#HBD Goundamani : வாழ்க கவுண்டர் ‘மகான்’!

சினிமா

கவுண்டமணி…

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலம் முதல் இன்று(மே 25) வரை, அதன் வளர்ச்சியை ‘இன்ச் பை இன்ச்’ ஆக ரசித்துச் சிலிர்ப்பவர்கள், காலத்தை வென்ற திரைக்கலைஞர்களைப் பட்டியலிட்டால் அதில் இவரது பெயரைத் தவிர்க்க முடியாது. திரையில் முகம் பதிக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் கூட, இவரது திரை வாழ்க்கையை உற்று நோக்குவது அவசியம். அது மட்டுமல்ல, இன்றும் இவரது நகைச்சுவைக் காட்சிகள் நமது அன்றாட வாழ்வின் பல பிக்கல் பிடுங்கல்களுக்கு மருந்தாகத் தென்படும்.

பொறுமையின் சிகரம்!

கவுண்டமணி நடித்த முதல் திரைப்படம், கே.பாலச்சந்தர் இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’. அப்படம் 1964ஆம் ஆண்டு வெளியானது. அப்படிப் பார்த்தால், கவுண்டமணி தனது திரை வாழ்வைத் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், திரைத்துறையில் கால் பதித்தவுடன் ரத்தினக் கம்பள வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. கோயம்புத்தூர் அருகே வல்லகுண்டபுரத்தில் பிறந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர், வாலிப வயதில் சென்னையை நோக்கித் தனது பார்வையைத் திருப்பினார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே அதற்குக் காரணம்.

கோடம்பாக்கத்தில் நுழைந்து தனக்கொரு இடத்தைப் பெற வேண்டுமென்று விரும்பியவருக்கு, நாடக அனுபவமே துருப்புச்சீட்டாக இருந்தது. நாடகங்களில் எதிரே இருப்பவர் பேசும் வசனங்களுக்குப் பதிலடியாக ‘கவுண்டர்’ கொடுக்கும் வகையில் பேசுவது அவரது வழக்கம். அதுவே ‘மணி’ என்று சக கலைஞர்களால் அழைக்கப்பட்ட அவரது பெயருடன் ‘கவுண்டர்’ ஒட்டிக்கொண்டது. திரைப்படமொன்றில் இடப்பட்ட டைட்டிலில் ‘ர்’ விடுபட்டுப்போக, ‘கவுண்டமணி’ என்று அவரது பெயர் வெளியானது.

அன்று முதல் அதுவே அவரது அடையாளமானது. பாலச்சந்தரின் படத்தில் அறிமுகமான பின்னர் ‘ராமன் தேடிய சீதை’, ‘தேனும் பாலும்’ உட்படச் சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்தார் கவுண்டமணி. சில நிமிடங்கள், நொடிகள் வந்து போகும் பாத்திரங்களே அவருக்குக் கிடைத்தன. அந்த நிலையை மாற்றியது, அந்த காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த கே.பாக்யராஜ் உடனான அவரது நட்பு.

அதன் காரணமாக, இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’வில் வில்லனாக வரும் ரஜினியோடு திரியும் அல்லக்கைகளில் ஒருவராக இடம்பிடித்தார் கவுண்டமணி. அதில் அவர் பேசிய ‘பத்த வச்சிட்டியே பரட்டை’ வசனம், பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் மனதில் அவரை நிலைநிறுத்தியது. தொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’ படங்களில் நடித்தார்.

பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தில் நாயகி சுமதியின் வீட்டுக்கு எதிரே கடை வைத்திருக்கும் டெய்லர் வேடத்தில் நடித்தார் கவுண்டமணி. அதில் அவர் பேசிய ‘சரோஜா, குப்பை கொட்டுறியா.. கொட்டு.. கொட்டு..’ வசனம் இன்றும் நம்மைச் சிரிக்க வைக்கும்.

அதன்பிறகு, அவர் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களின் ‘பேவரைட்’ ஆனார்.
அறுபதுகளில் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தின் எஃகு கதவுகளைத் தட்டினாலும், கவுண்டமணி புகழ் பெற்றது என்னவோ எண்பதுகளுக்கு பிறகுதான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கான வாய்ப்புகளுக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்தது மிகப்பெரிய தவமே!

