தமிழ் சினிமாவில் வசூல் சூப்பர் ஸ்டார் என்கிற விவாதமும், துணிவு – வாரிசு படங்களில் வசூல் யாருக்கு அதிகம், வாரிசை வீழ்த்திய துணிவு, துணிவை துரத்தியடித்த வாரிசு என்கிற கோஷமும், பதிவுகளும் அஜித்குமார், விஜய் ரசிகர்களால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்தப்போக்கை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் வேண்டிய அஜித்குமார், விஜய் இருவரும் இப்போது மட்டுமல்ல எல்லா காலங்களிலும் மெளனசாமியார்களாக இருந்து வருகின்றனர்.
தங்களது ரசிகர்கள் மோதிக்கொள்வதை தங்கள் வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகவும், சம்பளத்தை உயர்த்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதே சினிமா விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
கதாநாயக பிம்பம், வெற்றிதோல்வி என்பது நிரந்தரமானதும் இல்லை என்பதை 1966ம் ஆண்டே தெளிந்த பார்வையுடன் பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ராமச்சந்திரன். இன்று அவரது 107 வது பிறந்தநாள்.
தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பத்தில் கோடிகளை குவித்து கொண்டிருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். இதற்கான ராஜபாட்டைக்கு அடித்தளமிட்டு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவை சிவாஜி கணேசனுடன் இணைந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்தான் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்காக தவம் கிடந்த தயாரிப்பாளர்கள்
நாயகனாக நடிக்கும் படத்தின் கதை, பாடல்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் எல்லாவற்றிலும் தன் நேரடி கவனத்தை செலுத்தியவர்.
அவரது விருப்பங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் முரண்டுபிடித்தது இல்லை, கால்ஷீட் கிடைத்தால் போதும் என தயாரிப்பாளர்கள் தவம் இருந்தபோதும் திரைப்பட தயாரிப்பாளர்களை முதலாளி என அழைத்து கெளரவப்படுத்தியவர்.
துவண்டதும் இல்லை துல்லியதும் இல்லை
படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் அங்கு தயாரிப்பாளர்கள் வருகிறபோது எழுந்துவந்து வரவேற்கும் தன்னடக்கம் கொண்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
நாடே சினிமா, அரசியல் என இரண்டிலும் அவருக்கு பேராதரவு வழங்கி கொண்டாடியபோதும் தன்னை சம்பளம் வாங்கி நடிக்கும் கலைஞன் என பொதுவெளியில் கூறுவதை கௌரவமாக கருதியவர்.
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.
1968-ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த சினிமா பத்திரிகையான ‘பொம்மை’ இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை மறைந்த தமிழக முதல்வரும், அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து அதிகபடங்களில் நடித்து வந்த ஜெயலலிதாவை பேட்டி எடுக்கவைத்து வெளியிட்டனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது,
‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’என்கிற கேள்விக்கு……
எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி அவர்கள் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.
‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரையரங்கில் வெளியானது.
படத்தைப் பார்க்க கே.பி.கேசவனும் எம்.ஜி.ஆரும் சென்றுள்ளனர் அந்த நிகழ்வுகளை ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலாக எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார்.
“என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது.
அத்தியேட்டரில், “இரு சகோதரர்கள்’ என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, “இந்திய மேடைப் புலி’ என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர்.
அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர்.
அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் ஒருவராக நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக்கிறோமே.. என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர்.
நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது. நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன்.
அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, “மர்மயோகி’ படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.
இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், மர்மயோகி’ படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, கரிகாலன்’ என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர்.
மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்’ என கவர்னரால் புகழப்பெற்ற, “இரு சகோதரர்கள் வெளியிடப்பட்ட ஆண்டில், சிறந்த நடிகர்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது… நம்புவது? கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான்.
இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு.
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது.
மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்
தொகுப்பு : இராமானுஜம்
காணும் பொங்கல்: வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறப்பு!
சன்னி லியோன் உதட்டில் காயம்: பதறி வரும் ரசிகர்கள்!