சூப்பர் குட் லட்சுமணன் என்றால் பல பேருக்கு தெரியாது. “மாயி அண்ணே வந்திருக்காங்க, மொக்கச்சாமி வந்திருக்காங்க, வாம்மா மின்னல்”, “கடல்லேயே ஜாமீன் இல்லையாம்” போன்ற வசனங்களைச் சொன்னால் அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருபவர் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்.
இவர் சூப்பர்குட் பிலிம்ஸில் பணியில் இருந்த போது வாய்ப்பு தேடி வரும் நிறைய இளம் இயக்குநர்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களை அறிமுகப்படுத்தி உதவி செய்திருக்கிறார்.
வடிவேலுடன் ஏராளமான படங்களில் தனது உடல்மொழியால் நகைச்சுவை காட்சிகளை மெருகேற்றியவர் பாவா லட்சுமணன். கொரானா காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் காலில் அடிபட்டதை கவனிக்காமல் விட்டதால் சர்க்கரை அளவு அதிகமாகி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய மருத்துவ நிர்வாகம் அதற்கான தொகையையும் சொல்லியுள்ளது.
ஆனால் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பாவா லட்சுமணன் கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியும் அன்றுதான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அதிகமான கூட்டம் கூடியிருந்தது.
மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை பார்த்ததும் அவரிடம் சென்று பாவா லட்சுமணன் அவரது நிலைமையை சொல்லி இருக்கிறார்.
அந்த பரபரப்பிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது உதவியாளரை பாவா லட்சுமணன் உடன் அனுப்பி மருத்துவர்களிடம் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய சொல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.
அமைச்சரின் சிபாரிசின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த மருத்துவர்கள் ஜூன் 14 ஆம் தேதியே அறுவை சிகிச்சை செய்து லட்சுமணன் காலில் இருந்து 3 விரல்களை அகற்றி பாதிப்பு அதிகரிக்காமல் தடுத்துள்ளனர்.
திரையுலகில் ஏராளமான நண்பர்களை பெற்றுள்ள பாவா லட்சுமணன் தற்போது விரல்களை இழந்து சிரமப்பட்டு வரும் நிலையில் அவரது நண்பர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இதனிடையே பதட்டமான சூழலிலும் அமைச்சர் உரிய ஏற்பாடுகளை செய்து உதவியதன் மூலம் உடனடியாகஅறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய உதவியது மட்டுமில்லாமல் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றும் நலம் விசாரித்துள்ளார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் லட்சுமணனை நடிகர் தாடி பாலாஜி இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
மோனிஷா
வுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
‘ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா?’: மிரட்டும் மாமன்னன் டிரெய்லர்!