கோப்ரா தோல்வி பொன்னியின் செல்வனை பாதிக்குமா?

சினிமா

மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் கோப்ரா. எதையும் திட்டமிட்டுக் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படங்களைத் தயாரிக்கும் லலித்குமாருக்கு கோப்ரா சரியாக இருக்குமா என்கிற கேள்விகள் கோடம்பாக்கத்தில் எழுந்தன.

இயக்குநர் அஜய் ஞானமுத்து தயாரிப்பாளர்களின் இயக்குநர் கிடையாது, நடிகர்களின் இயக்குநராகவே இருப்பார் என்றும் கூறப்பட்டது.

அதேபோன்று கோப்ரா படம் இயக்குநர், கதாநாயகன் விக்ரம் விருப்பப்படியே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் போதும் சாமி படத்தை முடித்துக் கொடுங்க என்கிற நிலைக்கு வந்தார் தயாரிப்பாளர் லலித்குமார் என்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் திரையரங்குகளில் ஆகஸ்ட் 31 அன்று வெளியான திரைப்படம் ‘கோப்ரா‘. ஸ்ரீ நிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.

சுமார் 120 கோடி ரூபாய் செலவில் தயாரான கோப்ரா படத்தைத் தென்னிந்தியா முழுவதும் விக்ரம் விருப்பப்படி புரமோஷன் செய்வதற்குத் தேவையான எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர் செய்து கொடுத்தார்.

கோப்ரா படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் அதிகமான திரைகளில் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால் முதல் நாள் படம் பார்க்க முன்பதிவு செய்த டிக்கெட் விற்பனை மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வசூல் ஆன தொகை மட்டுமே அதிகபட்ச வசூலாக இன்றுவரை இருந்து வருகிறது.

ஹாலிவுட் தரத்தில் படம் எடுப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களை போன்று ஒரு படத்தை அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்குள் முடிக்கும் பார்முலாவை இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆக்க்ஷன், திரைக்கதையில் தயாராகும் படத்தை 3 மணிநேரம் பார்க்கும் பொறுமை இன்றைய இளம் தலைமுறையிடம் இல்லை.

சினிமா என்பது காட்சி ஊடகம். இதன் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கதை பார்வையாளனுக்குப் புரிய வேண்டும். ஆனால் கோப்ரா இயக்குநருக்கும், கதாநாயகனுக்கும் மட்டுமே புரிந்த கதையாக இருந்தது என்கிற விமர்சனம் எல்லா தரப்பிலும் இருந்தது.

படத்தின் நீளம் அதிகம் என்பதைப் பட வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளர் சுட்டிக்காட்டியும் இயக்குநர்.3 மணிநேரம் 3 நிமிடம் 3 நொடி என்பதில் உறுதியாக இருந்தார். படம் வெளியான பின்பு திரையரங்கு உரிமையாளர்கள், படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனங்களின் அடிப்படையில் படத்தின் நீளத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்த பின்னரே 20 நிமிடம் குறைத்திருக்கிறார்.

ஆனால் படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கியது.

படமே புரியலே, நீளத்தை குறைத்தால் மட்டும் புரிந்து விடவா போகிறது என விமர்சனங்கள் எழுந்தது. முதல் முறை புரியவில்லை என்றால் இரண்டாவது முறை பாருங்கள் புரியும் என இயக்குநர் அஜய் ஞானமுத்து பதில் கூறியது விக்ரம் ரசிகர்களை வெறுப்பேற்றியது முதல்நாள் மொத்த வசூலில் 50%ம் கூடஇரண்டாம் நாள் வசூல் இல்லை.

வார இறுதியில் நிலைமை மேம்படக் கூடும் என்ற நம்பிக்கையிலிருந்த திரையரங்கு உரிமையாளர்களின் நம்பிக்கை பொய்யாகிப் போனது. முதல் நாள் 10 கோடி ரூபாய் வசூலான கோப்ரா இரண்டாம் நாள் 2.50 கோடியாக குறைந்து. மூன்றாம் நாள் 1.75 கோடியாக மோசமான நிலைக்குச் சென்றது.

வாரவிடுமுறை நாட்களான சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிப்பதற்குப் பதிலாகக் கோடிகளிலிருந்த வசூல் கணக்கு லட்சங்களாக குறைந்தது. முதல் ஐந்து நாட்களில் சுமார் ஐம்பதுகோடி ரூபாய் வசூலை எதிர்பார்த்திருந்த நிலையில் சுமார் 20 கோடி ரூபாய் மொத்த வசூலில் சுருண்டு போனது கோப்ரா.

இம்மாத இறுதியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை கோப்ரா தோல்வி பாதிக்குமா என்கிற கேள்வியுடன் திரையரங்கு உரிமையாளர்களை தொடர்பு கொண்டபோது, அப்படியெல்லாம் ஆகாது பார்வையாளர்களை பொறுத்தவரை ஒவ்வொரு படத்தையும் தனியாகத்தான் பார்ப்பார்கள்.

பொன்னியின் செல்வன் பல மொழி நடிகர்கள் நடித்துள்ள படம் என்பதால் அதன் வெற்றி இயக்குநரைச் சார்ந்தே இருக்கும். தனிப்பட்ட நடிகரை மனதில்கொண்டு” பொன்னியின் செல்வன்” படம் பார்க்க வர மாட்டார்கள் என்றனர்.

இராமானுஜம்

கோப்ரா – விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *