உயிரை விடும் அளவிற்கு சினிமாவிற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு பொங்கல் விடுமுறையை குறிவைத்து நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று (ஜனவரி 12) வெளியாகின.
இரண்டு படங்களும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
இதற்கிடையே நேற்று நள்ளிரவில் ’துணிவு’ படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தியேட்டருக்கு வந்த 19 வயதான பரத்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு, தமிழகம் பெயர் சர்ச்சை தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு“வந்திருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக பேசலாமே என்றவர், எனக்கு தமிழ்நாடு என்று அழைப்பதிலேயே விருப்பம்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் தான் இயக்கி வரும் தளபதி67 தொடர்பான அப்டேட்கள் இன்னும் 10 நாட்களில் அடுத்தடுத்து வெளிவரும் என்று குறிப்பிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநர் பொங்கல் விழா : திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு