இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இசை, பாடல்கள் ஹிட்டானதால் பாலிவுட், ஹாலிவுட்டில் இருந்தும் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. கடந்த 2008 ஆம் ஆண்டு ’ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஜெய்ஹோ பாடலுக்கு உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் அந்த படத்தின் பின்னணி இசைக்காகவும் ஆஸ்கர் வென்றார் ஏ.ஆர்.ரகுமான். இதனால் ஒரே நேரத்தில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார் ஏ.ஆர்.ரகுமான்.
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று (ஜனவரி 6) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/mkstalin/status/1743511205887766877
முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான். உங்களுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1743513886559502377
கேரள முதல்வர் பினராயி விஜயன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு கலைஞராக உங்கள் பயணம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது, எல்லைகளையும் நேரத்தையும் பரப்பும் உணர்ச்சிகளின் நாடாவை நெய்துள்ளது. உங்கள் எதிர்கால முயற்சிகள் உங்கள் இசையைப் போலவே மாயாஜாலம் நிறைந்ததாக இருக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா