எம்.எஸ்.பாஸ்கர். நம்ம ரிலேஷன்ல ஒருத்தர்னு சொல்ற மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர். அந்த எளிமை ரொம்ப ஈஸியா அவரோட நம்மை ‘கனெக்ட்’ பண்ணிடும். அதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு, அவர் வெளிப்படுத்துகிற பெர்பார்மன்ஸ் ரொம்பவே அசாதாரணமா இருக்கும். பவுன்சர் பால் போட்டாலும் சிக்சர் அடிக்குற ஆல்ரவுண்டர் மாதிரி, ரொம்ப அசால்டா, வெரைட்டியா பல கேரக்டர் ரோல்கள்ல வெளுத்து வாங்குறவர் எம்.எஸ்.பாஸ்கர்.
நாகப்பட்டினம் மாவட்டம் முத்துபேட்டை, இவரோட சொந்த ஊர். சின்ன வயசுலயே இவரோட குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்துடுச்சு. பள்ளி, கல்லூரி படிப்பு, வேலைன்னு வழக்கமான ரூட்டுல பயணிச்சாலும், எம்.எஸ்.பாஸ்கரோட கனவு, கவனம் எல்லாம் சினிமா மேலதான் இருந்துச்சு. காரணம், இவரோட சகோதரி ஹேமமாலினி தொண்ணூறுகள்ல ஒரு வெற்றிகரமான டப்பிங் ஆர்ட்டிஸ்டா இருந்தது தான்.
தொண்ணூறுகள்ல சேல்ஸ் ரெபரசண்டேட்டிவ்வா வேலை செஞ்சாலும், சினிமாவுல நடிக்கணும்கற ஆர்வம் இவர்கிட்ட ரொம்ப அதிகமா இருந்துச்சு. விசு இயக்குன திருமதி ஒரு வெகுமதி, கோவலன் அவன் காவலன், வேடிக்கை என் வாடிக்கை போன்ற படங்கள்ல சின்னச்சின்ன ரோல்ல நடிச்சார் எம்.எஸ்.பாஸ்கர். வெள்ளித்திரையில அறிமுகமானாலும் அந்த வருமானம் போதலை. அதனால, அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டா மாறினார்.
தெலுங்கு, மலையாளம், ஆங்கிலப் படங்களை தமிழ்ல ’டப்’ பண்றப்போ, முக்கியமான பாத்திரங்களுக்கு குரல் கொடுக்கறவரா மாறினார். அந்த வகையில தெலுங்கு நடிகர் பிரமானந்தம் நடிச்ச பல படங்களுக்கு இவர் இரவல் குரல் தந்திருக்கார். அது ரொம்ப பொருத்தமாவும் இருந்தது. அது மட்டுமில்லாம தி ஷஷாங் ரிடெம்ப்ஷன், பேட் பாய்ஸ், ஜுராசிக் பார்க் போன்ற புகழ் பெற்ற ஆங்கிலப் படங்களோட தமிழ் பதிப்புகள்லயும் ‘டப்பிங்’ குரல் தந்திருக்கார் எம்.எஸ்.பாஸ்கர்.
தொண்ணூறுகள்ல டப்பிங் துறையில வெற்றிகரமான கலைஞராக உலா வந்தார். ஆனாலும், ஆக்டிங் மீதான அவரோட கனவுகள் அப்படியே தான் இருந்துச்சு. அந்த காலகட்டத்துல வெளியான மாயாவி மாரீசன், கையளவு மனசு, பிரேமி, சீனியர் ஜூனியர், ஆனந்தபவன், வாழ்ந்து காட்டுகிறேன் போன்ற சீரியல்கள்ல நடிச்சார் எம்.எஸ்.பாஸ்கர். பேமிலி ஆடியன்ஸுக்கு அவர் முகம் அறிமுகமாக, அந்த சீரியல்கள் காரணமா அமைஞ்சது. ஆனால், ராதிகா தயாரிச்ச ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ மட்டுமே எம்.எஸ்.பாஸ்கர் எப்படிப்பட்ட நடிகர் தெரியுமான்னு சொல்ற மாதிரி ஒரு அடையாளத்தை தந்துச்சு.
