நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோ விரைவில் வெளியிடப்படும் என, அந்த உரிமையை வாங்கியிருக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இன்று (ஜூலை 21) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்துவரும் நயன்தாரா, சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளுக்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். 6 வருடங்களாக இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், அவர்களுடைய திருமணம், ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணத்தின்போது விருந்தினர்கள்கூட போட்டோ எடுக்கக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த திருமண சம்பந்தமான அனைத்து செலவுகளையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே பல கோடி ரூபாய் செலவழித்து, ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து நயன், விக்கியின் திருமணம் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது.
இந்த நிலையில், இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு, கொடுத்துவிட்டதாகவும் இதனை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அத்துடன், திருமண வீடியோக்களை வெளியிடும் ஒப்பந்தத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரத்து செய்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்தன. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூலை 21) நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண ரொமான்டிக் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு, அவர்களுடைய திருமண வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், நயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஜெ.பிரகாஷ்