டைனிங் டேபிளில் ‘பூகம்ப’ விளையாட்டு!
சில திரைப்படங்களைப் பார்த்தவுடனேயே, ‘இது அதுல்ல..’ என்று வேறு மொழிகளில் வந்த சில படங்கள் நினைவுக்கு வரும். சில நேரங்களில் ஒரு படத்தின் ட்ரெய்லர் கூட அந்த உண்மையை உணர்த்திவிடும். cinema review ring ring
அதேநேரத்தில், வேறு மொழித் திரைப்படங்களிலுள்ள ஐடியாக்களை எடுத்துக்கொண்டு புதிதாகக் கதை சமைக்கும் வழக்கமும் இந்தியத் திரையுலகில் நெடுங்காலமாக இருந்து வருவதை நாம் மறந்துவிடக் கூடாது. ’அவற்றில் இப்படம் எந்த வரிசையில் சேரும்’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது, சக்திவேல் இயக்கிய ‘ரிங் ரிங்’ படத்தின் ட்ரெய்லர்.
ஒரு பிறந்தநாள் விருந்தில் தத்தமது மனைவியருடன் நான்கு நண்பர்கள் கலந்து கொள்வதாக, இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. ’இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது’ என்று கேட்பவர்களுக்காகவே, சுவாரஸ்யமான ‘ஹை பாய்ண்ட்’ ஒன்றைப் பொதிந்து வைத்திருக்கிறது ‘ரிங் ரிங்’.
அது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறதா? இப்படம் சுவாரஸ்யமான திரையனுபவத்தைத் தருகிறதா?
டைனிங் டேபிளை சுற்றும் கதை! cinema review ring ring

சிவா (பிரவீன் ராஜ்) சென்னை புறநகர் பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். அப்பகுதியிலேயெ ஒரு பெரிய வீட்டை வாங்கி, திருமணத்திற்குப் பிறகு மனைவியோடு (சாக்ஷி அகர்வால்) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
ஆனாலும், ஹோட்டல் மேலாளராக இருக்கும் பெண்ணுடன் பிரவீன் அடிக்கடி மொபைலில் பேசுவது அவரது மனைவியைச் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் சிவா.
அவரது நண்பர்கள் தியாகு (விவேக் பிரசன்னா), அவரது மனைவி ஷைலஜா (ஸ்வயம்சித்தா), கதிர் (டேனியல் ஆனி போப்), அவரது காதலி (யமுனா), பாஸ்கர் (அர்ஜுனன்) ஆகியோர் அந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர்.
தனியாக வரும் பாஸ்கர், தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறுகிறார். அதற்கு ‘பொண்டாட்டி வந்தா திட்டிகிட்டே இருக்கான்னு வீட்ல விட்டுட்டு வந்துட்டியா’ என்று அவரைக் கிண்டலடிக்கின்றனர் நண்பர்கள்.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொருவரும் மற்றவர்களை அவர்களது இணையிடம் மாட்டிவிடும் வகையில் பேசத் தொடங்குகின்றனர். குறிப்பாக, கதிரும் தியாகுவும் அடித்துக்கொள்ளாத குறையாக, ஒருவரையொருவர் வாரிக் கொள்கின்றனர். ’ரகசியத்தை ஏன் ஒளிச்சு வைக்கிற’ என்கிற ரேஞ்சில் இருவரும் மாறி மாறி பேசுகின்றனர்.
பேச்சு திசைமாறி, ஒருகட்டத்தில் அனைவரும் தங்களது மொபைல்போன்களை டைனிங் டேபிளில் வைக்க வேண்டுமென்று முடிவாகும் அளவுக்கு நிலைமை மாறுகிறது.
டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும் அனைவரும் வெளிப்படையாகத் தங்களுக்கு வரும் மெசேஜ்கள், அழைப்புகளை மற்றவர் அறியும்படி படிக்க, ஏற்க வேண்டுமென்பது நிபந்தனை. தயக்கத்துடனே ஒவ்வொருவரும் அந்த விளையாட்டில் இறங்குகின்றனர்.
ஒருகட்டத்தில் விளையாட்டு விபரீதமாகிறது.
பாஸ்கர் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை முதன்முறையாக மற்றவர்கள் அறிய நேர்கிறது.அந்த நேரத்தில், அவரது மனைவியும் (சஹானா) அங்கு வந்துவிடுகிறார்.
அதன்பின்னர் என்னவானது? அந்த விளையாட்டின் விளைவு என்னவாக இருந்தது என்று சொல்கிறது ‘ரிங் ரிங்’ படத்தின் மீதி.
டைனிங் டேபிளை சுற்றிவரும் கதை என்றவுடனேயே, ‘இது மாதிரி வெளிநாட்டு படமொண்ணு இருக்குதே’ என்று தேடத் தொடங்கியது மனம். ‘பெர்பெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ எனும் இத்தாலியப் படத்தைத் தழுவி அமைக்கப்பட்டிருக்கிறது இதன் கதை. இந்தியில் கூட ‘கேல் கேல் மெய்ன்’ எனும் பெயரில், முறையான ரீமேக் உரிமையைப் பெற்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.
ஆனால், இத்தாலியப் படத்தில் அந்த மையச்சரடை வைத்துக்கொண்டு புதிதாக ஒரு கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
சில காட்சிகள் ’ஓகே’! cinema review ring ring

படத்தின் தொடக்கம் மந்தமாக அமைந்திருக்கிறது. நாடகம் என்று சொல்வதா, குறும்படம் என்று சொல்வதா என யோசிக்கும் வகையில் ‘ரிங் ரிங்’ தொடக்கக் காட்சிகள் உள்ளன.
விருந்தில் நான்கு நண்பர்களும் தமது மனைவியரோடு கலந்துகொள்ள ஆரம்பித்தபிறகு சிறியதாய் சுவாரஸ்யம் எட்டிப் பார்க்கிறது. அதையடுத்து வரும் காட்சிகள் சட்டென்று திரைக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. ’ஓகே’ என்று சொல்லும்விதமாகக் காட்சியாக்கமும், அதனை எழுதிய விதமும் இருக்கின்றன.ஆனால், அது முழுமையாக அமையாதது சோகமான விஷயம்.
பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பிரசாத்தின் ஒளிப்பதிவு அதனை மறக்கடிக்கிறது. ஆனால், அந்த திறமையை அவர் அனைத்து காட்சிகளிலும் பயன்படுத்தவில்லை.
பிகேயின் படத்தொகுப்பு, தினேஷ் மோகனின் தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, இப்படத்தின் நடுப்பகுதியை ‘ஒகே’ என்று சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது.
இசைப்பேட்டை வசந்த் இதற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் ஆறாம் விரலாய் தோற்றமளிக்க, வசன காட்சிகளில் பின்னணி இசை மூலம் அவர் வேகம் கூட்ட முயற்சித்திருக்கிறார்.
பிரவீன் ராஜ், விவேக் பிரசன்னா, ஜமுனா, அர்ஜுனன் ஆகியோர் இயல்பாக நடித்து இக்கதையை நாம் ஏற்குமாறு செய்கின்றனர். ஸ்வயம் சித்தா, சாக்ஷி அகர்வால், டேனியல், சஹானா ஆகியோர் நடிப்பு கொஞ்சம் ‘ஓவர் ஓவர்’ ரேஞ்சில் இருக்கிறது.
இவர்களைத் தாண்டி நான்கைந்து பேர் இப்படத்தில் தலைகாட்டியிருந்தால் அதிகம்.
ஒரு திரைப்படமாக நோக்கினால், இப்படத்தின் பட்ஜெட் நம் கண்களை முதலில் உறுத்துகிறது. பிரேம்களை வடிவமைப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் குவித்திருக்கலாம்.
ஒரு கைப்பிடி பிரியாணியை அனைத்து தட்டுகளிலும் பரிமாறிவிட்டு, ஒன்றரை மணி நேரமாக கேமிரா டைனிங் டேபிளை சுற்றி வந்திருப்பது பட்ஜெட் பற்றாக்குறையைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இது போக, இதில் ‘லாஜிக் மீறல்கள்’ தொடர்பாகச் சில பல கேள்விகள் உண்டு. அவற்றுக்குச் சில பதில்களைத் தந்திருக்கிறார் இயக்குனர்.
அது, ‘சாரே எண்ட காதலி நிங்களட பார்யா ஆகுன்னு பட்சே நிண்ட பார்யா எண்ட காதலி ஆகில்லா’ என்று ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் பாக்யராஜ் வசனம் பேசும் தொனியில் அமைந்திருக்கிறது.
’முழுக்க வெளிநாட்டு படத்தை காப்பியடிச்சு எடுத்தா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க’ என்ற வாதத்தைத் திரையுலகில் நாம் இதற்கு முன்னர் கேட்டிருக்கிறோம். சமீபகாலமாக அந்த போக்கில் மாற்றம் தென்பட்டது.
அதிலிருந்து விலகி, ’ஃபாரின் படத்தை நமக்கு ஏத்த மாதிரி மாத்த வேண்டாமா’ என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் ‘ரிங் ரிங்’ படத்தின் பின்பாதியை அமைத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
அது சிலருக்குப் பிடிக்கலாம்; மிகச்சிலருக்கு அதனாலேயே இந்தப் படம் பிடிக்காமலும் போகலாம்.
’மொபைல் போன்களை மாற்றிக் கொள்ளலாம்’ என்றவுடன் பலருக்கு ‘லவ் டுடே’ படம் நினைவுக்கு வரும். அப்படத்தில் வருவதற்கு ஈடான களேபரத்தை இத்திரைக்கதையில் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
அந்த எதிர்பார்ப்பைச் சரியாக வெளிப்படுத்தியிருந்தால், திரைக்கதையில் ஒரு பூகம்பம் காணக் கிடைத்திருக்கும். இப்போது புதைகுழி அளவுக்குக் கூட பின்விளைவுகள் இல்லை என்பதே உண்மை.

வசனம் வழியே அதுவரை மிகப்பெரிய பிரச்சனைகளாகச் சொல்லப்படுபவை கூட, இறுதியில் ‘ரொம்ப சின்ன மேட்டர்மா’ என்று முடிந்துவிடுவதை மனம் ஏற்பதாக இல்லை. அது, அதுவரை நேர்த்தியாக அமைந்த சில காட்சிகளையும் கேள்விக்குறி ஆக்குகிறது.
ஒருவேளை ‘தமிழ் ஆடியன்ஸ் இதையெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க’ என்ற மனநிலையில் இருந்து விலகி, இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ரீமேக் ஆன ‘பெர்பெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ படத்தையொட்டி ’ரிங் ரிங்’ திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் இந்த எண்ணம் மட்டுப்பட்டிருக்குமோ, என்னவோ?!