காமெடியும் கிளாமரும் : காபி வித் காதல் விமர்சனம்!

Published On:

| By Monisha

அழகுக்கு மாளவிகா சர்மா, நட்புக்கு அம்ரிதா ஐயர், கவர்ச்சிக்கு ரைசாவில்சன், துரோகத்துக்கு ஐஸ்வர்யா தத்தா, சோகத்துக்கு சம்யுக்தா சண்முகநாதன் என வகைக்கொரு நாயகிகள் நடித்திருக்கும் படம் காபி வித் காதல்.

காமெடியும், கிளாமரையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை எழுதும் சுந்தர்.சி கிளாமரை அதிகமாக்கி காமெடியை தொலைத்திருக்கிறார். வயது வந்தோர் மட்டும் பார்க்க கூடிய படம் காபி வித் காதல்.

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். திவ்யதர்ஷினி இவர்களின் சகோதரி. இவர்களில் ஸ்ரீகாந்த்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.

ஜீவாவுக்கும் ஜெய்க்கும் திருமணம் நடத்த அப்பா பிரதாப் போத்தன் முடிவு செய்கிறார். ஜீவா, ஐஸ்வர்யா தத்தாவுடன் மூன்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்கிறார். அவரையே அவருக்குத் திருமணம் செய்வது என்றும் ஜெய்க்கு மாளவிகா சர்மாவை மணமுடிப்பது என்றும் முடிவு செய்கிறார்கள்.

coffee with kadhal movie review

இவ்விருவர் திருமணத்திலும் ஏராளமான குழப்பங்கள். அதன் மூலம் படம் பார்க்க வந்திருப்பவர்களைச் சிரிக்க வைக்க இயக்குநர் சுந்தர்.சி முயல்கிறார்.

பொறுப்பில்லாத இளைஞர் என்று பெயர் பெற்ற ஜெய், பொறுப்புடன் ஒரு தொழிலில் ஈடுபட முயல்கிறார். அதற்காகத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறார்.

சம்மதம் சொன்னபின் தனக்கான சரியான துணை உடன் இருக்கும் அம்ரிதா ஐயர்தான் என்று தாமதமாக முடிவுக்கு வந்து அவரை நோக்கிச் செல்லும் காட்சிகளில் நிறைய பல்பு வாங்கி சிரிக்க வைக்கிறார்.

மனைவி மகள் என்று வாழும் இசைக் கலைஞராக ஸ்ரீகாந்த். ரைசா வில்சனின் கவர்ச்சியில் மயங்கி அவரை அனுபவிப்பதும் அவரே தம்பி மனைவியாக வரப்போகிறார் எனத் தெரிந்து பதட்டப்படுகிறார்.

சகோதரியாக நடித்திருக்கும் திவ்யதர்ஷினிக்கு முக்கியமான வேடம். அவரும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டே சகோதரர்களுக்கு இடையேயான குழப்பங்களைத் தீர்த்து சுப முடிவு ஏற்படக்காரணமாக இருக்கிறார்.

coffee with kadhal movie review

அவருடைய கணவராக ஒரு காட்சியில் மட்டும் ஆர்யா இடம் பெறுகிறார். திருமணம் ஏற்பாட்டாளராக வரும் யோகி பாபு கிங்ஸ்லி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்யா,விடிவி. கணேஷ் ஆகியோரும் சிரிக்கவைக்கிறார்கள்.

ஈ. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக அமைந்திருக்கிறது. யுவனின் இசையில் பாடல்களில் இளமை ரசம்.

இறுதியில் வரும் ரம்பம்பம் பாடல் ஆட்டம்போட வைத்திருக்கிறது. தம்பிக்கு நிச்சயித்த பெண்ணைக் காதலிக்கும் அண்ணன், இன்னொருவருடன் நிச்சயமான பெண்ணைத் துரத்திக் காதலிக்கும் தம்பி, தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்தவள் தம்பிக்கு மனைவியாவதா? எனத்துடிக்கும் அண்ணன்,

மூன்றாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் போகும் பெண் உட்பட ஏராளமான கதாபாத்திரங்களை வைத்து குழப்பமில்லாமல் திரைக்கதை எழுதியிருப்பதாக எண்ணி சுந்தர்.சி இயக்கி இருக்கும் காபி வித் காதல் அவரையும் மீறி பார்வையாளர்களுக்குப் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது.

எல்லாவற்றையும் கடந்து வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் இருப்பதால் பார்வையாளன் சேதாரமில்லாமல் படம் முடிந்து தியேட்டரைவிட்டு வரலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் காபி வித் காதல்காபியும், காதலும் இல்லாத கவர்ச்சி படமாக இருக்கிறது.

இராமானுஜம்

பொன்னியின்செல்வன் வெற்றி: கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share