அப்போ கிடைச்ச புகழ், அடுத்தடுத்து எம்.எஸ்.பாஸ்கரைப் பல உயரங்களை அடைய வச்சது. அந்த காலகட்டத்துல, சித்திக் இயக்கத்துல விஜயகாந்த் நடிச்ச ‘எங்கள் அண்ணா’ படத்துல வடிவேலுவோட அவர் தலைகாட்டினார். தொடக்கத்துல சின்னச்சின்னதா காமெடி ரோல்ல நடிச்சவர், அதுக்கப்புறம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனசுல நிரந்தரமா இடம்பிடிச்சார். அதுக்கு விதை போட்டவர் இயக்குனர் ராதாமோகன். அவரோட ‘அழகிய தீயே’ படம் தொடங்கி மொழி, பயணம், உப்பு கருவாடு, பிருந்தாவனம், காற்றின் மொழி, மலேசியா டூ அம்னீஷியா படங்கள்ல சிறப்பான ரோல்கள்ல இடம்பிடிச்சவர் எம்.எஸ்.பாஸ்கர்.
மொழி படத்துல அவர் நடிச்ச புரபொசர் பாத்திரம், தமிழ் ரசிகர்கள் காணாத ஒரு ஆச்சர்யம். அது, அவரோட கேரியர்ல ஒரு மைல்கல்லா அமைஞ்சது.. அதுக்குப்பிறகுதான் ‘இப்படியெல்லாம் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பாரா’ன்னு ரசிகர்கள் வியந்து பார்க்க ஆரம்பிச்சாங்க.சாது மிரண்டால், அஞ்சாதே, வெள்ளி திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தசாவதாரம், சரோஜா, திண்டுக்கல் சாரதின்னு 2008ல இவர் நடிச்ச ஒவ்வொரு படத்துலயும் இவரோட ரோல் வித்தியாசமானதா இருக்கும்.
காமெடி, வில்லத்தனம், குணசித்திரம் என்று எல்லா திசைகள்லயும் பயணிக்குற திறமை இவர்கிட்ட அதிகமா இருந்துச்சு. அதனாலேயே ஏ.எல்.விஜய், சிம்புதேவன், சித்திக், மோகன் ராஜா, பேரரசுன்னு பல இயக்குனர்களோட குட்புக்ல இவர் இடம்பிடிச்சார்.
சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அரிமா நம்பி, உத்தம வில்லன், டிமான்டி காலனி, பாபநாசம், மரகத நாணயம், துப்பாக்கி முனை, ஓ மை கடவுளே, டாணாக்காரன் உட்பட பல படங்கள்ல, நம் நினைவில் நிற்கிற பாத்திரங்கள்ல நடிச்சவர் எம்.எஸ்.பாஸ்கர்.அந்த வரிசையில உச்சம் தொட்ட படங்களா, ஸ்ரீகணேஷ் இயக்குன ‘எட்டு தோட்டாக்கள்’, ராம்குமார் பாலகிருஷ்ணனோட ‘பார்க்கிங்’ படங்களைச் சொல்லலாம்.
சினிமாவுல தனக்கான இடத்தை அடைஞ்ச பிறகும் கூட, தன்னைத் தேடி வர்ற டப்பிங் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
தொடக்க காலத்துல சினிமா, சீரியல்னு ரெண்டு குதிரையில வெற்றிகரமா சவாரி செஞ்சிருக்கார். மக்களுக்கு தன் முகம் தெரியறதுக்காக, கடின உழைப்பை அதுக்கான விலையா தந்திருக்கார். அந்த ஈடுபாட்டுக்கான பலனாக, சமகாலத்துல மிக முக்கியமான குணசித்திர நடிகரா/ கேரக்டர் ஆர்ட்டிஸ்டா அவரை ரசிகர்கள் கொண்டாட வச்சிருக்கு.
இளம் வயசுல ஹீரோவா, வில்லனா நடிக்குற முகவெட்டு இருந்தாலும், ரொம்பவே தாமதமா ஐம்பதுகள்ல நடிகனாகத் திரையில் முகம் காட்டியவர் எம்.எஸ்.பாஸ்கர். அந்த பாத்திரங்கள்ல அவர் பெர்பார்ம் பண்ண விதத்துக்கு ஈடிணையே கிடையாது.
’வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்யா’ங்கற வசனம் எம்.எஸ்.பாஸ்கரை விட வேற யாருக்குப் பொருத்தமா இருக்கும்?!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து : விரிவான விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவு!