தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் இன்று (பிப்ரவரி 19) காலமானார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி. நகைச்சுவை நடிகராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தவர்.
மயில்சாமி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிரிழந்துள்ளார்.
1984-ல் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் நடித்த தாவணி கனவுகள் என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு மயில்சாமி அறிமுகமானார்.
கில்லி, நான் அவன் இல்லை (பாகம் 1, 2), தூள், தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் பலரது உள்ளங்களை வென்றவர் மயில்சாமி.
கடந்த ஆண்டு வெளியான உடன்பால் என்ற திரைப்படத்தில் தான் இவர் கடைசியாக நடித்திருந்தார்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது விருகம்பாக்கம் தொகுதியில் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
கொரோனா காலத்திலும் மழை வெள்ள பாதிப்பு காலத்திலும் தான் வசித்து வந்த விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு ஏராளமான உதவிகளையும் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா