சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணியை காப்பாற்றும்படி சக நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் மன்னார் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் நடிகர் போண்டா மணி. சிறுவயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தமிழ்நாட்டிற்கு அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.
வடிவேலுவுடன் சேர்ந்து ரசிக்கவைத்த போண்டாமணி!
பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு, 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர் ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
அதேபோல் வடிவேலுவுடன் சேர்ந்த இவர் செய்த நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் இன்றும் இணையத்தில் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக கடந்த மே மாதம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
நடிகர் பெஞ்சமின் கண்கலங்க கோரிக்கை!
தற்போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவரது நண்பரும், சக நடிகருமான பெஞ்சமின் கண்ணீருடன் உதவி கேட்டு வெளியிட்டுள்ள காணொலி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதில், ”அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாடு விட்டு நாடு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு நடிகராகியுள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தயவுசெய்து அண்ணன் போண்டாமணியை காப்பாற்றுங்கள்” என்று பெஞ்சமின் கண்கலங்கி பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகர் சூரி உணவகத்தில் திடீர் சோதனை!
பொதுச்செயலாளர் பதவி : கையெழுத்து வாங்கும் எடப்பாடி