முதல்வர் ஸ்டாலின் திடீரென செல்வராகவன் வீட்டுக்குச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சம்பவம் திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் செல்வராகவன். தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிகர் தனுஷின் சகோதரரும் ஆவார். தனுஷை வைத்து ’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’, ’7ஜி ரெயின்போ காலனி’, ’மயக்கம் என்ன’ உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்துள்ளார்.
இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வியாபாரரீதியாகவும் சாதனை படைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்தக் கூட்டணி ‘நானே வருவேன்’ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படத்தை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அதில், இயக்குநர் கஸ்தூரி ராஜாவுடன், செல்வராகவன் குடும்பத்தினரும், குழந்தைகளும் உள்ளனர்.
அந்த ட்விட்டர் பதிவில் செல்வராகவன், “தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

சென்னையில் கடந்த ஜூன் மாதம் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயக்குனர் செல்வராகவன், ”எனக்கு சிறுவயதிலிருந்தே மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும்.
இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வரமாட்டாரா என மக்கள் ஏங்கி இருந்தார்கள்.
‘மக்கள் முதல்வர்’ என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால்தான் முடியும்” என அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டியான அலமேலு பத்மநாபன் கடந்த ஜூலை 19ஆம் தேதி காலமானார்.
இதற்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் முதல்வர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்றார் என கோடம்பாக்கம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கும் செல்வராகவனிடம் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்