கலக்கலான ‘பஞ்ச்’கள்!

எண்பதுகளில் ‘நெற்றிக்கண்’, ‘மலையூர் மம்பட்டியான்’ உட்படப் பல படங்களில் நடித்தாலும், ஆர்.சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் கவுண்டமணிக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தது. அந்த படத்தில் செந்தில் உடன் அவர் நடித்த காட்சிகள் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் பாணியில் அமைந்திருந்தது. அது அவர்களது இணையைப் பல ஆண்டுகள் இணைந்து நடிக்கச் செய்தது.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா’, ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்கறது’, ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா’ என்பது போன்ற ‘பஞ்ச்’ வசனங்களைத் தான் வரும் காட்சிகளில் உதிர்த்தார் கவுண்டமணி. அதன் பிறகு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக மாறினார்.

பின்னாட்களில் திரைப்பட வணிகர்கள் கவுண்டமணிக்குத் தந்த வரவேற்பு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது; ஆனாலும், ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளத்தில் கேமிரா முன்பு நின்ற ஒவ்வொரு தருணத்தையும் அவர் ரசித்துக் கொண்டாடினார் என்பதே உண்மை. அதுவே, இன்றும் அவரது இருப்பைக் கொண்டாட வைக்கிறது.

சூரியன் படத்தில் வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ’காந்த கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரியில இடம் தர்றேன்’, கோயில்காளை படத்தில் வரும் ‘ஒரு இளநியை எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ’, கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘அது ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட’, நாட்டாமையில் வரும் ‘டேய் தகப்பா இது உனக்கு நியாயமா’,

மன்னன் படத்தில் வரும் ‘நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா’, மாமன் மகள் படத்தில் வரும் ‘போதும்டா ஓட்டுனது, ரீல் அந்து போச்சுடா சாமி’ மற்றும் ‘அய்யோ இது உலகமகா நடிப்புடா சாமி’, சின்னக்கவுண்டரில் வரும் ‘வாயை மூடு ஆத்தா! குழந்தைப்பய பயப்புடுறான்’,

‘சேரன் பாண்டியன்’ படத்தில் வரும் ‘க்ரீஸ் டப்பாவ எப்படி எட்டி உதைச்ச’, இந்தியன் படத்தில் வரும் ‘சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவன தேடுறேன்’, உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற ‘டேய் கிட்னா நாயே 400 ரூபா தர்றேன், அவனை உட்டுர்றியா’, கட்டபொம்மன் படத்தில் வரும் ‘சங்கூதுற வயசுல சங்கீதா’ என்று பல பஞ்ச் வசனங்கள் இன்று வரை பிரபலம்.

மேற்சொன்னது அனைத்தும் ஒரு சோறு பதம் தான். எண்பதுகள், தொண்ணூறுகளில் கவுண்டமணி நடித்த படங்களைப் பார்த்தால் இன்னும் பல நகைச்சுவை ரத்தினங்களை நம்மால் கண்டெடுக்க முடியும்.

குணசித்திர நடிப்பும் கைவரும்!

ஒரு நகைச்சுவை நடிகரால் எவ்வளவு சீரியசான பாத்திரங்களையும் எளிதாகக் கையாள முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. அது யாருக்குப் பொருந்துகிறதோ, நமக்கு தெரியாது. ஆனால் கவுண்டமணிக்கு அது நூறு சதவிகிதம் பொருந்தும் என்று தாராளமாகச் சொல்லலாம். சரத்குமார் தயாரித்த ‘ரகசிய போலீஸ்’. வி.சேகர் இயக்கிய ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உட்பட மிகச்சில படங்களில் கவுண்டமணி வில்லனாக நடித்திருக்கிறார்.

’பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ படத்தில் மனோரமாவின் ஜோடியாக நடித்திருப்பார் கவுண்டமணி. மகன்கள், மருமகள், பேரன் பேத்திகளுடன் வாழும் முதியவராக அதில் தோன்றியிருப்பார். அந்த படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் காமெடி, செண்டிமெண்ட், வில்லத்தனம் என்று பல ரசங்கள் தென்படும். அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கண்கலங்க வைத்தது அவரது சாதனை. அது போன்று ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்தது ரசிகர்களின் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அந்த அளவுக்குப் பல படங்களில் நகைச்சுவை வாய்ப்புகள் கவுண்டமணிக்குக் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலானவை முன்னணி நாயகர்களின் படங்களாக இருந்தன. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்திற்குப்பிறகு, இன்னொரு நாயகன் போன்று அவர் தெரியத் தொடங்கினார்.

