ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அன்றே அந்த படம் ஆன்லைனில் வெளியாகி விடுகிறது.
அதன்பின் ஒரு சில வாரங்களிலேயே ஹெச்டி வெர்ஷனும் வெளி வந்து விடுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான லியோ படம்.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்தின் ஹெச்டி பிரிண்ட் ஆன்லைனில் வெளியாகிவிட்டது.
ஆன்லைன் பைரசிகளை தடுக்க பல கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சினிமாத்துறையில் ஒரு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தவும், தீவிரமாக கண்காணிக்கவும், 12 கண்காணிப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
இது குறித்து நேற்று (நவம்பர் 3) பேசிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தாங்கள் எடுத்த சினிமா திருட்டுத்தனமாக யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் பதிவாகியிருப்பது குறித்து தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்தவர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனையும், 3 லட்சம் முதல் படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
– கார்த்திக் ராஜா
சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு : மாரடைப்பு காரணமா?
வாகனங்களுக்கு அபராதம்: வேக கட்டுப்பாடு இன்று முதல் அமல்!