தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) மற்றும் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் செப்டம்பர் 16 அன்று தேசிய சினிமா தினத்தைக் கொண்டாடுகின்றன.
தேசிய சினிமா தினத்தின் சிறப்புக் கொண்டாட்டமாக சினிமா டிக்கெட்டுகளை 75 ரூபாய்க்கு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
இதுவரை ரூ. 200-300 வரை பணம் செலவழித்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டும் செயல்படுவதற்காகத் திரையரங்கு உரிமையாளர்கள் திரைப்பட பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதனைச் செய்கின்றார்கள்.
மேலும் இந்த முயற்சியின் மூலம் கொரோனா பரவலுக்குப் பிறகு இன்னும் திரையரங்குகளுக்குச் செல்லத் தொடங்காத நபர்களும் திரையரங்குகளுக்குச் செல்ல விரும்புவார்கள்.
நாடு முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒவ்வொரு படத்திற்கும் 75 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குக் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தேசிய சினிமா தினம் செப்டம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் அங்குள்ள திரையரங்குகளில் 3 டாலருக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 டாலர் என்பது இந்திய மதிப்பில் 239.37 ரூபாய் ஆகும்.
மோனிஷா
மீண்டும் வெளியாகும் கமலின் ஆளவந்தான்