’உனக்காக எல்லாம் உனக்காக’, ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’, ‘மலபார் போலீஸ்’ படங்கள் வெளியான காலகட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது. பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அவர் குறைத்துக்கொண்டார்.

2000ஆவது ஆண்டுக்கு பிறகு ‘சொக்கத்தங்கம்’ ‘மன்மதன்’, ‘ஜக்குபாய்’, ‘49 ஓ’, ‘வாய்மை’ என்று சில படங்களில் மட்டும் நடித்தார் கவுண்டமணி. இப்போது யோகிபாபு உடன் இணைந்து ‘ஒத்தவீட்டு முத்தையா’ படத்தில் அவர் நடித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

’ரியல்’ கவுண்டர் மகான்!

கேமிராவுக்கு முன்னால் மட்டுமல்லாமல் அதன் பின்னாலும் தனது ‘கவுண்டர்’களால் உடன் பணியாற்றுவோரைத் திணறடிப்பது கவுண்டமணியின் பாணி. அவரைப் பற்றிப் பேசும் பல திரைக்கலைஞர்கள் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த திரைப்பட விழா ஒன்றில், மறைந்த இயக்குனர் இ.ராம்தாஸ் அது போன்று ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார். தனது திருமண அழைப்பிதழைக்  கொடுப்பதற்காகச் சென்றபோது, கவுண்டமணியின் வீட்டில் ஒரு நாயைப் பார்த்திருக்கிறார். நலம் விசாரித்தபிறகு என்ன பேசுவதென்று தெரியாமல், ‘அண்ணே நாய்க்கு என்ன பேரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அதுக்கு என்ன பேரு, நாயிதான். அதுக்கு ஒரு பேரை வச்சு, அதை ஞாபகம் வச்சு, எவன் கூப்பிட்டுட்டு இருக்கறது’ என்று பதிலளித்தாராம் கவுண்டமணி. அந்த சம்பவத்தைக் குறிப்பிடும்போதே அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

கவுண்டமணி நடித்த பல நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் அப்படித்தான் பல ரசிகர்களால் சிரித்தவாறே நினைவுகூரப்படுகின்றன. அந்த நகைச்சுவை சாதாரண மனிதர்களை, அவர்களை வாழ்க்கையை, அதிலிருக்கும் அவஸ்தைகளைக் கிண்டலாகச் சொன்னது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சாதி, மதம், இனம், சமகால அரசியல் குறித்த விமர்சனங்கள் அவரது நடிப்பில் இடம்பெற்றிருந்ததும் கூட அதில் சேரும்.

அது போன்ற அம்சங்களே 2கே கிட்ஸ்களும் அவரது ‘பஞ்ச்’களை தங்களது டிசர்ட்களில் பொறித்துக்கொண்டு திரியக் காரணமாக உள்ளது.

அப்படிப்பட்ட கவுண்டமணி இன்று தனது 85வது வயதை நிறைவு செய்திருக்கிறார். அதிகாரப்பூர்வமாகத் தனது பிறந்தநாளை அவர் குறிப்பிடாத காரணத்தால் வாய்மொழியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் அறிந்த விவரம் இது.

மேற்சொன்னவற்றைப் படித்துவிட்டு, கிண்டலுடன் ‘பஞ்ச்’ அடித்துவிட்டு, தனது உலக சினிமா, உலக அரசியல், மக்களின் வாழ்வியல் குறித்த ஆச்சர்ய தகவல்களுக்குள் கவுண்டமணி மூழ்கலாம். அது அவருக்கான ஆசுவாசம். அவரை ரசிப்பது நமக்கான ஆசுவாசம்.
வாழ்க ‘கவுண்டர்’ மகான் புகழ்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரிலீஸ் அப்டேட்!

6ஆம் கட்ட தேர்தல்… 11.13 கோடி வாக்காளர்கள்… விறுவிறு வாக்குப்பதிவு!

வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *