்டுள்ளார். தனது 60 வயது பூர்த்தி அடைந்த போது இக்கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் பங்கேற்ற நடிகர் செந்தில், தற்போது பீமரத சாந்தி திருமணத்திலும் பங்குகொண்ட நிலையில் இதுதொடர்பான இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா