கோவை விமான நிலையத்தில் தனது உடைமைகளை மத பாகுபாடு காட்டி சோதனை செய்ததாக நடிகை சனம் ஷெட்டி புகார் எழுப்பியிருந்த நிலையில் விமான நிலைய இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
திரைத்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி.
அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி நடிகை சனம் ஷெட்டி கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அப்போது தனக்கு நேர்ந்த நெருடலான அனுபவம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
மத பாகுபாட்டுடன் சோதனை
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ”கோவையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தேன். விமானம் ஏறுவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் என்னுடைய பேக் மற்றும் இரண்டு இஸ்லாமியர்களின் பேக்கை மட்டும் அங்குள்ள அதிகாரிகள் சோதனையிட்டனர்.
என்னுடைய பெயர், அந்த முஸ்லிம்கள் இளைஞர்கள் அணிந்திருந்த தொப்பியை வைத்து எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதனை நடத்தினர்.
அங்கு ஸ்கேனர் இல்லை எதுவும் இல்லை. வெறும் பார்வையில் சந்தேகப்பட்டு சோதனை செய்வது சரியானது இல்லை. மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள் என கேட்டதற்கு, ”குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக இது ரேன்டம் செக்கிங் தான்” என்றார்கள்.
அது நல்ல விசயம் தான். அதற்காக எங்கள் மூன்று பேர் உடமைகளை மட்டும் சோதனை செய்ததில் என்ன லாஜிக் இருக்கிறது? சோதனை செய்வதாக இருந்தால், அனைவரின் உடைமைகளும் சோதனை செய்திருக்க வேண்டும்.
ஏன், தோற்றத்தை வைத்து, மதத்தை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்? இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு கேவலம்?” என சனம் ஷெட்டி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் நடிகை கூறியது போல், குறிப்பிட்ட தினத்தில் அவர்களை மட்டும் சோதனை செய்தார்களா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “குடியரசு தினவிழாவை முன்னிட்டு உச்சகட்ட எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. போர்டிங்குக்கு முன்பாக பயணிகளை இரண்டு முறை சோதனை செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். சென்னை விமான நிலையம் உட்பட எல்லா விமான நிலையத்துக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
எல்லோரையும் சோதனை செய்வது கடமை. அமைச்சர்கள், எம்.பி உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்குதான் இதில் விலக்கு.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாலியல் சீண்டலில் பாஜக எம்.பி… 3வது நாளாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்… நடந்தது என்ன?
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!